கவிதை

அக்டோபர் 01-15

 

 

  தடுப்போம்! வெல்வோம்!

பெரியாரும், அண்ணாவும் பிறந்து வாழ்ந்த
    பெருமைமிகு தமிழ்மண்ணில் தமிழர் நாமும்
உரிமைகளை மீட்பதற்குக் களத்தில் நிற்போம்;
    உப்புக்கல் வைரக்கல் ஆவ துண்டோ?
நரியாரின் நவோதயா நீட்டாம் தேர்வு
    நற்றமிழ்க்குப் பல்லாற்றான் அழிவைச் செய்யும்!
புரியாத பேதையரின் மயக்கம் நீங்கப்
    புரட்சிக்கு மனவாயில் திறந்து வைப்போம்!

செவிடரென, குருடரென மாறிப் போனோர்
    சிறுமையெலாம் அரங்கேற்றி மகிழு கின்றார்!
தவிடுண்ணும் அரசனுக்கு முறம்பி டிக்கும்
    தகுதியிலா அமைச்சரெனத் தாழ்ந்து போனார்;
கவிதைக்கும் கருப்பொருளாய் ஆனார்; ஏனோ
    கறைச்சேற்றைச் சந்தனமாய் எண்ணிக் கொண்டு
குவித்திட்ட மலையளவு செல்வம் காக்கச்
    கூத்தாடி நாட்டினையே அடகு வைத்தார்!

தன்மதிப்பைத் தாமிழந்தே அடிமை ஆகித்
    தடுமாறித் தவிக்கின்றார் ஆட்சி யாளர்;
நன்மதிப்பை மக்களிடம் இழந்து விட்டார்;
    நஞ்சனைய காவியரை நட்பாய்க் கொண்டு
பின்னடைவை எதிர்கொள்ளத் துணிந்தார்; மானம்
    பெரிதென்றே எண்ணாதார் ஆளும் மட்டும்
முன்னேற்றம் கடுகளவும் முளைத் திடாது
    முதுகெலும்பே இல்லாரால் விடியல் தோன்றா!

கதவில்லா வீடாநம் தமிழர் நாடு?
    கண்டவரும் மேய்வதற்குத் துணிச்சல் கொண்ட
மதவெறியை வீழ்த்திடுவோம்; மானம் காப்போம்
    மண்குதிரை பேரத்தில் அழுந்தி நிற்கும்
உதவாத ஆட்சியினை ஒதுக்கித் தள்ளி
    ஒளிபிறக்கும் வழிகாண்போம்; சமூக நீதி
பதவியினைக் காப்பாற்றத் துடிப்போ ராலே
    பறிபோகும் இழிவினையே தடுப்போம்; வெல்வோம்!

ஒரு தடியின் சத்தம்!

தன்மானம் தன்மானம்
என்னும் உன்தடியின் சத்தம்!
சமதர்மம் சமதர்மம்
என்னும் உன்தாடி நித்தம்!

ஈரோட்டு நெறியும்
காஞ்சிபுர தறியும்
இனமானத்தைக் காத்தது!
எம் உரிமையை மீட்டது!

எம்மதமும் சம்மதம்
பிழைப்பு வாதம்
எரியும் கொள்ளியில்
எந்தக் கொள்ளி
நல்லக் கொள்ளி
பெரியார் வாதம்!

எல்லாச் சாமிகளும்
மனுசங்களை தண்டிக்க வந்தது
ஈரோட்டு ராமசாமி மட்டும்தான்
அந்த சாமிகளையே
கண்டிச்சது!

தந்தை பெரியாரின்
தடியும் தாடியும்
என்ன செய்யும்?
மனிதனை மனிதனாகப்
பார்க்கச் செய்யும்
கற்களை கற்களாகப்
பார்க்கச் செய்யும்!

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *