அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? 9

அக்டோபர் 01-15

நான்கு வருணப் பாகுபாடு பற்றி வேதங்களில் ஒத்த கருத்து கிடையாது. ரிக் வேதத்தோடு பிற வேதங்கள் ஒத்துப் போகவில்லை.

சதபத பிரமாணம் கூறுகிறவாறு, பிரஜாபதி  ‘பு’ என உச்சரித்ததால் உலகம் தோன்றியதாம். ‘புவ’ என உச்சரித்ததால் காற்றும் ‘சுவ’ என உச்சரித்ததால் சுவர்க்கத்தையும் உண்டாக்கியதாம். பு என்றதால் பார்ப்பனர், புவ என்றதால் சத்திரியர், சுவ என்றதால் வைசியர் உண்டாக்கினர் என்கிறது. இந்தக் கருத்தும்கூட, ரிக் வேதக் கருத்துக்கு ஒத்துவரவில்லை.

மனுஸ்மிருதி மட்டுமே ரிக் வேதத்தோடு ஒத்து வருகிறது. வால்மீகி ராமாயணப்படி காசியப முனிவன் நான்கு வருணத்தாரைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மகாபாரதக் கதையில் நான்கு வகையான விளக்கங்கள் நான்கு இடங்களில் வருகின்றன. மனுவின் மூலம் தோன்றிய மனுக்குலத்தில் தோன்றியதாக ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது. புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டவாறே, பிரம்மாவின் வாய், கை, தொடை, கால் ஆகியவற்றிலிருந்து நான்கு வருணத்தார் பிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு புராணக்கூற்றுப்படி, கருஷனிடமிருந்து சத்திரியனும், கெடிஸ்தனின் மகனான நபகன், வைசியனானான் எனக் கூறப்படுகிறது. பார்ப்பன, சூத்திர உருவாக்கம் பற்றி எதுவுமில்லை.
-க்ஷத்திரவிரதன் என்பானின் கடைசி மகனான கிரிஸ்டமடன் என்பவனின் மகன் சவுநகன் என்பான் நால்வகை ஜாதிகளை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது விளக்கமாக பிரம்மாவே நான்கு வருணத்தாரைப் படைத்ததாக உள்ளது.

விஷ்ணு புராணம் நான்கு வருணங்களை புருஷ சூக்தத்தில் உள்ளவாறு கூறுகிறது. ஹரிவம்சப்படி மனுவின் வழிவந்தவர்களின் மூலம் வருணங்கள் தோற்றுவிக்கப்பட்டன எனும் கருத்து கூறப்படுகிறது.
இந்து மதத்தின் குழப்பங்களைப் பட்டியல் போட்டு எழுதிய அம்பேத்கர், நான்கு வருணத் தோற்றத்தைப் பற்றி ஒரே மாதிரியானதும் பொருந்தக் கூடியதுமான விளக்கத்தைக் கொடுக்க முடியாமல்

போனது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டார்!

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணமே, நால் வருணக் கோட்பாடு கட்டுக்கதையே என்பதுதான் காரணம் என்றார் டாக்டர் அம்பேத்கர்! இதைச் செய்த பார்ப்பனர்களின் உள்நோக்கம் என்ன? எனக் கேட்டவர் அவர்! அவர் எப்படி இந்துத்வவாதி ஆவார்? இந்து மதத்தின் உயிர் நிலையே நான்கு வருணம். அதையே கட்டுக்கதை என்று அம்பலப்படுத்தியவரா இந்துத்வவாதி?

சூத்திர ஆணுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்தோர் சண்டாளர் என்கிறது மனுஸ்மிருதி.

சண்டாளர்களின் மக்கள் தொகை கூடுதலாக இருப்பதைக் கணக்கில் கொண்டால் ஒவ்வொரு பார்ப்பனத்தியும் ஒவ்வொரு சூத்திர ஆணுக்கும்  வைப்பாட்டியாக இருந்தாலும் கணக்கைச் சரிக்கட்ட முடியாதே! என்கிறார் அம்பேத்கர். கலப்புத் திருமணம் செய்து வாழ்ந்தோரை இவ்வாறு இழிவுபடுத்தியதன் மூலம் எண்ணற்ற மக்களை இழிவுபடுத்தி சமூக ஒழுக்க இழிவுக்கு  வழிவகுத்துள்ளது மனுநூல்! இந்த நிலை மனுஸ்மிருதியை எழுதியவருக்கு ஏற்பட்டது ஏன் என்று கேட்ட டாக்டர் அம்பேத்கர், இந்து மத சட்ட கர்த்தாவையே கேள்விக்குட் படுத்தியுள்ளார்!

அவர் சார்பில் யாருமே விளக்கம் தர இயலாத நிலை உருவாக்கிவிட்டார். இந்து மதக் கூட்டங்களின் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தவர் எப்படி இந்து மதக்காரர்? இந்துமதப் பற்றாளர்? எப்படி இந்துத்வவாதி ஆவார்?

மகன் இல்லாமல், மகளை மட்டும் பெற்றிருக்கும் தந்தையானவன், தானே ஒருவனை அழைத்து வந்து, மகளுடன் உறவுகொள்ளச் செய்து அதன்மூலம் பெறுகின்ற அவளுடைய மகன் அந்தப் பெண்ணின் தந்தைக்கு மகன் என்கிறது இந்துமதம். இவனை பவுத்ரிகா புத்திரன் (மகளின் மகன்) என்கிறது. தன் மகளுக்கு முறையாகத் திருமணம் செய்வித்தான பின்னரும் தன் மகள் மூலம் தனக்கொரு மகனைப் பெறும் பழக்கமும் இந்து மதத்தில் உண்டு. மகளின் கணவன் அல்லாத யாரோ ஒருவனுடன் தன் மகளைக் கட்டாய உடலுறவு கொள்ளச் செய்து அதன்மூலம் மகன் பிறக்கச் செய்யும் பழக்கம் இந்து மதத்தில் உண்டு. இதனாலேயே, உடன் பிறந்த சகோதரன் இல்லாத பெண்களைத் திருமணம் செய்வது தடைப்பட்டதும் உண்டு.

மனைவியை விளைநிலமாகக் கருதும் இந்துக் கொள்கையின்படி கணவன் இறந்திருந்தாலோ, பிள்ளை பெற முடியாத பிணியாளனாக இருந்தாலோ, கணவனின் சகோதரன் அல்லது சிரார்த்தம் தரும் உரிமையுள்ள சபிண்டன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது இந்து மதம். இவன் ஷேத்திரஜா எனப்படும் மகன்.

பெண் தந்தை வீட்டில் இருக்கும்போது ஆடவனுடன் கள்ளத் தொடர்பில் பிள்ளை பெற்றுக் கொண்ட பிறகு, மணமாகிய பின்னர் அவனைத் தன் மகனாகவே கணவனும் சேர்ந்தே ஆக்கிக் கொள்வது கானீனன் எனப்படும் மகனாகும்.

திருமணமானவள் கள்ளத் தொடர்பு மூலம் வேறு ஆணுக்குப் பிள்ளை பெற்றால், அவன் குத்தாஜன் எனப்படுவான். கருவுற்ற நிலையில் திருமணமாகும் ஒருத்திக்குப் பிறக்கும் மகன், தந்தை யார் என்றே தெரியாத நிலையில், அவனுக்கு சகோதஜன் எனப் பெயர். கணவனால் கைவிடப்பட்ட நிலையில் பலரோடும் வாழ்ந்து பிறகு கணவனிடமே வந்து சேரும் ஒருத்திக்குப் பிறந்தவன் புநற்பவன் எனும் மகனாம்! பார்ப்பனனுக்கு திருமணமாகாத சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன் பார்சவன். சுவீகாரம் செய்து கொடுக்கப்பட்டவன் தத்தகன். பார்ப்பனன் தனது சூத்திரமனைவியிடம் பெற்ற பிள்ளை நிஷாதன். பெற்றோர் சம்மதமில்லாமல் தன் சம்மதத்தின் பேரில் மட்டுமே சுவீகாரமாகப் போனவன் கருத்திரியன். பெற்றோரிடமிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவன் அபவித்தன். தாய் தந்தையால் கைவிடப்பட்டு சுயமாகப் பிறர்க்குத் தத்துப் பிள்ளையாகிறவன் சுயதத்தன்.

இந்து மதம் 13 வகை மகன்களில் எவரையும் புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்கிறது. எல்லாவித ஒழுக்கக்கேடுகளினாலும் பிறந்தாலும் ஏற்றுக் கொள்கிறது. ஒழுக்கத்திற்கோ, கற்பு என்பதற்கோ இந்து மதத்தில் இடம் இல்லை.

இப்படியெல்லாம் பிறக்கும் குழந்தைகள் எந்த வருணத்தைச் சேர்ந்தது? இந்து மதப்படி, இவை தந்தையின் வருணத்தை மட்டுமே சேர்ந்தவை என்கிறது மனுநூல். இருந்தாலும் பூணூல் போடக்கூடிய மூன்று வருணத்தார்க்குத் தாழ்ந்த ஜாதிப் பெண்களிடம் பிறந்த குழந்தைகள் தாயின் வருணத்தைச் சேர்ந்தவர்களாம். தந்தையைக் கணக்கில் கொண்டு பித்ராசவருணம் என்றும் தாயின் வருணத்தைக் கொணடு மாத்ராச வருணம் என்றும் மனுசாத்திரம் பிரிவுபடுத்துகிறது.

இந்துமதச் சட்டங்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்து அம்பலப் படுத்தியவரான அம்பேத்கரை இந்துத்வர் என்பது எவ்வளவு பெரிய புரட்டு?

– சு.அறிவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *