நாட்டின் பொருளாதாரம் – பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி பெறுவதற்குப் பதில், தளர்ச்சி அடைந்துள்ளது. அவரது ஆட்சி சந்தித்துள்ள மாபெரும் தோல்வியையே பதிய வைத்துள்ளது!
டில்லி மொகாலியில், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (அய்.எஸ்.பி.) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசுகையில், (23.9.2017) மேனாள் பிரதமரும், பொருளாதார வல்லுநரும், ரிசர்வ் வங்கியின் தலைமை அதிகாரியாக இருந்தவருமான டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் சில அதிர்ச்சியூட்டக் கூடிய புள்ளி விவரங்களைக் கூறியுள்ளார்!
வளர்ச்சியை நோக்கி மோடி அரசு செல்லுகிறது என்ற பொய்ப் பிரச்சாரத்தினை அது கிழித்துக் காட்டியுள்ளது!“ பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ தேவையற்றது. குறிப்பிட்ட சில இலத்தீன் அமெரிக்க நாடுகளைத் தவிர, வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியைத் தரவில்லை. நாட்டில் புழக்கத்திலிருந்த 86 சதவிகித கரன்சிகள் பண மதிப்பு நீக்க நடவடிக்கைமூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது எந்த அளவுக்குத் தோல்வி அடைந்துள்ளது என்பதை நாம் இப்போது பார்த்துள்ளோம்!
காங்கிரசு தலைமையிலான அரசு பொறுப்பில் இருந்தபோது, நாட்டின் முதலீட்டு விகிதம் 35 சதவிகிதம்வரை இருந்தது. இது 30 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. தனியார் முதலீடுகள்கூட அதிகரிக்கவே இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொழில் துறையினருக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கச் செய்யவேண்டும். பொதுத் துறை நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்க வேண்டும். அரசின் மேம்பாட்டு நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருக்காமல், அந்நிய முதலீட்டுக்கான அதிகரிப்புக்கும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
“ஜி.டி.பி. (நி.ஞி.றி.) யில் 30 சதவிகித அளவுக்குப் பொதுத்துறை முதலீடு உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இது பெரிய தொகை அல்ல. கட்டமைப்பு, பொது சுகாதாரம், வேளாண் துறை உள்ளிட்டவற்றில் அரசு முதலீடு அதிகரிக்கப் படவேண்டும்.’’ இப்படி கருத்துக் கூறியுள்ளார் மன்மோகன்சிங். “மோடியின் சாகச வித்தைகள் பொருளாதாரத் துறையில் எடுபடவில்லை.’’ ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள குளறுபடிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி, வணிகர்களையே குழப்பி, இதுவரை அது கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று சொல்வது போன்று தெளிவற்ற நிலையில், மூன்று, நான்கு அடுக்குகளில் மாறி மாறி, அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன! வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்குப் படித்த இளைஞர்களிடையே குறைந்துள்ளது என்ற கேள்விக்கு மோடி அரசின், வளர்ச்சி – விகாஸ் என்று வாய் நீளம் காட்டும் பா.ஜ.க. அரசின் பதில்தான் என்ன?
இன்றைய தமிழ் ‘இந்து’ நாளேட்டின் (25.9.2017) 3 ஆம் பக்கத்தில் மூன்றாண்டுகளில் எதிர்மறை வளர்ச்சியா? என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு அரிய தகவல் கட்டுரையை (பெட்டிச் செய்தியாக) வெளியிட்டுள்ளோம்!
எனவே, வெளிநாடுகளிலிருந்தும், தனியாரிடமிருந்தும் தனது புகழ், பெருமை, சாதனைகள் மூலம் இந்த மூன்றாண்டு கால ஆட்சியில் மோடி அரசின் சாதனை பாராட்டத்தக்கதாகவோ அல்லது அவர்களே கூட பெருமைப்படத்தக்கதாகவோ அமையவில்லை என்பது சுவரெழுத்துக்களாகத் தெரிகிறது!
காவி மயத்தைக் கைவிட்டுப் பொருளாதார வளர்ச்சியில் கவனம் தேவை!எனவே, காவி மயமாக்குவதில் இந்த அரசு காட்டும் அதீத முயற்சிகளை நிறுத்தி, பொருளாதார வளர்ச்சியின் பக்கம் கவலையோடு கவனஞ்செலுத்திட வேண்டியது அவசரம், அவசியம்.
கி.வீரமணி, ஆசிரியர்.