“இந்தியாவில் ஜாதிகளின் தோற்றம், வளர்ச்சி, அதன் இயங்குமுறை’’ என்ற தலைப்பிலான அவரது ஆராய்ச்சி நூல் 1916இல் வெளிவந்தது. அப்போதிருந்த அன்னிய ஆங்கிலேய ஆட்சியில் அந்நூல் தடை செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட முதல் நூல் இதுவே.
தீண்டாமையைக் கடைப்பிடித்திட பார்ப்பனர்களே காரணி என்று பட்டவர்த்தனமாக அம்பேத்கர் எழுதியதுதான் இந்நூல் தடை செய்யப்பட்டதற்குக் காரணமாகும்.
இன்றைக்கும்கூடப் பார்ப்பனர்கள் ஜாதி உணர்வில் வெறிகொண்டுள்ளனர்.
ஆரியப் பார்ப்பனர்களுக்கு “அம்பு’’ ஆகப் பயன்படும் இளைஞர்கள் சிலர் அம்பேத்கரின் எழுத்துகளை அங்கொன்றும் இங்கொன்று மாகப் பிய்த்தெடுத்து அம்பேத்கரை இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்ய முயன்றவராகக் காட்ட முட்டிப் பார்க்கின்றனர்.
“பிறக்கும்போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமல்ல; ஆனால், நான் இறக்கும்போது ஒருக்காலும் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்’’ என்று 1935இல் பிரகடனப்படுத்திய அம்பேத்கர் 1956ஆம் ஆண்டில்தான் இந்து மதத்தைவிட்டு வெளியேறினார் என்பதைக் கூறி, இடைப்பட்ட 21 ஆண்டுக்காலத்தில் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றார் என்கிற பாணியில் சப்பைக் கட்டு கட்டி எழுதி வருகிறார்கள்.
புத்த நெறி சிறப்பானது
புத்தநெறி இந்து மதத்தின் கிளையா? இந்து மதத்தில் உள்ள கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம், முற்பிறவி, முன்வினையின் கர்மபலன் இத்தியாதி இத்தியாதி மூடத்தனங்கள் பவுத்தத்தில் உண்டா? இந்து மதத்தின் வேதங்கள், பேதங்கள் பவுத்தத்தில் உண்டா? பிறப்பிலேயே மனிதன் பேதாபேதங்களோடு பிறப்பிக்கப்படுகிறான் என்கிற உலகமகா முட்டாள் கொள்கை இந்து மதத்தில் இருப்பதைப் போல பவுத்தத்தில் உண்டா? ஏழேழு பிறவிகள் எடுத்தும் கடவுளின் நாமத்தைப் பாடியும் கடவுளின் காலடியில் சரணடைந்தும் முக்தி (இனிப் பிறவாமை) பெறலாம் என்கிற மாதிரி வழிமுறைகள் இந்து மதத்தில் இருப்பதைப் போல பவுத்தத்தில் இருக்கிறதா?
தத்துவங்களையும் தத்துவ நூல்களையும் அடிப்படையான வேதங்களையும் நிராகரித்து விட்டதுதானே, பவுத்தம்? அப்படியிருக்கையில் பவுத்தத்தை இந்துமதத்தின் கிளை என்று எப்படிக் கூறலாம்? இந்நிலையில்இப்படிக் கூறுபவர்களை முட்டாள்களின் சொர்க்கத்தில் (Fools’ Paradise ) என்ற சொல்லடை உண்டு) இருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும்!
புத்தர் இந்துமத விஷ்ணு எனும் கடவுளின் அவதாரம் என்ற பித்தலாட்டத்தைச் செய்து வந்தனர். புத்தரின் 2,500ஆம் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சென்னையில் கலந்து கொண்டு பேசிய ராசகோபாலாச்சாரியார் விஷ்ணுவின் அவதாரமே புத்தர் என்று பேசி பவுத்தத்தின் சீரிய கொள்கைகளுக்கும் பெருமைகளுக்கும் இந்துமதம் சொந்தம் கொண்டாட முயன்றார். அவரை அடுத்துப் பேசிய தந்தை பெரியார் ராஜாஜியின் பொய்ப் பேச்சை மறத்து ஆதாரங்களோடு விளக்கினார். அதன்பிறகு, அவதாரம் எனும் புரட்டைக் கைவிட்டு விட்டார்கள். பிஜேபி ஆட்சியில் (முதலில்) இருந்தபோது சாரநாத்தில் நடந்த பவுத்த இந்துச் சாமியார்கள் கூட்டுக் கூட்டத்தில் அவதாரக் கதை தீவிரமாக விவாதிக்கப்பட்டது புத்தரை இந்துமதச் சாக்கடைக்குள் முக்குவிப்பதை ஜப்பானிய புத்தபிக்குகள் எதிர்த்தனர். அதன் விளைவாக அவரை அவதாரம் என்று இனிமேல் குறிப்பிட மாட்டோம் என்று இந்து மதத்தவரின் சார்பில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரசரசுவதி கையொப்பம் இட்டார். பவுத்தம் தரப்பில் சாரநாத் பிக்குகள் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில்தான் பவுத்தர்களை இந்துக்கள் என்றாக்கப் பார்த்தனர் பாரதீய ஜனதா ஆட்சியினர். கடும் எதிர்ப்பின் காரணமாக பி.ஜே.பி. பின்வாங்கிவிட்டது. இந்தக் கூட்டத்தில் எல்.கே.அத்வானி கலந்து கொண்டது மோசம்! இப்போது, வெட்கமில்லாமல் கிளைமதம் என்கிறது.
பவுத்தம் மதமா?
பவுத்தம் மதமல்ல எனத் தெளிவுபடுத்தினார் அம்பேத்கர். ‘புத்தரும் அவரது தம்மமும்’ ((Buddha and his Dhamma) எனும் நூலின் நான்காம் பகுதியில் ‘மதமும் தம்மமும்’ (Religion and Dhamma) என்று எழுதும்போது மதம் எது? புத்தரின் ‘தம்மம்’ எது? என விளக்கியிருக்கிறார்.
“மதம் என்றால் கடவுள், ஆன்மா, பிராத்தனை, வழிபாடு, சடங்குகள், காணிக்கைகள் என்று பலவும் வேண்டும். இவை எதுவும் இல்லாத நிலையில், பவுத்தம் மதமல்ல என்று அண்ணல் விளக்கியிருப்பார். பவுத்தத்தில் அறநெறிதான் ஆணிவேர். மதத்தில் அநநெறியை தொடர்வண்டியின் கடைசிப் பெட்டியாகத்தான் வைத்திருக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டு மானாலும் கழற்றிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், பவுத்தத்தில் அறநெறியே (ஒழுக்கமே) பிரதானமானது. ஒழுக்கம்தான் பவுத்தம். எனவே, மதம் வேறு, புத்த தம்மம் வேறு’’ என்றார் அம்பேத்கர். அதனால்தான் அதனைத் தழுவினார்.
பின்னாளில் சிலர், பவுத்தத்தை மதமாக்கி விட்டனர். புத்தரைக் கடவுளாக்கிவிட்டனர். மகாயானம், ஹீனயானம், வஜ்ராயானம் எனப் பிரித்துவிட்டனர். ஆனால், அம்பேத்கர் அவர்கள் இந்த மூன்றில் எதையும் ஏற்காமல், புதுவழியைப் புகுத்தி _ தொடக்கத்தில் கவுதம புத்தர் கூறிய வழியை மீண்டும் கொண்டுவந்து பவுத்த நெறியைத் தழுவினார்.
முதலில் இவர்கள் சொல்கிற இந்து மதத்திற்குப் பெயர் இதுவா? இவர்கள் வைத்த பெயரா இந்து என்பது? கி.பி.1800களில் சர்.வில்லியம் ஜோன்ஸ் வைத்தது அல்லவா? இந்நாட்டு மக்களுடைய மதமாக அன்றைக்கு ஷண்மதம்தானே இருந்தது? சைவம், வைணவம், கவுமாரம், காணபத்யம், சாக்தம், ஸ்ரேவம் என ஆறு கொண்டதுதான் ஷண்மதம்! ஆறையும் சேர்த்து வெள்ளைக்காரன் வைத்த பெயர்தானே இந்துமதம்! காஞ்சிபுரத்து சங்கராச்சாரி தம் நூலில் (தெய்வத்தின் குரல்) இதை எழுதியிருக்கிறாரே! இந்து என்ற பெயரே வெள்ளைக்காரனுக்கு முன்பே அரேபியர்களால் வைக்கப்பட்டதுதானே! இடத்தைக் குறிக்கப் பயன்பட்ட சொல், மக்களுக்காக ஆகி, அவர்களின் மதத்துக்காகவும் ஆக்கப்பட்டு இரு நூற்றுச்சொச்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன! இந்தப் பெயரேகூட, இந்தியாவின் எந்த மொழியிலும் கிடையாதே! பாரசீக மொழிச் சொல்தானே. இந்திய மக்களின் மதத்திற்கான பெயர்! அந்த மதம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்படும்போது, அந்த மதத்தின் பெயர்தானே குறிக்கப்பட வேண்டும்? அதன்படி இந்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தார் அம்பேத்கர்! அது எப்படி தவறாகும்? அதனாலேயே, அவர் இந்து மதத்தவரா?
இப்படித்தான் அரசமைப்புச் சட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதித் தர அமைக்கப்பட்ட வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர். இந்தக் குழுவில் அவரையும் சேர்த்து ஆறு பேர் உறுப்பினர்கள். இவர்களில் நான்கு பேர் பார்ப்பனர்கள் என்றால், இதன் சித்தாந்தங்களுக்குப் பொறுப்பேற்பவர்கள் பார்ப்பனர்கள்தானே! 1950களில் பேசும்போது, “நான் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை; இழுத்துக் கொண்டு ஓடினேன்’’ என்று குறிப்பிட்டதன் பொருள் இதுதானே! என் விரல்களைப் பிடித்து, “அவர்களுக்கு’’ வேண்டியவற்றை எழுதிக்கொண்டார்கள் என்பதுதானே பொருள்? ராஜேந்திரபிரசாத் என்பவர் அரசியல் நிர்ணய சபையின் தலைவர். இவர் பிற்போக்குவாதி. பட்டாபி சீதாராமய்யா, புருஷோத்தம்தாஸ் தாண்டன், மதன்மோகன் மாளவியா போன்ற கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் இந்த அவையின் சக்தி வாய்ந்த உறுப்பினர்கள். பிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கொண்ட காங்கிரசுக் கட்சியின் உறுப்பினர்களே, அவையில் பெரும்பான்மையோர். இவர்கள் மனது வைத்தால்தான் எதுவும் முடிவாகும். நிறைவேறும். அந்த வகையில்தான், அம்பேத்கர் வரைவுச் சட்டத்தை ஆறுமுறை எழுதித் தரவேண்டியதாயிற்று. காங்கிரசுக் கட்சியினர் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்ததால், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆறுமுறை மாற்றித் திருத்தி எழுத வேண்டியதாயிற்று என்பதை வரைவுக் குழு உறுப்பினர் சையத் சாதுல்லா, பேசினார்.
கடைசியாக, ஏழாம் முறையாக எழுதித் தரப்பட்டது இந்திய அரசமைப்புச் சட்டம்! இதனை முழுவதும் எழுதவேண்டிய பொறுப்பை அம்பேத்கரே சுமந்தார். “I was a hack. What I was asked to do. I did much against my will” “நான் வாடகைக் குதிரை. என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ, அதனை என் மன விருப்பத்திற்கு எதிராகச் செய்து முடித்தேன்’’ என்று மனம் நொந்தார் டாக்டர் அம்பேத்கர். எனவே, இந்துக்கள் என்ற வரையறையில் பவுத்தர்கள், சீக்கியர், ஜைனர் என்போரையும் உள்ளடக்கியது அவரா?