ஆசிரியர் பதில்கள்

ஆகஸ்ட் 16-31

கேள்வி : இன எதிரிகள் (பார்ப்பனர்கள்), துரோகிகள் (திராவிடர்களில்) இவர்களில் யாரை மன்னிக்கலாம்? – மலர்விழி, எரியோடு

பதில் : இன எதிரிகளைக்கூட மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கவே கூடாது. விபீஷ்ணன் என்ற பாத்திரத்தை ஆழ்வார் ஆக்கியதன் விளைவுதான், நம் நாட்டில் சொந்த அண்ணனை, அமைப்பினைக் காட்டிக் கொடுத்து, பதவி, பரிசுகள் பெறுபவர்கள் பெருத்துவிட்டனர்.

இதை அக்கிரகாரத்து அதிசய மனிதர் – வ.ரா. என்ற வ. இராமசாமி அய்யங்கார் – கோதைத்தீவு என்ற அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

கேள்வி : உழைப்பில் சலிப்பு ஏற்படலாம்; ஆனால், பொதுத்தொண்டில் சலிப்பு ஏற்படுவதில்லையே, ஏன்?  –  அழகிரிதாசன், கல்மடுகு

பதில் : உழைப்பில் சலிப்பு ஏற்படுவதற்குக் காரணம் பல நேரங்களில் களைப்பு, தோல்வி – பொதுத்தொண்டு, நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு வேலை திட்டம். எனவே, சலிப்பு ஏற்பட வழியில்லை.

கேள்வி : உச்ச நீதிமன்றத்தை அரசு மதிக்காவிட்டால், மக்கள் எப்படி நீதி மன்றங்களை மதிப்பர்? நீதிமன்றத்தின் உத்தரவு மதிக்கப்படாத நாட்டை ஒரு நாடாக உலகம் ஒத்துக்கொள்ளுமா?
ஜே.அய்.ஏ. காந்தி, எரும்பி

பதில் : வடமொழியில் ஒரு பழமொழி உண்டு. அரசன் எவ்வழி – குடிகள் அவ்வழி!

கேள்வி : கருநாடக அரசின் கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர் ஹெக்டே  ஹகேரி, பகவத் கீதை படி அல்லது கருநாடகாவைவிட்டு வெளியேறு என்று கூறி இருப்பது பற்றி? (செய்தி: 22.07.2011 தீக்கதிர்) – ஜி. முருகன், சுமைதீர்ந்தபுரம்

பதில் : மதச்சார்பற்ற இயக்கங்கள் கருநாடகத்தில் என்ன செய்கின்றன?

கேள்வி : 1. பிறந்த நேரமும், கோள்களும், 2. இறைவன் வகுத்த விதி, 3. பில்லி சூனியம், செய்வினை, மந்திரம் 4. பூஜை புனஸ்காரங்கள் இவைதான் மனிதன் வாழ்வுக்குக் காரணம் என்று சொல்லும் இந்துமதம் மனிதனின் திறமையையும், முயற்சியையும் எங்கே வைத்துள்ளது?
ந. அருட்கோ, சோளிங்கர்

பதில் : செவ்வாய் கிரகத்தில் வைத்துள்ளது. ஓடிப்போய் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; அதற்கும்கூட செவ்வாய் தோஷம் பயம் வந்து நின்றுவிட்டால் அதிசயம் அல்ல!

கேள்வி : மய்ய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை ஆளுமையில் வரும் தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனம் இன்றைய தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை, தி.மு.க. மய்ய அரசில் அங்கம் வகித்துவரும் நிலை இருந்தும் கருத்தில் கொள்ளாதது ஏன்?

– விடுதலை வாசகர் வட்டம், ஊற்றங்கரை

பதில் : இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி வேறுபாடு கருதாது முயற்சிகளை எடுத்து தமிழக அரசினைச் செயல்பட வைக்க வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்.

கேள்வி : ஊழல் பற்றி வாய்கிழியப் பேசும்… கைவலிக்க எழுதும் பார்ப்பனர், நடத்தை கெட்ட நித்யானந்தா, சங்கராச்சாரியார் பற்றி மவுனம் சாதிப்பது ஏன்?
நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : ஊழல் முதுகில் பூணூல் இருந்தால் அது ஊழல் ஆகாதே! ஹி..  ஹி… !
பேச நா இரண்டுடையாய் போற்றி! போற்றி!! என்பதுதானே ஆரியமாயை ?

கேள்வி : என்னுடைய சான்றிதழ்கள் அனைத்திலும் மதம் என்ற இடத்தில் இந்து என்று உள்ளது. அதை மாற்ற முடியுமா? அனைத்து விண்ணப்பப் படிவங்களிலும் மதம் என்ற இடத்தில் நாத்திகர் என்று நிரப்பினால் செல்லுமா?  – வெங்கட. இராசா, ம. பொடையூர்

பதில் : சட்டப்படி ஜாதிதான் மாற்றமுடியாதே தவிர, மதம் என்ற இடத்தில் மாற்றலாம். வழக்குமன்றத்திற்குச் செல்லவேண்டி இருக்கலாம்!

கேள்வி : தந்தை பெரியார் அய்யா தங்களை எப்போதாவது கடிந்துகொண்டதுண்டா? அப்படியானால் எப்போது? ஏன்? – கு. பழநி, புதுவண்ணை

பதில் : ஓரிரு சந்தர்ப்பங்களில் உண்டு.

1. ஒரு நண்பருக்குப் பரிந்துரை செய்து, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் தந்தை பெரியாருக்குத் தாறுமாறாக கடிதம் எழுதிவிட்டார் – அவசரப்பட்டு. அந்த வேதனையில் என்னைக் கடிந்துகொண்டார். பிறகு, அய்யா அவர்களும் அம்மா அவர்களும் என்னை வெகுவாக சமாதானப்படுத்தினார்கள்.

2. திருமணத்தின்போது மாமியார் கொடுத்த வெளிநாட்டுக் கைக்கடிகாரத்தை வாங்கிக் கொள்ள மறுத்தபோது அய்யா செல்லமாகக் கடிந்து கொண்டார். அப்படித்தான் ஓரிரு சம்பவங்கள்.

கேள்வி : தி.மு.க., அ.தி.மு.க. உடன் கூட்டணிப் பேச்சுக்கே இனிமேல் இடமில்லை என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன?

– தாமரைச்செல்வி, ஆத்தூர்

பதில் : இதற்காக தி.மு.க. டாக்டர் ராமதாசுக்கு நன்றி செலுத்த வேண்டுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *