சாந்தி மலர் -_ ராஜேந்திரன் தம்பதியினரின் ஒரே மகளான எழிலரசி சென்னை ஆவடியில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் பங்கேற்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 400 புள்ளிக்கு, 339 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர்தான் தமிழகத்தின் முதல் பெண் மாற்றுத்திறனாளி பாராஷூட்டர். காஞ்சிபுரம் சொந்த ஊர்.
பிறக்கும்போது எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறந்திருந்தாலும், இவருடைய இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போகும்போது இவருக்கு வயது இரண்டு.
இவரின் நிலைமையைப் பார்த்துவிட்டு பள்ளியில் சேர்த்துக்கவே மறுத்துவிட்டார்கள். அப்புறம் எப்படியோ பல சிரமங்களுக்குப் பிறகு சேர்த்துக்கிட்டாங்க.
இவர் எட்டாவது முடிக்கிற வரைக்கும் இவரின் வீட்ல இருக்கற யாராவது ஒருத்தர் பள்ளிக்கு இவரைத் தூக்கிட்டுப் போவாங்க.
இவர் இதுவரை யாரிடமும் இவருடைய குறையைச் சொல்லி அழுததுமில்லை, இந்தக் குறையைச் சுட்டிக்காட்டி யாரும் இவரை கேலி செய்ததுமில்லை என்று கூறுகிறார். எட்டாவது வகுப்புவரை காஞ்சீபுரத்தில் படித்த இவர் மேற்கொண்டு படிப்பைத் தொடர்வதற்காக செங்கற்பட்டுக்கு இவருடைய குடும்பம் குடியேறியது. அங்கு செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தார்.
பின்பு செங்கற்பட்டிலேயே உள்ள அரசுக் கல்லூரியிலே சேர்ந்து கணக்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி தேர்வு பெற்றார். எம்.அய்.டி.யில் முதுகலை முடித்து பின் எம்.எல்.கூட அங்கேயே முடித்தது மில்லாமல் அங்கேயே பணி கிடைத்துப் பணிபுரிந்தார்.
அதன்பின் குருநானக் கல்லூரியில் வேலை கிடைத்து அங்குப் பணியாற்றினார். பணிக்குச் செல்வதற்காக ஸ்கூட்டி வாங்கிக் கொண்டு பணிக்குச் சென்று வந்தார். யாருடைய துணையும் இன்றி தன் வேலைகளைத் தானே கவனித்துக் கொண்டார்.
பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர் பணி கிடைத்துப் பணியாற்றினார். அவர் கற்பிக்கும் பாடங்களில் எந்த மாணவரும் தேக்கமின்றி தேர்வு பெற்றனர். எல்லோரையும் தன் பிள்ளைகளாகவே நினைத்துப் பாடம் கற்பித்ததாகக் கூறுகிறார்.
இந்த நிலையில் அபுபக்கர் என்பவர் அடிக்கடி அவருக்குப் போன் செய்து ஷூட்டிங் பற்றிச் சொன்னதோடு பாராஷூட்டர்ஸ்லே பெண்கள் யாரும் இல்லையென்றும் அதனால் எழிலரசி அதில் முயற்சிக்கலாம் என்றும் ஊக்கப்படுத்தினார். மேலும் திருமணம் ஆகாத பெண்ணாகவும் இருப்பதால் பொறுப்புகள் அதிகமில்லை. எனவே சாதிக்கலாம் என்றும் எடுத்துக் கூறினார்.
எனவே எழிலரசி ஊக்கம் கொண்டு உதயகுமார் என்னும் பயிற்சியாளரின் உதவியுடன் பயிற்சி பெற்றார். தினமும் காலை 5 மணிக்கே எழுந்து ஷூட்டிங் பயிற்சி இடத்திற்குச் சென்றுவிடுவார். தினமும் காலை 3 மணி நேரமும், மாலை 3 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டு கடுமையாக முயன்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். மாற்றுத் திறனாளியாக இருந்தும் சாதித்துள்ள இவரை நாமும் வாழ்த்துவோமே!