உங்களுக்குத் தெரியுமா?

அக்டோபர் 16-31 உங்களுக்குத் தெரியுமா?

                                                                       ஆர்.கே.எஸ்.
                                          இந்தியாவின்  முதல் நிதியமைச்சர் சுயமரியாதை வீரர்
                                                              பிறந்த நாள்: 17.10.1892

சுதந்திர   இந்தியாவின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்த நாள் இன்று (1892). சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாநில சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர். இவர் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர். அம்மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காந்தியாரோடு ஒருமுறை இவர் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஆர்.கே.எஸ். அவர்களிடம் தெறித்த தனித்தன்மையான சீர்திருத்த கருத்துகளைச் செவியுற்ற காந்தியார் இந்த விஷயத்தில் தங்களுக்குக் குருநாதர் யாராவது உண்டா? என்ற கேள்வியைக் கேட்டபோது, ஆம், எனது குருநாதர் ஈரோடு ஈ.வெ. ராமசாமியார்தான் என்று கூறியுள்ளார். அவரைச் சந்திக்கவேண்டும் என்று காந்தியார் விரும்பினார். 1927 இல் பெரியார் காந்தியார் சந்திப்பு பெங்களூரில் நடந்தது அதன் தொடர்ச்சிதான்.

விடுதலை ஏடு பொருளாதார நெருக்கடிக்கு ஆளான போதெல்லாம் தொடர்ந்து அதன் வாழ்வுக்கு நிதி உதவி செய்து வந்தவர் ஆர்.கே.எஸ். ஆவார்கள். (தமிழர்கள் நன்றி உணர்வோடு நினைவு கூர்வார்களாக!)
1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியையும் ஈட்டினார். சட்டமன்றத்தின் 127 உறுப்பினர்களுள் மிகவும் இளையோராக இருந்தவர் சண்முகம்தான். அப்போது நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார். அதன்பின் மத்திய (டெல்லி) சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் (1923). மத்திய சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள், தந்த புள்ளி விவரங்கள் அகில இந்திய அளவில் அகல விரித்து அவரைப் பார்க்கும்படிச் செய்தன.

இந்திய அளவிலும், உலக அளவிலும் அவர் பெயர் பரவியிருந்தது என்பது உண்மைதான் என்றாலும், அடிப்படையில் ஆர்.கே. சண்முகனார் அழுத்தமான சுயமரியாதைக்காரர் ஆவார்.

பிராமணியச் சடங்கை விலக்கியவர்கள் என்ற ஒரு பட்டியல் குடிஅரசில் வெளிவந்தது.

(1) ஈ.வெ.ராமசாமி, (2) திரு.வி.கலியாணசுந்தரம், (3) டாக்டர் பி. வரதராசுலு, (4) ஆர்.கே. சண்முகம்.
இந்த அடையாளம் போதுமே!

கு.வெ.கி. ஆசான்

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தவர்.

இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவர் சட்டம் பயின்று கோவையில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவி சாரதாமணி மற்றும் மகள் உமா, மகன்கள் செந்தில்,  குமார் ஆகியோர் உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திறன் வாய்ந்தவர். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமையகச் செயலாளராகவும் இருந்தார். இவர் மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார், பாவேந்தர் பெரியார், குமரன் ஆசான், சாகு மகராஜ், ஈழத் தமிழர் உரிமைப் போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், Gora’s Positive Atheism and Free will, Thiruvalluvar on learning, knowledge and wisdom   வைக்கம் போராட்டம் _- ஓர் விளக்கம் உள்ளிட்ட எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

குமரன் ஆசான்பற்றி அவர் எழுதிய நூல் பல பதிப்புகள் வந்துள்ளன. அவர்பால் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணசாமி  ஆசான் என்ற பெயரை பிறகு சூட்டிக் கொண்ட எழுத்தாளர். உலகப் புகழ் பெற்ற நூலான ரிச்சர்ட் டாக்கின்சின் “THE GOD DELUSION” நூலை தமிழில், கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர்.

விடுதலை நாளிதழ், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்.

திருச்சியில் இயங்கி வந்த பெரியாரியல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் திராவிடர் இயக்கம், திராவிடர் வரலாறு ஆகிய பொருள்களில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தியவர்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை மய்யத்தின் பாடத் திட்டக் குழுவில் உறுப்பினர். பெரியாரியத்தைப்பற்றிய கைலாசம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகப் பெரியார் பேருரையாளர் என்ற விருது பெற்றவர். தமிழ், தமிழர் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்; தடுப்புக் கைது மற்றும் நீதிமன்றக் காவலுக்கு ஆள்பட்டவர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *