சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

அக்டோபர் 01-15

 

 

 

நூல்:     நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்            
ஆசிரியர்:       ஆ.திருநீலகண்டன்

வெளியீடு:   காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,  669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001.
விலை: ரூ.175/-  பக்கங்கள்:150

‘குடிஅரசு’ பார்வையில் நீடாமங்கல உண்மை!

நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3-ஆவது அரசியல் மாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களைத் துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக்  கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப் பற்றி அவர்கள் பெயர்கள் உட்பட நமக்கு கிடைத்த உண்மையான சேதி விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் வெளியாக்கப்பட்டதை வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால், அதைக் காங்கிரஸ் தோழர்கள் கவனித்துச் சமாதானம் சொல்லாமல் நடந்த விஷயத்தையே அடியோடு மறுத்துக் கூறுவதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்ட தப்பான வழியில் முயற்சித்து வருவது மிகவும் வெறுக்கத் தக்கதாகும்.

பொறுப்புள்ள ஆதி திராவிட சமுகப் பிரமுகர்களுங்கூட இவ்விஷயத்துக்காகத் துக்கப்படாமல் பரிகாரம் தேட முயற்சிக்காமல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மறைக்க ஆசைப்படுவது மிகமிக வெறுக்கத் தக்கதும் கண்டிக்கத் தக்கதுமான செய்கையாகும். விடுதலையில் இது விஷயமாய் வெளியான சேதிகளுக்கு 15 நாள் பொறுத்து – நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு அடிபட்ட, உதைக்கப்பட்டு மொட்டை அடித்து சாணி அபிஷேகம் செய்யப்பட்ட, ஆதி திராவிட மக்கள் பலரை பிடித்துக்கொண்டு வந்து மிரட்டி அம்மாதிரியான காரியம் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு அதில் அவர்களது கையெழுத்தும் வாங்கி அதில் சேராதவர்கள் போட்டோவையும் வாக்கு மூலத்தையும் பத்திரிகைகளில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்ப்பதுடன், விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று என்று தலைப்புக் கொடுத்து சேதி போடுவது என்றால் இக்கூட்டத்தார் தீண்டாமை ஒழிக்கவோ ஆதிதிராவிடர்களைச் சமமாக நடத்தவோ ஆசைப்படு கிறார்களா? அல்லது பழைய ராமராஜ்ஜியப்படி சாமி கும்பிட்டதற்காக ஒரு பார்ப் பனரல்லாதவனின் தலையை வாங்கியது போல் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியைக் கிளப்புகிறார்களா? என்று பயப்பட வேண்டியிருக்கிறது.

தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்களின்  நிலைமை இந்திய சமதர்மவாதிகளும், தேசியவாதிகளும், தேசபக்தர்களும் அறிய வேண்டிய காரியமாகும். தஞ்சை ஜில்லா ஆதி திராவிடர்கள் நிலைமை பழையகால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்குச் சொந்தமோ  அதுபோலவும் அந்த நிலம் விற்கப் பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்குச் சேருமோ அதுபோலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதிதிராவிட மக்கள் அடிமைகளாக இருந்து பூமி கை மாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம், அந்த ஆதிதிராவிடன் அந்த வயல் நிலத்தில் வயல்காரனுடைய கருணையால் குடியிருக்க வேண்டியவனாவான். நந்தன் கதையில் உள்ளது போல் அந்தந்த வயலுக்கு அங்கங்கிருக்கும் ஆதிதிராவிடனே பரம்பரை பண்ணை ஆளாக இருக்க வேண்டியவ னாவான். அவனுடைய சகல சுதந்திரமும், வாழ்வும்  மிராசுதாரர் என்று அழைக்கப்படுகிற பூமிக்குடையவனை சேர்ந்ததாகும். பூமிக் குடையவன் அவனை அடித்தாலும் உதைத்தாலும் வேறு என்ன கொடுமை செய்தாலும் கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மிராசுதாரன் மீது பிராது செய்யவும் எவனும் துணிய மாட்டான். அப்படி ஏதாவது பிராது செய்து விட்டால் அவனுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அப்படிப் பட்டவன் குடியிருக்க இடமில்லாமலும், சாப்பாட்டுக்கு வகை இல்லாமலும் பட்டினி கிடந்து தெருவில் செத்துக் கிடக்க வேண்டியது தான். வேறு மிராசுதாரன் இதற்குச் சிபார்சுக்கு வரவோ ஆதரிக்கவோ ஆரம்பித்தால் பிறகு அவனது அடிமையை அவன் மீது ஏவி விட்டு விடுவார்கள். ஆதலால், மிராசுதார் கொடுமைக்கு ஆளாக இஷ்டப்படவில்லை யானால் ஒரு ஆதிதிராவிடன் மலாய் நாட்டுக்கோ, மோரீஷிக்கோ ஓடவேண்டியது தானே. தவிர அவனுக்கு அந்நாட்டில் போக்கிடம் கிடையாது. ஆதலால், அங்கு ஆதிதிராவிடர்கள் மிருகங்கங்களிலும் கேவலமாகக் கருதப்படுகிறார்கள்.

இதனாலேயே சிங்கப்பூர், மோரீஷ், சுஞ்சிபார் முதலிய தீவுகளில் அதிகம் தஞ்சை ஜில்லா ஆதி திராவிடர்களே கூலிகளாய் ஓடிப்போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை உணர்ந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க நிலம் வாங்கிக் கொடுக்கும்படி சர்க்காரில் ஏற்பாடு செய்தார்கள். அது சமயம் தஞ்சை மிராசுதாரர்கள், பார்ப்பனர்கள் உள்பட கூப்பாடு போட்டதால் அக்காரியம் சரிவர நடத்தப்பட முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் அவர்கள் இவ்வளவு இழிநிலைக்கும், கஷ்டத்துக்கும் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி கவனிக்க இந்த காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் யாரையும் காணோம். ஆதிதிராவிட மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளை அவர்கள் இந்தக் கொடுமையை மறைக்க உடந்தையாய் இருப்பதும், இக்குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமல் இருப்பதும் யோக்கியமாகுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது.

இந்த லட்சணத்தில் கனம் முனிசாமிபிள்ளை அவர்கள் திருநெல்வேலியில் இதை மறைத்துப் பேசும் போது நீடாமங்கல சேதி பொய்யென்றும், அயோக்கியத்தனமான விஷமப் பிரசாரமென்றும் பேசியிருக்கிறார். இவர் ஆதிதிராவிடர்களுக்கு யோக்கியமான பிரதிநிதியா? என்று கேட்கிறோம். அப்படி இருந்தும் அவர் அதே சமயத்தில் தன்னை அறியாமலே வேறு ஒரு உண்மையைக் கக்கி விட்டார்.

அதாவது அங்கு அவர் பேசுகையில் திருப்பதியில் ஒரு ஆதி திராவிடன் சாமி கும்பிட்டதற்காக அவனை அடித்து துன்புறுத்தினார்கள். இது நியாயமா? என்று கேட்டிருக்கிறார்கள். இந்தச் சேதி 21.01.1938ஆம் தேதி தினமணி 8ஆம் பக்கம் 4ஆம் காலத்தில் இருக்கிறது. மற்றும், கனம் முனிசாமிப் பிள்ளை மதுரை கள்ள அழகர் கோவிலில் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்ததற்காகவும், அதுசமயம் கோவில் அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்ததற்காகவும் கோவில் அதிகாரிகள் பேரில் நடவடிக்கை நடத்துவதாக சொல்வதல்லாமல், கோவில் சுத்தம்  செய்ய வேண்டுமென்றும்  இந்த மாகாண மதுரை வருணாசிரம சுயராஜ்ஜிய சங்கத் தலைவர் தோழர் மதுரை நடேச சாதிரியார் அவர்கள் கோவில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். கனம் மந்திரிக்கும் இதைப்பற்றிக் கண்டித்தெழுதி இருக்கிறார். இந்தச் சேதி 26.01.1930ஆம் தேதி ‘இந்து’ பத்திரிகையில் 8ஆம் பக்கம் 6ஆம் காலத்தில் இருக்கிறது.

மற்றும் தோழர் கனம் முனிசாமிப் பிள்ளை அவர்கள் வேறு மதத்திற்குப் போனால் தான் ஆதிதிராவிடர்களுக்குச் சட்ட உரிமை கிடைக்கும் என்பதாகவும் அங்கு பேசி இருக்கிறார்.

ஆகவே,  அவர் தங்கள் சமூகங்களுக்கு இந்து மேல் ஜாதியார்களும், குறிப்பாகப் பார்ப்பனர்களும் செய்யும் கொடுமையை உணர்ந்து கொண்டே 500 ரூ சம்பளத்துக்கும், 300 ரூ படிக்கும் பார்ப்பனர்களுக்கு – மேல் ஜாதியாருக்கு வக்காலத்து பேசுகிறார் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் நீடாமங்கலம் சேதியை விடுதலை பிரசுரித்திருப்பதற்காக அதன் பிரசுரகர்த்தா தோழர் ஈ.வி. கிருஷ்ணசாமி மீதும், ஆசிரியர் தோழர் எ.முத்துசாமிப் பிள்ளை மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போவதாக தஞ்சை வக்கீல் தோழர் கே.டி. பாலசுப்பிரமணிய அய்யர் பி.ஏ., பி.எல்., அவர்கள் ஒரு உடையாருக்காக நோட்டீசு கொடுத்திருக் கிறார்கள். தோழர் சந்தான ராமசாமி உடையார் அவர்கள் சிறுவயது. சுமார் 20 வயதே இருக்கும். அவரை இந்தப் பார்ப்பனர்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டு அவர்கள் பணத்துக்கு தாறுமாறாகச் செலவு வைப்பதுடன் சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதாகவும்  நம்மை பயமுறுத்து கிறார்கள். உண்மையில்  நாம் இவ்விஷயத்தில் எந்த தனிப்பட்ட நபரிடமோ, தனிப்பட்ட ஜாதியாரிடமோ குரோதம் வைத்தோ, குறைவுபடுத்த எண்ணம் வைத்தோ இவ்விஷயங்களை எழுதுவதில்லை பேசுவதில்லை.

சம்பந்தப்பட்ட நபர்களைப் பற்றி நமக்கு விஷயமும் தெரியாது. அறிமுகமும் கிடையாது. ஆனால், இந்த 20ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் ஆட்சி செய்யும் போது பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்துச் சாணி அபிஷேகம் செய்து விட்டு, இந்த விஷயத்தை வெளிப்படுத்தினதற்கு நம்மீது சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவது என்றால், இந்த நாட்டில் மக்கள் வாழ முடியுமா? என்று பயப்பட வேண்டியிருக்கிறது. துன்புறுத்தப்பட்ட தோழர்களான பலர் இனி அந்தக் கிராமத்தில் வாழ முடியாதென்று வேறு ஊருக்கு ஓடிவிட்டார்களாம். அவர்களது வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பும், இது வெளியிட்டதற்கு ஆக சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய பொறுப்பும், அதற்காக 1000, 2000 ரூபாய்கள் செலவிட வேண்டிய பொறுப்பும் நம் தலையில் விடியும் போல் இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் நமது நிலைமை எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது என்பதையும், காங்கிரஸின் தன்மை  மேல் ஜாதியாரின் யோக்கியதை அவர்களடைந்த சுயராஜ்ஜியத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதையும் ஊன்றிக் கவனித்துப் பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

– குடிஅரசு – தலையங்கம் – 30.01.1938

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *