மூன்றாண்டுகளில் எதிர்மறை வளர்ச்சியா?

அக்டோபர் 01-15

 

 

`இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம். கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம். வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். இவையெல்லாம் கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கொடுத்த வாக்குறுதிகள். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பொருளாதார காரணிகள் யாவும் எதிர்மறையாக உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதமாக குறைந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.4 சதவீதமாக இருக்கிறது. பெரிய அளவில் முதலீடுகள் வரவில்லை. தனியார் நுகர்வு குறைந்து கொண்டே வருகிறது.

இப்படி பல பொருளாதார காரணிகள் எதிர்மறையாக உள்ளன. இவற்றுக்கு காரணம் என்ன? எங்கே தவறு நடந்தது. 2004-ஆம் ஆண்டிலிருந்து 2012ஆ-ம் ஆண்டு வரை கிராமப்புற நுகர்வு அதிகமாக இருந்தது. காரணம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இந்த காலகட்டத்தில் விவசாய உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது. விவசாய வருமானம் 7.5 சதவீதம் அதிகரித்தது. இதன் காரணமாக நுகர்வு அதிகரித்தது. அதேசமயம் பணவீக்கமும் அதிகரித்தது.

ஆனால் 2014_-15 மற்றும் 2015_-16ஆ-ம் நிதியாண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் குறைக்கப் பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி ஏற்பட்டதால் கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்தது. தேவை குறைந்தது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின.

இதன் தாக்கம் ஒருபுறம் இருக்க மத்திய அரசு தொடர்ந்து சீர்த்திருத்தம் என்ற பெயரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. ஒரே நாள் இரவில் மொத்த பணப்புழக்கத்தில் நாட்டில் 86 சதவீத ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கையால் மக்கள் சிரமத்துக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டன. முறைசாரா தொழில்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முறைசாரா தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு மிகப் பெரிய வரி சீர்த்திருத்தம் என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி. பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த 8 மாதங்களுக்குள்ளே ஜிஎஸ்டியை அமல்படுத்தியது மத்திய அரசு. இதனால் வணிகர்கள் மிகுந்த பாதிப்படைந்தனர். ஜிஎஸ்டிக்காக சரக்குகளை தேக்கி வைக்கும் நிலை கூட ஏற்பட்டது. இதுவும் நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு மிகப் பெரிய காரணம். வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரித்ததால் கடன் வழங்கும் நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. முதலீடுகள் குறைந்ததால் தொழில்துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த காலாண்டிலும் நாட்டின் பொருளாதாரக் காரணிகள் அதிக வளர்ச்சியடையாது என்று புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதை சமாளிக்க அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. `

பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி சமீபத்தில் தெரிவித்துள்ளார். கிராமப்புற பொருளாதாரத்தையும் சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியாது என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

நன்றி: ‘தி இந்து’ (தமிழ்) 25.9.2017

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *