ஜெர்மனி நாட்டில் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றவர்களில் நானும் ஒருவன்.
மாநாட்டில் கலந்துகொள்ள 26.7.2017 புதன்கிழமையன்று சென்னையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை அடைந்தோம். மழைச்சாரல் எங்களை வரவேற்றது.
எங்களை அழைத்துச் செல்ல பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ஸ்வென் என்பவர் வந்திருந்தார். அவர் எங்களை வரவேற்று எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு அழைத்துச் சென்றார்.
பேருந்து பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சி அளித்தது. அதன் ஓட்டுநரைப் பார்த்தேன். அவர் பெயர் பீட்டர். அவரைப் பார்த்தால் பேருந்து ஓட்டுநர் என்று யாரும் கூறிவிட முடியாது. நன்கு உடையணிந்து கழுத்தில் ‘டை’யும் கட்டியிருந்தார். தலையில் அய்ரோப்பிய நாட்டு குல்லாவும் அணிந்திருந்தார்.
அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் பேருந்து கிளம்பியது. சன்னல் ஓரத்தில் அமர்ந்த நான் வெளிப்புறத்தை நோட்டமிட்டேன்.
நாட்குறிப்பை எடுத்து கண்ட காட்சிகளை எழுதத் தொடங்கினேன். வைத்து எழுதும் வசதி பேருந்தில் இருந்தது. படம் பிடிக்க செல், கேமிரா இவைகளைக் கையில் வைத்துக்கொண்டேன்.
பயணம் செய்கையில் இங்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. அனைவரும் கட்டாயம் இருக்கைப் பட்டைகளை அணியவேண்டும். பேருந்து விரைந்து செல்லும்போது எழுந்து நிற்றலும் கூடாது.
பிராங்க்பர்ட் நகரிலிருந்து கொலொன் நகரம் 190.5 கி.மீ தூரத்தில் உள்ளது. 27ஆம் தேதி மதியம் கோலோன் நகரை அடைந்தோம்.
அன்று மாலையும் மறுநாள் 28, 29ஆம் தேதிகளில் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
29ஆம் தேதி மாலை கொலொன் நகரின் முக்கிய இடங்களைப் பேருந்தில் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்களுக்கு வழிகாட்டியாக அபிநாஷ் என்பவர் எங்களுடன் இணைந்தார்.
30.8.2017 முதல் 7.9.2017 வரை கொலொன் நகரிலிருந்து புறப்பட்டு ஏஜ்சல்பர்க் (Engelberg), லுசர்ன் (Lucern), மிலன் (Milan), படோவா (Padova), வெனிஸ் (Venice), பிளாரன்ஸ் (Florence), ரோம் (Rome), பைசா (Pisa), ஜெனிவா (Geneva), பாரிஸ் (Paris) ஆகிய ஊர்களுக்குப் பேருந்தில் சுமார் 3,500 கி.மீ. தூரம் பயணம் செய்து சுற்றிப் பார்த்தோம்.
பயணத்தின்போது கண்ட காட்சிகள் அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
பேருந்து விரைந்து சென்றது. விமானத்தில் பயணம் செய்தால் நம்மால் எழுத முடியும். அதுபோலவே இந்தப் பேருந்துப் பயணத்திலும் பெரும்பாலான நேரங்களில் என்னால் எழுத முடிந்தது.
தரமான சாலைகள்:
தரமான சாலை, சாலைகள் இரு மருங்கிலும் அடர்ந்த மரங்கள். அதையடுத்து வியக்கத்தகு வகையில் செழித்திருந்த விவசாயம்.
மக்காச்சோள வயல்களில் மக்காச் சோளம் காய்த்துக் குலுங்கியது. அதன்மீது குழாய்மூலம் உயரமாக தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அறுவடை செய்யப்பட்ட வயல்கள்; ஏர் உழப்பட்ட நிலங்கள். தஞ்சையை மிஞ்சிய விவசாயம். ஜெர்மனி தொழிற்சாலை நாடு என்பதோடு விவசாய நாடாகவும் திகழ்கிறது.
பேருந்துப் பயணத்தின்போது நாம் நமது நாட்டு ஊர்களான ஊட்டி, கொடைக்கானலில் பயணம் செய்யும் உணர்வே ஏற்படுகிறது. அவை மலைப்பாதைகள். இங்கு சமவெளிப் பாதையிலேயே அந்தச் சுகத்தை உணர முடிகிறது.
கிராமங்களைச் சுற்றி உயரமான மதில்சுவர்
நெடுஞ்சாலைகளை விட்டு சற்று தொலைவிலேயே கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் படம் எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. காரணம் சாலையின் இருபுறமும் அடர்ந்த, நெருக்கமான மரங்கள். அது மட்டுமல்லாமல் கிராமங்களின் ஆரம்பம் முதல் முடியும் வரை சிமெண்ட் பலகைகளால் ஆன சுமார் 15 அடி உயரமுள்ள சுவர் எழுப்பப்-பட்டுள்ளது. அது வெளியில் தெரியும் கிராமத்தை சுத்தமாக மறைத்து விடுகிறது.
அந்தச் சுவரின் பயன் என்ன? எதற்காகக் கட்டப்பட்டுள்ளது? என்று ஆய்வு மாணவர் ஸ்வென் அவர்களிடம் கேட்டேன்.
“நெடுங்சாலைகளில் செல்லும் கார், லாரி, பேருந்துகளால் ஏற்படும் இரைச்சல் கிராமங்களில் கேட்காதவாறு தடுப்பதற்கே இதுபோல் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு வியப்பு மேலிட்டது. அய்ரோப்பிய நாட்டவர்கள் இரைச்சலை சிறிதுகூட விரும்பவில்லை. பேருந்து அமைதியாகச் செல்கிறது. வீடியோ, ஆடியோ போட்டு பெரும் இரைச்சலை உருவாக்கி கூத்தும் கும்மாளத்துடன் சென்று பிறகு பெரும் விபத்தில் சிக்கி உயிரை விடுவது போன்ற செயல்கள் இங்கு அறவே கிடையாது.
வேகத்தடைகளே இல்லை:
வழிநெடுகிலும் விலையுயர்ந்த கார்கள் விரைந்து செல்கின்றன. நாம் வியந்து பார்க்கும் பி.எம்.டபிள்யூ, ஆடி, பென்ஸ், ஸ்கோடா போன்ற கார்கள் சர்வவாதாரணமாக சாலைகளில் பறந்து சென்றன. மிகப் பெரிய கன்டெய்னர் எனப்படும் சரக்குந்துகளில் பத்து புதிய கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன போலும். மிதி வண்டிகளும் கார்களுக்குப் பின்னால் கட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. மிதி வண்டிகள் பலராலும் பயன்படுத்தப் படுகின்றன. இந்தக் காட்சிகளை ஜெர்மனியில் மட்டுமின்றி பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் கண்டேன்.
பேருந்துப் பயணத்தில் முக்கிய அம்சம் எங்குமே வேகத் தடைகள் இல்லை. பயணம் செய்த 3500 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தில் கூட வேகத்தடை இல்லை. சாலைகளில் மனித நடமாட்டத்தைப் பார்க்கவே முடியாது. சாலையை குறுக்கே கடக்கவும் முடியாது. சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு இடையிலான தொலைவில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அது எதிரெதிரே உள்ள ஊர்களை இணைக்கிறது. மக்கள் கண்டிப்பாக அந்த மேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் குறுக்கே வருவதில்லை.
சாலைகளில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் பேருந்தை நிறுத்த முடியாது. சாலையோர விடுதிகள் ஆட்டோ கிரில் என்ற பெயருடன் இயங்குகின்றன. பெட்ரோல் பங்க் இணைந்தே காணப்படுகிறது. சாலையோர விடுதிகளில்தான் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும். கட்டணக் கழிப்பறைகளே அதிகம். சில இடங்களில் இலவசமும் உண்டு.
பெட்ரோல் பங்கில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவர் வாடிக்கை யாளர்களின் கார்டை வாங்கிப் பணத்தைக் கருவி மூலம் எடுத்துக்கொள்கிறார். வாடிக்கை யாளர்களே குழாயை எடுத்துத் தேவையான பெட்ரோலை நிரப்பிக் கொள்கின்றனர். அளவுகுறைவாக போடப்பட்டது என்ற புகாருக்கே இடமில்லை.
ஓட்டுநர்கள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர். தற்செயலாக யாராவது சாலையைக் கடக்க முற்பட்டால் ஓட்டுநர் காரை நிறுத்தி நடந்து செல்பவர்கள் சாலையைக் கடக்கும்வரை காத்திருந்து பிறகே காரை இயக்குகிறார்.
கிராமங்களில்கூட கார்த் தொழிற் சாலை-களைக் காணலாம். சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருக்க வில்லை. பேருந்து-களை முறைப்படுத்தி அனுப்ப எங்குமே காவலர்களைக் காண முடியாது. சாலைக் குறியீடுகளைப் பார்த்தும், சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற விளக்குகளைக் கவனித்தும் மக்கள் செல்ல வேண்டியதுதான். பேருந்துக்குள் யாரும் எதையும் உண்பதை ஓட்டுநர் விரும்புவதில்லை. எந்த அசுத்தமும் பேருந்துக்குள் செய்தல் கூடாது.
நகரங்களில் டிராம் வண்டிகள் இயக்கப்-படுகின்றன. கார்கள் செல்லும் பாதைகளிலேயே அவைகளுக்கான தண்டவாளங்கள் அமைக்கப்-பட்டுள்ளன. மிதி வண்டிகள் செல்லவும் தனிப் பாதைகள் உண்டு. மிதி வண்டிகளில் செல்வோர் நல்ல வேகத்தில் செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் ஒதுங்காவிட்டால் மோதி விடுவார்களாம். சாலைகளில் அமைக்கப்-பட்டுள்ள மூன்றடி உயரமுள்ள இரும்புத் தூண்களில் மிதி வண்டிகளை நிறுத்தி பூட்டிவிட்டுச் செல்கின்றனர்.
பேருந்து ஓட்டுநர் எங்கள் பேருந்தை எல்லா இடங்களிலும் அதிகபட்சமாக நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தினார். அவர் மதக்குறியீடுகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிரார்த்தனை எதுவும் செய்யவும் இல்லை. சாலைகளில் எலுமிச்சம் பழங்கள் நசுக்கப்-படுவதும் பூசணிக்காய், தேங்காய் உடைக்கப்-படுவதுமான மூடப்பழக்க வழக்கங்கள் அங்கு இல்லை.
இவற்றையெல்லாம் செய்யும் நமது நாட்டில்தான் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அலட்சியமும், அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளும் காரணம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
“இந்தியாவில் 2016ஆம் ஆண்டு மட்டும் 5,01,423 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 1,31,726 விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளனர். 5,00,279 பேர் காயமடைந்-துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிரிழந்துள்ளனர். 79,746 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துகளுக்கு 77 சதவீதம் வாகன ஓட்டுநர்களே காரணம்.
(ஆதாரம்: ‘தி இந்து’ நாளிதழ், 13.06.2017)
ஓட்டுநருக்கு ஓய்வு:
பிற நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம். போலீசுக்கு தகவல் கொடுக்காமல் தங்களுக்குள் சமரசமாக போன விபத்துகளும் உண்டு. அவைகளையும் சேர்த்தால் இன்னும் விபத்துகளின் எண்ணிக்கை உயரும்.
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 400 பேர் விபத்தில் இறக்கின்றனர். ஒவ்வொரு 3.6 நிமிடத்திற்கும் ஒருவர் இறக்கிறார்.
இதே காலகட்டத்தில் ஜெர்மனியில் ஓராண்டில் 3214 பேர் உயிர் இழந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த உயிரிழப்பையும் தவிர்க்க அங்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். ஓட்டுநர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. பேருந்தில் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப் பட்டிருக்கும்.
ஓட்டுநர் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் அல்லது வாரத்திற்கு 56 மணி நேரம் வண்டியை இயக்கலாம். அது மட்டுமல்லாது ஒவ்வொரு 4லு மணி நேரத்திற்கும் கட்டாயமாக 45 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதை மீறினால் ஓட்டுநருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். இதனால் ஓட்டுநர்கள் இரவு பகல் பாராமல் ஓய்வெடுக்காமல் வாகனத்தை ஒட்டி, உடல்நலம் கெட்டு, ஓட்டும்போதே தூங்கி, வாகனத்தை விபத்துக்கு உள்ளாக்கி விலைமதிக்க முடியாத மனித உயிர்களை பறிப்பதில்லை.
மேலும் ஒவ்வொரு ஓட்டுநரும் அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் 35 மணிநேரம் மீள் பயிற்சி பெற்று தனது தகுதியை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
பேருந்தில் உள்ள கருவிகளில் பேருந்தை இயக்கத் தொடங்கிய நேரம், செலுத்தும் வேகம், செல்ல வேண்டிய தூரம், ஓட்டுநர் ஓய்வெடுத்த நேரம் ஆகிய அனைத்தும் பதிவாகி விடுகின்றன. காவலர்கள் அவைகளை சோதனை செய்து அச்செடுத்து ஆய்வு செய்கின்றனர்.
பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் தேவையான செய்திகளையும் அறிவிப்புகளையும் வழிகாட்டியாக வந்தவர் சொல்கிறார்.
பேருந்து செல்கையில் ஓட்டுநர் எந்த இடத்திலும் ஒலிப்பானை பயன்படுத்துவதில்லை. சமவெளிகளில் உள்ள வளைவுகளில் மட்டு-மல்லாது மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில்கூட ஒலிப்பானை பயன்படுத்து வதில்லை. அனைத்து வாகனங்களும் பகலிலும் விளக்குகளை எரிய விட்டுக் கொண்டே செல்கின்றன.
பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து எந்த சாலையின் வழியாகச் செல்ல வேண்டும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு விடுகிறது. அதை விட்டு வேறு சாலையில் பயணிக்கக் கூடாது. நிறுத்துமிடங்களும் முன்பே முடிவு செய்யப்-படுகிறது. உல்லாசப் பயணம் மேற்கொள்வோர் விரும்புகிறார்களே என்பதற்காக நினைத்த இடத்திற்கு பேருந்தை செலுத்த முடியாது. இதனால் நெரிசல் தவிர்க்கப்படுகிறது. போக்குவரத்து சீராக நடைபெறுகிறது.
பெரிய நகரங்களை சுற்றிப் பார்க்கப் பேருந்து வசதிகள் உண்டு. மாடிப் பேருந்துகளில் மேல்தளம் திறந்த நிலையில் உள்ளது. மக்கள் அதில் அமர்ந்து கொண்டு நகரின் அழகை இரசித்துப் பார்க்கின்றனர்.
ஆங்காங்கே சுங்கச் சாவடிகளும் உண்டு. ஆனால், பணியாளர்கள் யாரும் இருப்பதில்லை. பேருந்தில் வைக்கப்பட்டுள்ள அட்டையிலிருந்து மின்னணுக் கருவிமூலம் தேவையான பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சுங்கச் சாவடிகளில்கூட வேகத்தடைகள் இருப்பதில்லை.
பல இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே மின் விளக்குகள் நெருக்கமாக போடப்பட்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்டுள்ளது. பைசா நகரத்திலிருந்து ஜெனிவா செல்லும் சாலை சற்று வித்தியாசமானது. பயணம் முழுவதும் அடுத்தடுத்து மலைத் தொடர்கள். ஆனால், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் இல்லை. அடுக்கடுக்கான மலைத் தொடர்களை குடைந்து சுரங்கப் பாதைகள் அமைத்திருக்-கிறார்கள். சாதாரணமாக சமவெளிகளில் பயணம் செய்வதைப் போன்றே உள்ளது. இத்தாலி எல்லை முடிந்து பிரான்ஸ் எல்லை ஆரம்பமானவுடன் பெரிய அதிசயத்தக்க சுரங்கப் பாதை ஆரம்பமானது. மலைத் தொடரைக் குடைந்து அமைக்கப்பட்ட அந்தச் சுரங்கப்-பாதை 11.6 கி.மீ நீளமுடையது. ஒளி வெள்ளத்தில் பேருந்து மிதந்து சென்றது இனிய அனுபவமாக இருந்தது.
மதச் சின்னங்களைக் காணோம்:
சுமார் 3500 கி.மீ பயணத்தில் எந்த ஒரு இடத்திலும் மதச் சின்னங்கள் அணிந்து சென்ற மனிதனைப் பார்க்கவே இல்லை. மத ஊர்வலங்களும் குறுக்கிடவில்லை. ஓட்டுநர் பிரார்த்தனை எதுவும் செய்யவும் இல்லை. அந்த அரசுகளை நாம் வாழ்த்தலாம்.
– ஆறு. கலைச்செல்வன்