அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?

அக்டோபர் 16-31

மிதிக்கப்பட்டு இறந்த பிள்ளை மீண்டும் உயிர்பெறுமா?

பாண்டுரங்கனின் மீது தீரா அன்பு கொண்ட கோராகும்பரின் உதடுகள், சதா ‘பாண்டுரங்கா பண்டரீநாதா’ என்றே பஜனை செய்து கொண்டிருக்கும். பானை செய்ய களிமண் மிதிக்கும்போதுகூட தன்னை மறந்து ஸ்ரீ பாண்டுரங்கனின் பஜனைப் பாடல்களைப் பாடி ஆடியபடியே மிதிப்பாராம். அவரின் மனைவிதான் மண் இளகியதை கவனித்து அவரை நகர்த்துவாராம்.

ஒரு நாள், கோராகும்பர் மண்பானை செய்ய களிமண் மிதித்துக் கொண்டிருக்க, களிமண்ணில் விட நீர் கொண்டு வரக் கிளம்பும் மனைவி, தங்களின் பிஞ்சுக் குழந்தையை கணவர் அருகில் விட்டுச் செல்கிறார். ஸ்ரீ பாண்டுரங்கனின் பக்தியில் திளைத்திருந்த கோராகும்பர், பகவானின் திருநாமத்தை உச்சரித்தபடியே ஆடியபடி களிமண்ணை மிதித்துக் கொண்டிருக்கிறார். பரவசநிலையில் இருந்த அவருக்கு, தனது குழந்தை தவழ்ந்து களிமண் அருகில் வந்ததும் தெரியவில்லை. குழந்தை களிமண்ணில் விழுந்ததும் தெரியவில்லை.

நீர் கொண்டு வந்த மனைவி, பானையை இறக்கி வைத்துவிட்டு குழந்தையைத் தேட, குழந்தையைக் காணவில்லை. கணவரின் காலடி மண்ணில் புதையுண்டிருந்த குழந்தையின் உடையைப் பார்த்தவுடன்தான் நடந்த விபரீதம் புரிந்ததாம் மனைவிக்கு. ஓவென்று கூச்சலிட்டபடி மனைவி அழ ஆரம்பித்தவுடன் தன்நிலைக்கு வந்த கோராகும்பருக்கு அப்போதுதான் தனது குழந்தையை தான் மிதித்துக் கொன்றது தெரிந்திருக்கிறது. ‘அரே பாண்டுரங்கா, இது என்ன கொடுமை?’ என்று அவர் அலறியவுடன், பக்தனின் முன் தோன்றிய பாண்டுரங்கன், களிமண்ணை பார்த்து, ‘குழந்தாய் வெளியே வா’ என்றாராம். தவழ்ந்து வெளியே வந்ததாம். குழந்தையை உயிர்ப்பித்த ஸ்ரீ பாண்டுரங்கனின் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினாராம் தம்பதியினர்.

களிமண்ணோடு சேர்த்து மிதிக்கப்பட்டு இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் வருமா? அறிவியல்படி இது சரியா? மெய்மறந்த பக்தியில் தன் குழந்தையை மிதித்துக் கொன்றவன் குற்றச் செயலுக்குப் பெருமை சேர்ப்பது குற்றமல்லவா?

மனிதன் சாபத்தால் மீனாவானா? மீண்டும் மனிதனாவானா?

முனிவர்கள் ஒரு சமயம் மீன்களைப் பிடித்து, துன்புறுத்தியது கண்டு பராசரன் அவர்களை மீனாகச் சபிக்க, அவர்கள் சரவணப் பொய்கையில் மீனாகி இருந்து வந்தனர். உமாதேவியார் ஆறுமுகனை ஏந்திப் பாலூட்டுகையில் சிந்திய பாலினால் பழைய வடிவம் பெற்றனர் என்கிறது இந்துமதம். சாபம் என்றால் கோபப்பட்டுச் சொல்லும் வார்த்தைகள். அந்த வார்த்தைகளுக்கு சக்தி உண்டா? சாபத்தால் முனிவர்கள் மீனாக மாற முடியுமா? பால் பட்டால் மீண்டும் மனிதனாக ஆக முடியுமா? அறிவியல்படி எந்த ஒன்றும் இன்னொன்றாக மாறமுடியாதே! மனிதன் எப்படி மீனாக முடியும்? மூடக் கற்பனைகளையெல்லாம் அறிவியல் என்று கூறுவது முட்டாள் தனமல்லவா?

வியர்வையில் பிள்ளைகள் பிறக்குமா?

மாயையான சுரசை கச்யபர் குடிலுக்கு அருகில் தங்கி அவரை வசீகரித்தாள். கச்யபர் தன் தாபத்தைத் தெரிவிக்க, மன்மதன் போன்ற அழகனாக முனிவர் உருமாறிட அவர்கள் கூடலின் பயனால் ‘சூரபதுமன்’ தோன்றினான். மற்றும் அவ்விருவர் வியர்வைகளிலிருந்து ஆயிரக்கணக்கான அரக்கர் படையினர் தோன்றினர். இரண்டாம் ஜாமத்தில் இருவரும் ஆண், பெண் சிங்கமாகி முயங்கிட சிங்க முகாசுரன் தோன்றினான். அவனுடன் தம்பதியர் வியர்வையிலிருந்து நாற்பதினாயிரம் சிங்க முகாசுரர்கள் தோன்றினர்.

இருவரும் மூன்றாம் ஜாமத்தில் யானை வடிவில் இணைந்திட யானை முகமுடைய தாரகாசுரனும், வியர்வைத் துளிகளிலிருந்து யானை முகமுடைய நாற்பதினாயிரம் அரக்கர் படை வீரர்களும் தோன்றினர்.

அடுத்த ஜாமத்தில் குறும்பாடு வடிவில் இருவரும் கலந்திட ஆட்டு உருவம் கொண்ட அஜாமுகி என்ற பெண் பிறந்தாள். அதேசமயம் வியர்வைத் துளிகளிலிருந்து ஆட்டு உருவம் கொண்ட முப்பதினாயிரம் படை வீரர்கள் தோன்றினர்.

ஆணும் பெண்ணும் கூடிக் கருவுற்றால் 10 மாதம் கழித்து குழந்தை பிறக்கும். ஆனால், உடலுறவு கொண்டவுடனே பிள்ளை பிறக்கும் என்று இந்துமதம் கூறுவது அறிவியலா? அதைவிட வேடிக்கை, உடலுறவு கொள்ளும் போது வரும் வியர்வையில் ஆயிரக்கணக் கானவர்கள் பிறந்தார்கள் என்று இந்துமதம் கூறுகிறது. வியர்வையில் பிள்ளைகள் பிறக்குமா? இப்படிப்பட்ட இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

தீயில் வெந்து இறந்தவன் தண்ணீர் பட்டால் மீண்டும் உயிர்பெற்று பழைய உருவில் வருவானா?
பரமசிவனை நோக்கித் தவமியற்றப் புறப்பட்ட சூரபதுமன், சிங்கமுகாசுரன், தாரகாசூரன் ஆகியோரை அசுரகுரு சுக்கிராச்சாரியார் சந்தித்து ஆசிர்வதித்து அனுப்பினார்.

தாயார் மாயை, யாகத்துக்குத் தேவையானவற்றைச் சேகரித்து அளித்தாள். சூரபதுமன் யாகத்தைத் தொடங்கினான். பல ஆண்டுகள் யாகம் செய்தும் பரமேசுவரன் தோன்றாததால், சூரபதுமன் தன் உடல் சதையை வெட்டி ஓம குண்டத்தில் விழுந்து உயிர் பலியளித்தான்-. அவனைத் தொடர்ந்து சிங்க முகாசூரனும் விழுந்து உயிர் பலி தந்திட முயன்றபோது ஆங்கொரு கிழவர் வடிவில் ஈசன் தோன்றி விவரம் கேட்டறிந்தார்.

சிவன் தன் சடையை அவிழ்த்திட, கங்கை பெருக்கெடுத்து ஓடி, ஓமகுண்டத்தில் பாய்ந்திட சூரபதுமன் உயிர் பெற்று எழுந்து வந்திட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர் என்கிறது இந்துமதம். நெருப்பில் வெந்து சாம்பலானவன், தண்ணீர் பட்டதும் மீண்டும் பழைய உருவத்துடன் உயிர் பெற்றுவந்தான் என்று, அதிமுட்டாள்தனமான கருத்தைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

நெருப்பில் வெந்து சாம்பலானவன் மீண்டும் உயிர் பெற முடியுமா? முடியாது என்பதுதானே அறிவியல்?
காக்கை கவிழ்த்துவிட்ட கமண்டல நீர் காவிரியாறாக ஆனதா?

“அகத்தியர் மகாதேவர் அருளியவாறு கமண்டலத்தில் புனிதநீரை எடுத்துக் கொண்டு புறப்பட, வழியில் விந்தியம் வானளாவி நின்று குறுக்கிட, அதன் கருவத்தை அடக்கிட அதுவும் தரை மட்டமாகியது.

அதன் பின் வில்வலன், வாதாபி இருவரையும் அழித்துப் புறப்பட்ட அகத்தியர் சிவ பூஜையில் ஈடுபட்டார். அருகில் கமண்டலத்தில் புனித நீர் இருந்தது. இந்திரன் வேண்டுகோளின்படி விநாயகர் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்துவிட அது காவிரியாய்ப் பெருக்கெடுத்து ஓடியது’’ என்கிறது இந்துமதம். மலையில் மிகுந்துவரும் தண்ணீர் அருவியாய் நிலத்தில் பாய்ந்துதான் ஆறாக வரும். ஆனால், கமண்டலத்தில் இருந்த தண்ணீர் கவிழ்க்கப் பட்டதால் அது காவிரியாகப் பாய்ந்தது என்று இந்துமதம் கூறுகிறது! இப்படிப்பட்ட இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

கமண்டல நீரைக் காக்கை தள்ளியதால் பெருக்கெடுத்து ஓடி காவிரி என்று பெயர் வந்தது. காக்கையால் விரிந்து ஓடியதால் காவிரி என்று பெயர்க்காரணம்  பொருத்திக் காட்டுவது பித்தலாட்டம் அல்லவா?  “கா’’ என்றால் காக்கை என்று பொருள் இல்லையே! காவிரி என்றால் சோலைகள் இருபுறமும் விரிந்த பகுதியில் ஓடும் ஆறு என்பதால் காவிரி என்பதுதானே உண்மை. “கா’’ என்றால் சோலை. பூங்கா என்றால் பூஞ்சோலை என்று பொருள்.

வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டிய, நினைத்தபடியெல்லாம் கற்பனையாய் எழுதிய இந்துமதப் புராணக் கருத்துகளை அறிவியலுக்கு அடிப்படை என்பதைப்போல ஒரு பித்தலாட்டப் பிரச்சாரம் வேறு இருக்க முடியுமா?

(சொடுக்குவோம்)
– சிகரம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *