வளர்ச்சி என்ற மோசடியான கவர்ச்சியைக் காட்டி, வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக மோடி அரசில் வளர்ச்சியே இல்லையென்பதை பல்துறை வல்லுநர்கள் ஆதாரத்தோடு உறுதி செய்துள்ளனர். இதில் இன்னும் கேவலம் என்னவென்றால் பல துறைகளிலும் வளர்ச்சி குறைந்து பாழ்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நுழைத்து அத்துறைகளின் செயல்பாட்டினை அலைக்கழிக்கும் அவலம்தான் நாளும் அரங்கேறுகிறது. மக்களுக்குச் சேவையாற்றும் அத்தியாவசியத் துறைகளையும்கூட கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு காணிக்கையாக்கிட மோடி அரசு தயங்குவதே இல்லை. அத்தியாவசிய சேவைத் துறைகளில் ஒன்று ரயில்வே துறை. சரக்குப் போக்குவரத்திலும், பயணிகள் போக்குவரத்திலும் பெரும் பங்கு வகிப்பது ரயில்வே துறையாகும்.
ஆனால், இத்துறையில் நடைபெறும் சீர்கேடுகளுக்கும், இழப்புகளுக்கும் அளவே இல்லை. ரயில் தண்டவாளப் பராமரிப்புக்கும், பயணிகள் பாதுகாப்புக்கும் ஒதுக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்ட காரணத்தினால் போதுமான பாதுகாப்புச் சாதனங்கள், பராமரிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் விபத்துகள் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.
இந்திய ரயில்வே ஒரு நாளைக்கு (12,000) பன்னிரெண்டாயிரம் பயணிகள் ரயிலையும், ஏழாயிரம் (7,000) சரக்குகள் ரயிலையும் இயக்குகிறது. ஒரு நாளைக்கு இரண்டு கோடியே முப்பது லட்சம் (2,30,00000) பேர் பயணிக்கின்றனர். இருபத்தோரு இலட்சம் டன் (21,00000) சரக்குகளைக் கையாள்கிறது. இதில் (14,00,000) பதினான்கு இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு மாநில அரசின் மொத்தப் பணியாளர்களைவிட அதிகமான பேர் இந்த ஒரு துறையில் பணிபுரிகின்றனர்.
இதுவரை ரயில்வே துறைக்கென தனி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து ஒப்புதல் பெற்ற நிலையை மோடி அரசு கைவிட்டுவிட்டு இதையும் பொது பட்ஜெட்டிலேயே சேர்த்துவிட்டது. எனவே, இதற்கான முக்கியத்துவம் நீங்க, முனைப்பான செயல்பாடுகளும் முடங்கிவருகின்றன. பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. (60%) அறுபது சதவீத வழித்தடங்களில் தண்டவாளங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளின் தாங்கு திறனைவிட அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், விபத்துகள் அதிகமாக ஏற்பட்டு பயணிகள் பலியாவது அன்றாடம் நடக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 700க்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 400க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட ரயில்கள் தடம் புரண்ட நிகழ்வுகள் அதிர்ச்சியை அளித்தன. இவைகளுக்குப் பொறுப்பேற்று இரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு பதவி விலகிய நிலையில் பியூஷ்கோயல் அவர்கள் புதிய இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றார். மும்பையில் 100 ரயில்சேவை நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக மும்பை சென்ற அன்றே மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய மேம்பாலத்தில் வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்த அவலச் செய்திதான் அவரை வரவேற்றுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் மும்பை ரயில் நிலையங்களில் பயணிகள் மேம்பாலப் பராமரிப்பு பணிகளில் மட்டுமல்லாது தேவைக்கேற்ப மேம்பாலங்கள் விரிவு செய்யப்படாமையே இந்த விபத்துக்குக் காரணமாகும். இந்தப் பாலம் விரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை அக்கறை உள்ளவர்களால் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டு திட்டமும் தீட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது.
அதற்கான காரணமாக முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு விளக்கமளிக்கையில் அதற்கு 8 கோடி ரூபாய் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுவரை ஏன் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட வில்லை? இதற்குக் காரணம்? பிஜேபி அரசுதானே?
மேலும், இந்த ரயில்வே துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்த இந்திய (CAG – Comptroller and Auditor General) அறிக்கை வெளியிடும் தகவல்கள் இத்துறையின் செயலற்ற தன்மையையும் பயணிகளுக்கான சுகாதாரத்தில் காட்டப்படும் அலட்சியத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
இந்தக் குழு 14 ரயில்வே டெப்போக்களை ஆய்வு செய்ததில் 9 டெப்போக்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் 2012_13 முதல் 2015 வரை சலவை செய்யப்படவே இல்லை.
5 ரயில்வே மண்டலங்களில் 7 டெப்போக்களைத் தவிர்த்து மற்ற டெப்போக்களில் இரண்டு அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறைதான் துணிகள் சலவை செய்யப்படுகின்றன.
லோகமான்யதிலக் டெர்மினஸ் (மும்பை), சீல்டா (கொல்கத்தா), குவாலியர், கவுகாத்தி, டாடா நகர் (ஜார்கண்ட்) ஆகிய டெப்போக்கள் சலவை செய்யப்படாத துணிகளை வழக்கமாக வழங்கி வருவதில் முன்னணியில் உள்ளன. இதுதான் நமது பிரதமரின் ‘ஸ்வாச் பாரத்’ திட்டம் என்று கொள்ளலாமா? வெட்கமில்லையே!
ரயில்வே துறையே இவ்வளவு கேவலமாக நிர்வகிக்கப்படும்போது வாய்ச் சவடால் வளர்ச்சி நாயகன் மோடி அவர்கள் கடந்த 17ஆம் (செட்டம்பர்) தேதி மும்பைக்கு 88,000 கோடி செலவுத் திட்டத்தில் ‘புல்லட்’ ரயிலுக்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பதும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனைத் தலைவர் உத்தவ் தாக்ரே அவர்கள் இந்தத் திட்டம் (‘புல்லட்’ ரயில்) மும்பையை நெருங்கவிட மாட்டேன் என்று சாவல் விட்டுள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.
இந்தத் திட்டத்தையே பணக்காரர்களுக்கான திட்டம் என்று விமர்சிக்கப்படுகின்ற நிலையில் மேலும் மேலும் கார்பொரேட்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இத்தனைச் சீரழிவுகள் போதாதென்று, ரயில்வே நிலையங்களைப் பராமரிக்கும் வேலையை தனியாருக்குத் தாரை வார்த்திடும் செயல்கள் முனைப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், தற்போதுள்ள அரசுக்குச் சொந்தமான வழித்தடங்களிலேயே தற்போதுள்ள தண்டவாளங்களிலேயே தனியாரும் பயணிகள் ரயிலை இயக்கிட அனுமதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக புதிய அமைச்சர் கூறியுள்ளார். அப்படி அனுமதிப்பதால் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு பயணிகளுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று விநோத விளக்கமும் விளம்பியிருக்கிறார்கள்.
இப்படிச் செய்வது யாருக்கு லாபம்? அரசு செய்த கோடிக்கணக்கான முதலீட்டில் அமைக்கப்பட்ட இருப்புப்பாதைகள், இரயில் நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் பயணிகள் இரயிலை இயக்கி கொள்ளை லாபம் ஈட்ட இந்த அரசு செய்யும் மாபெரும் மக்கள் விரோத செயல் அல்லவா?
– கெ.நா.சாமி