தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாள் விழா மாட்சிகள்!

அக்டோபர் 01-15

மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பெரியாரின் பிறந்த நாள் விழா பல்லாற்றானும் சிறப்புடையது. ஜெர்மனியில் மாநாடு நடத்தி உலகத் தலைவர் பெரியார் என்ற சிறப்பு விரிந்த நிலையில் எதிரிகள் திகைத்துத் திணர எங்கெங்கும் பெரியார் பிறந்த நாள் விழா அனைத்து அரசியல் கட்சிகளாலும், அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.

செப்டம்பர் 17, சென்னை பெரியார் திடலில் அதிகாலையிலிருந்தே அணியணியாய்க் கருஞ்சட்டைத் தோழர்கள் திரண்டு கொண்டிருந்தனர். அனைவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி! அனைவரின் அகத்திலும் அத்தனை எழுச்சி! வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் சிறுவர்களும், இளைஞர்களும். மேலும் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர் தோழர்கள். பெரியார் படத்தை சட்டைப் பையில் மாட்டிக் கொண்டு கழகக் கொடியைக் கையில் ஏந்தியவாறே பெரியார் வாழ்க! பெரியார் வாழ்க! என்று சிறுவர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு முழங்கிக்கொண்டு சென்றது, தந்தை பெரியார் அவர்கள் பிஞ்சு உள்ளங்களிலும் பிரகாசமாய் ஒளிரத் தொடங்கியுள்ளார் என்பதைத் தெளிவாய்க் காட்டியது.

முதல் நிகழ்வாக திடலில் கூடியிருந்த தோழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தந்தை பெரியார் சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மீண்டும் திடலில் தந்தை பெரியார் சிலையின் முன்பு ஒன்றிணைந்தனர். கழகத் தோழர்களும், திடல் பணியாளர்களும், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்து பெரும் திரளாகக் கலந்துகொண்ட பெரியார் பெருந்தொண்டர்களும் மாலைகளும் மலர் வளையங்களும் வைத்து வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! என உணர்ச்சி மிகுந்து, உற்சாகம் மிகுந்து முழக்கமிட்டனர்.

இரண்டாவது நிகழ்வாக, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின் ஆசிரியர் அய்யா அவர்கள் உறுதிமொழி சொல்ல தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உணர்வுப் பெருக்குடன் நின்றிருந்த தோழர்கள் உள்ளத்தில் உற்சாகப் பெருக்கு ஊற்றெடுத்தது. எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியார் நினைவிடம் வருகைதந்து ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆசிரியர் அவர்களும் எழுச்சித் தமிழர் அவர்களும் மரக்கன்றுகளை நட்டனர். பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பின் எழுச்சித் தமிழர் விடைபெற மக்கள் வெள்ளம் அடுத்து கருத்தரங்கத்திற்குத் தயாரானது.

மூன்றாவது நிகழ்வாக, சரியாக முற்பகல் 11 மணியளவில் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் கருத்தரங்கம் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தொடங்கியது. முதலில் ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன் அவர்கள் பெரியாரைப் பற்றிய இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குறும்படம்  திரையிடப்பட்டது. அது பெரியாரின் உண்மை வடிவத்தை அழகுற விளக்கியது. அதனைத் தொடர்ந்து கனகா குழுவினர் நடத்திய ‘நீட்’ கொடுமை என்ற மேடை நாடகம் அரங்கேறி அனைவரின் பாராட்டைப் பெற்றது. பொறியாளர் ச.இன்பக்கனி அவர்கள் வரவேற்புரை வழங்க, வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் தலைமை தாங்க, டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

கருத்துரை:

மானமிகு வி.கேஆர்.பெரியார் செல்வி அவர்கள் சமூக அநீதியை நாட்டைவிட்டு விரட்டுவோம் என்ற தலைப்பிலும், தோழர் ஓவியா (நிறுவனர், புதிய குரல்) அவர்கள் ஜாதி ஆணவக் கொலையை நாட்டை விட்டே விரட்டுவோம் என்னும் தலைப்பிலும் சிறப்பாகப் பேசினர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு விஜயதாரணி அவர்கள் கல்வியைப் பாதிக்கும் ‘நீட்’டை நாட்டை விட்டு விரட்டுவோம் எனும் தலைப்பிலும், சிபிஎம் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்கள் மக்களைக் கொல்லும் மதவெறியை நாட்டை விட்டே விரட்டுவோம் எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினர்.

கருத்தரங்கத்தின் நிறைவுரையை, தனக்கே உரிய பாணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார். பொன்னேரி செல்வி அவர்கள் நன்றியுரை நவில, கருத்தரங்கம் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புடன் நிறைவுற்றது. இக்கருத்தரங்கத்திற்கு இணைப்புரை வழங்கிய மணியம்மை அவர்கள் மிகச் சிறப்பாய் தன் பணியைச் செய்தார்.

திடலில் மதிய உணவு, வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பொதுக்கூட்டம்:

அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி (அய்ஸ் அவுஸ்) சேக்தாவூத் தெருவில், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் 139ஆம் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்ட மேடையில் முதல் நிகழ்வாக கிராமியப் பாடல்களும் பெரியாரின் கொள்கை விளக்கப் பாடல்களும் இன்னிசைக் குழுவினரால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சிலம்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு சிலம்பம் மட்டுமல்லாது பல்வேறு தற்காப்புச் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர்.

நிகழ்ச்சி தொடக்கம்:

இரவு 7.10 மணிக்கு, தோழர் இரா.வில்வநாதன் தலைமையில், தோழர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை நிகழ்த்தினார்.  தோழர் வி.பன்னீர்செல்வம், தோழர் த.ஆனந்தன், தோழர் இன்பக்கனி, தோழர் பொன்னேரி செல்வி போன்றோர் அறிமுகவுரை வழங்க, மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

சுப.வீரபாண்டியன்

7.48 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய சுப.வீ. அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை விளக்கி உரையாற்றும்போது, “இல்லாத சரஸ்வதி நதியை தேடிக் கொண்டி ருப்பவர்கள், இருக்கின்ற கீழடி ஆய்வை முடக்க நினைக்கின்றனர்’’ என்று கூறினார். ‘நீட்’’, ‘நவோதயா’, ‘நிதி ஆயோக்’ என மத்திய மதவாத அரசு மக்களை தொடர்ச்சியாய் வஞ்சித்து வருவதைக் கண்டித்தார்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமா

8.04. மணிக்கு எழுச்சியுடன் உரையைத் தொடங்கிய திருமா அவர்கள், மிகப் பெரியதொரு கொள்கைப்பூர்வமான, ஒரு சிறப்பான ஆய்வுரையை நிகழ்த்தினார்.

“அனைத்துத் தளங்களுக்கும் வழிகாட்டக் கூடிய ஒரு தலைசிறந்த ஆளுமைதான் தந்தை பெரியார்’’ என்று முழங்கினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர்

8.50 மணிக்கு பொதுக்கூட்டத்தின் நிறைவுரையை நிகழ்த்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியாரிடமிருந்து தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுவைபட விவரித்தார். இப்பொழுது நாம் நடத்துகின்ற போராட்டங்கள் எல்லாம் மனுதர்மத்திற்கு எதிராக மனித தர்மத்தை வளர்த்திடவே எனத் தெளிவுபடுத்தினார். எச்.இராஜாக்களால் தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை யென்றால் அதற்கு என்ன காரணம்? பெரியார். பெரியார், “நேற்றும் தேவைப்பட்டார்! இன்றும் தேவைப்படுகிறார்! நாளையும் தேவைப்படுவார்!’’ என்று எழுச்சியூட்டியதோடு, இந்துமத இழிவுகளையும், கடவுள்களின் கையாலாகாத் தனங்களையும் தோலுரித்துக் காட்டினார்.

¨    உலக நாடுகளிலேயே தந்தை பெரியாருக்கு நிகர் வேறு எவரும் கிடையாது.

¨    திராவிடர் கழகம் துப்புரவு இயக்கம்.

¨    பெண்களை உடமையாக ஆக்கக் கூடாது என்று சொல்கிற இயக்கம்.

¨    பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி.

¨    ஆரியத்திற்கு எதிரானது எதுவோ, அதுதான் திராவிடம்.

¨    தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக ஒரு தனிப்பிரிவு உண்டாக்கப்பட வேண்டும்.

¨    திராவிடர்களையே பார்ப்பனர்கள் அசுரர்கள் என்றழைத்தனர் போன்ற அரிய செய்திகளை எடுத்துக்கூறினார்.

இறுதியாக, “வருகின்ற தீபாவளிக்கு மறுநாள் திராவிடர் கழகம் ‘நரகாசுரன் விழா’வைக் கொண்டாடும். ஒத்த கருத்துள்ளவர்களும் எங்களுடன் கலந்து கொண்டு _ நரகாசுரன் விருந்து வைத்து கொண்டாட வேண்டும்’’ என அழைப்பு விடுத்து நிறைவாய், “சமூக அநீதிகளுக்கெல்லாம் கருப்புச் சட்டை ஒன்றுதான் சரியான தீர்வு’’ என உரையை முடித்தார்.

பொதுக்கூட்டத்தின் நன்றியுரையை மகேந்திரன் வழங்க இரவு 10 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

– தமிழோவியன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *