‘நீட்’டிற்கு எதிராக இடையறாப் போராட்டங்கள் நடத்தப்பட்டே ஆகவேண்டும்!
கே: பெரியாரும் திராவிடர் இயக்கமும் இல்லாவிட்டால், தமிழிசையும், கிருஷ்ணசாமியும் மருத்துவர் ஆகியிருக்க முடியுமா? (அவரவர் ‘குலத்தொழிலை’த் தானே செய்து கொண்டிருப்பார்கள்?)
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
ப: அப்படி யாரும் செய்யக் கூடாது என்பதற்குத்தான் தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் பாடுபட்டது. என்றாலும், மரத்தை வெட்ட அதே மரத்தின் சில பகுதிகள் கோடரிக் காம்புகளாகவும் ஆகிறதே!
கே: இந்துத்வா சக்திகளை எதிர்ப்பதில் ‘லாலு’ மட்டுமே உறுதியாக இருக்கிறார் என்பதால்தான் அவர்மீது அதிகமாக குறி வைக்கப்படுகிறது என்பது உண்மையா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப: சி.பி.அய்., வருமானவரித்துறை போன்ற “சங்கு சக்கரங்கள்’’ கலியுக ஆட்சி அவதாரங்களின் சக்திவாய்ந்த ஆயுதங்கள். எனவே, பிடிக்காதவர்கள், விமர்சிப்பவர்கள் மீது பாய்ச்சப்படுகின்றன!
கே: ஸ்மிருதி ராணி சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்வதை ஆதரிக்கும் நாடாளுமன்றம், தம்பித்துரை தமிழில் பேசியதை தடுத்து நிறுத்தியது எதனைக் காட்டுகிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: இதைப் பார்த்தும் அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ளவர்களுக்கு சொரணையோ, சூடோ பிறக்கவில்லையே! அய்யகோ!
கே: பகுத்தறிவாளர்கள் மறைந்தபின் நடைபெறும் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை உதிர்த்து சாலை முழுவதும் கொட்டுகிறார்கள் இது சரியா?
– செங்கதிர் திராவிடன், சோழன்குறிச்சி
ப: சரியில்லை. மாலைகள்கூட போடப்பட வேண்டாம். ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம் அம்மையார் மறையும் முன் (அவரது மரண சாசனத்தில்), “மாலை போடாமல் உண்டியலில் மாலைக்குப் பதில் காசைப் போட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்குங்கள்’’ என்று வழிகாட்டியுள்ளாரே!
கே: ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் செய்யும் நிலையில், மேற்கொண்டு நாம் செய்ய வேண்டியவற்றை இடையறாது செய்ய வேண்டியது கட்டாயம் அல்லவா?
– கெ.ந.சாமி, சென்னை
ப: நிச்சயமாக. தொடர் போராட்டங்கள் இடையறாது நடத்தப்பட்டே ஆகவேண்டும்.
கே: பெரிய பணக்காரர்களிடமிருந்து கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு சவாலாக உள்ளதாக கூறியுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஏழை, எளிய விவசாயிகளின் உடைமைகளை ஜப்தி செய்வது நியாயமா?
– மா.த.அய்யாசாமி, பேரம்பாக்கம்
ப: பா.ஜ.க.வின் சுய உருவம் புரிகிறதா? அம்பானி, அடானி, மல்லையாக்கள்தான் இவர்கள் கணக்கில் ‘ஏழைகள்’ புரிகிறதா?
கே: தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எச்.ராஜாவின் தோல்வியை இனிப்புகள் வழங்கி நாடே கொண்டாடி மகிழ்ந்தது எதைக் காட்டுகிறது?
– மு.கோவிந்தன், வேளச்சேரி
ப: பெரியாரை விமர்சித்ததற்கு கைமேல் பலன்! ஆரிய ஜம்பத்திற்கு ஒரே அடி!
கே: அண்மையில் சென்னையில் நடைபெற்ற இந்தியா_ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் விளையாட்டில் கருப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என்று தடை விதித்தது அச்சத்தின் உச்சமா?
– வே.சரவணபெருமாள், திருவல்லிக்கேணி
ப: அர்த்தமற்ற முட்டாள்தனத்தின் உச்சம்! தலைமுடி கருப்பிற்குக்கூட தடை போடுவார்களா?
கே: பெரியார் பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்காத முதல்வர் பழனிச்சாமி சங்கராச்சாரியாரை சந்தித்தது முதல்வர் பதவிக்கு அழகா?
– சீ.காளிமுத்து, சோத்துப்பாக்கம்
ப: பெரியாரால் ‘பாவ மன்னிப்பு’ தர முடியாது! எனவேதான், “பழைய பாவியை நோக்கி புதிய பாவிகள் ஓடுகின்றனர்’’ போலும்! “அண்ணா நாமம் வாழ்க!’’