ஈரோடு மாவட்டம் பழையகோட்டையில் 14.10.1923இல் பெருநிலக்கிழார் குடும்பத்தில் தோன்றிய என்.அர்ச்சுனன் அவர்கள் தமது இருபதாம் வயதுக்குள்ளாகவே இயக்கப் பற்று மேவி, திராவிடர் கழக அமைப்பு தோன்றும்போது அய்யா அவர்களின் தொண்டராகி, இயக்கத்தவர் உள்ளத்தில் நிலையான இடம் தேடிக் கொண்ட இளைஞர்.
பல ஊர்களில் இயக்க நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட இவர், “நாடெங்கும் நமது போர் முரசைக் கொட்ட வேண்டும். மக்களை தட்டியெழுப்ப வேண்டும். நமது கறுப்புச் சட்டைப் படையைப் பலப்படுத்த வேண்டும். நம்மை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கூட்டம் பொல்லாதது; சூழ்ச்சிகளில் கை தேர்ந்தது.
இருந்தபோதிலும் நாம் உறுதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்து தலைவர் ஆணைப்படி நடந்தால் வெற்றி பெறுவது உறுதி, சுதந்திரத்துடன் வாழ வேண்டும் திராவிடர்களாகிய நாம்; இல்லையேல் மாள வேண்டும்’’ என்று முழங்கினார்.
திராவிடர் கழகத்திற்குப் பொருளாளர் என்று யாரையும் தந்தை பெரியார் நியமித்ததில்லை. அர்ச்சுனன் அவர்களைத்தான் பொருளாளராக முதன்முதலில் நியமித்தார் அய்யா.
அய்யா அவர்கள் இவரது மறைவை – பன்னீர்ச்செல்வம், சி.டி.நாயகம் ஆகியோர் மறைவினால் ஏற்பட்ட இழப்புக்கு இணையாகக் கருதினார்.
வாழ்க அர்ச்சுனன்!