24.05.1981 அன்று காலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், அன்னை கஸ்தூரி திருமண மண்டபத்தில் தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைவரும் பகுத்தறிவுக் குடும்பத்தில் ஒருவருமாகிய புலவர் பி.அண்ணாமலை அவர்கள் மகள் தேன்மொழிக்கும், பெரம்பலூர் வட்டம் அணைப்பாடி மருதை அவர்கள் மகனுமான பெரியசாமிக்கும் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது.
நம்முடைய திருமணங்கள் திருமண நிகழ்ச்சி முடிந்த பின் வாழ்த்துரை கூறி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், புலவர் அண்ணாமலை அவர்களின் மகள் திருமணம். அதற்கு மாறாக வாழ்த்துரை கூற வந்தவர்கள் பகுத்தறிவுத் திருமண முறையை ஏற்பதாக ஒப்பந்த ஏற்புரை நிகழ்த்திய பின் மணமக்கள் மாலை அணிவித்து துணை ஏற்பு நிகழ்த்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மணவிழாவில் நான் உரையாற்றும்போது,
“இன்று நடைபெறும் திருமண விழா ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முறையில் சில புதிய முறைகளை மாற்றி அமைத்து நடத்திக் காட்டியிருக்கிறார் நண்பர் புலவர் அண்ணாமலை அவர்கள்.
புலவர் அண்ணாமலை அவர்கள் சற்று ஆழமானவர்கள். நேரம் காலமெல்லாம் எங்களுக்கு முக்கியமல்ல என்பதை உறுதிப்படுத்தலாம் என்பதை மனதில் கொண்டே இந்த முறையில் இத்திருமணத்தை அமைத்துள்ளார்கள் என்று கருதுகின்றேன் என்று குறிப்பிட்டேன். மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகக் கூடாது. இதுபோல் தனிக் கல்யாண மண்டபம், செலவு இவைகளைக் கூட குறைக்க வேண்டும். திருமணத்தில் தங்கள் தகுதியைக்காட்ட சாப்பாடு பெருஞ் செலவில் செய்யப்படுகிறது. இவைகளைக் குறைக்க வேண்டும். எங்களைக்கூட அழைக்க வேண்டியதில்லை. இங்கே உள்ள அய்யா போன்றவர்களைக் கொண்டே நடத்திக் கொள்ளலாம். எங்களை அழைத்து இருக்கிறார்கள் என்றால் எங்கள் கருத்துக்கள் பரவ வேண்டும் என்பதற்காக அழைத்திருக்கிறார்கள், தாய்மார்கள் இந்தக் கருத்தைக் கேட்க வேண்டும். மணமக்கள் துணிவோடும் தெளிவோடும் மற்றவர் களுக்கு எடுத்துக் காட்டாகவும் வாழ வேண்டும்.
விழாவில், திராவிடர் கழக பிரச்சார செயலாளராக இருக்கும் வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
பழனியில் நடைபெற்ற பிராமண மாநாட்டில் “பிராமண இளைஞர் சங்கம்’’ எனக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக, ஒரு பார்ப்பன வழக்கறிஞர் அறிவித்து இருப்பது கண்டு நாம் மகிழ்ச்சியோடு அதனை வரவேற்று, அதனை எதிர்கொள்ள பழனி நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 21.06.1981 அன்று பழனியில் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
“மதவாதிகளின் மனதைப் புண்படுத்தும் பேரணியை நடத்தக்கூடாது’’ என கண்டிப்பதாகக் கூறிய போலீசார் கழகத் தோழர்களை மிரட்டும் _ செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். பேரணி தொடர்பாக நகரில், “வைக்கப்பட்டிருந்த பேனர்’’ பார்ப்பன கைக்கூலி ஒருவரால் கிழித்துப் போடப்பட்டது. இதனைத் தடுத்துக் கேட்ட கழகத் தோழர்கள் வேணுகோபால் அரங்கசாமி, பூபாலன், முருகன் உள்ளிட்ட பல தோழர்கள் கலவரம் விளைவித்தார்கள் எனக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பழனியில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்தி மாநாடு நடத்த அனுமதித்த அதிமுக ஆட்சி, திராவிடர் கழகத்தின் பேரணிக்கும், பொதுக் கூட்டத்திற்கும் தடை போட்டது.
இதனைத் தொடர்ந்து பேச்சுரிமையைக்கூட மறுக்கும் அளவுக்கு பார்ப்பன ஆதிக்கத்துக்குத் கட்டுப்பட்டுள்ள இந்த ஆட்சியின் தடையை மீற நான் முடிவு செய்து புறப்பட்டுச் சென்றேன்.
இந்தச் செய்தி பல மாவட்டங்களுக்கு காட்டுத் தீயெனப் பரவியது. கருஞ்சட்டைத் தோழர்கள் காட்டு வெள்ளமாய்ப் புறப்பட்டு வந்தனர். தடையை மீற வேண்டும் என்று உணர்ச்சிக் கொந்தளித்துக் கிளம்பிவிட்டது. வேறு வழி இன்றி முன்யோசனையற்ற அரசாங்கம் கடைசியாக பொதுக் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்தது.
தடை _ அதற்குப் பின் அனுமதி என்றவுடன் பொதுக்கூட்டத்திற்கு எழுச்சி பன்மடங்காக பிரளயம் எடுத்தது.
என்னை வரவேற்ற வாலிபச் சிங்கங்கள் அளித்த வரவேற்புக் காட்சி, தந்தை பெரியாரின் இயக்கம் இன்றும் கொண்டிருக்கும் எழுச்சிக்கு அடையாளமாய் அமைந்தது.
கூட்டத்தில் நான் உரையாற்றுகையில், “பார்ப்பனர்கள் மாநாடு நடத்தவும் நம்மைக் கேவலமாகப் பேசவும் அனுமதிக்கும் தமிழக அதிமுக அரசு, திராவிடர் கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. காரணம், இது சங்கராச்சாரி ஆசிபெற்ற மனுதர்ம ஆட்சி’’ என்று தெளிவுபடுத்தினேன்.
கூட்டத்திற்கு வி.எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம், திருச்சி மாவட்டத் தலைவர் டி.டி.வீரப்பா, புலவர் கண்மணி, மாநில மகளிர் அணி அமைப்பாளர் க.பார்வதி, அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
25.06.1981 அன்று உளுந்தூர்பேட்டையில் திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்களது காலத்திலேயே ‘பிராமணாள்’’ என்ற பெயர் உணவு விடுதிகளின் பெயர்ப் பலகைகளிலிருந்து அழிக்கப்பட்ட சரித்திரத்தை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நாடு முழுவதும் உணவு விடுதிகளில் “பிராமணாள்’’ என்ற பெயர் அழிக்கப்பட்டபோது, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சென்னை திருவல்லிக்கேணியிலே இருந்த “முரளிஸ்கபே’’ என்கிற உணவு விடுதியின் உரிமையாளர் மட்டும் “பிராமணாள்’’ என்பதை அழிக்க மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தார். தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் பயனில்லாத நிலையில் கழகத்தின் சார்பிலே அமைதியான முறையிலே அந்த உணவு விடுதியின் முன்பு மறியல் செய்வோம் என அய்யா அவர்கள் அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் அந்த உணவு விடுதியின் முன் மறியல் செய்தார்கள்.
அன்னை மணியம்மையார் தலைமையில் ஒரு நாள் மறியல் நடைபெற்றது. இப்படி நாள்தோறும் நடந்த மறியலில் ஏறத்தாழ இரண்டாயிரம் தோழர்கள் போராடினார்கள். அதனுடைய விளைவு என்ன என்று சொன்னால், தோழர்களே! யார் அந்தப் பெயரை நீக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாரோ அவரே முன்வந்து அந்த உணவு விடுதியின் பெயரிலிருந்த “பிராமணாள்’’ ஓட்டல் என்பதை அழித்து ‘அய்டியல் ரெஸ்டாரெண்ட்’ என்று மாற்றினார்! அது மட்டுமல்ல. அந்த ஓட்டல் உரிமையாளரே நிறைய பழங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து அய்யா அவர்களை சந்தித்து, ‘எங்களை ஆசிர்வதியுங்கள் அய்யா’ என்று கேட்டுக் கொண்டார்கள். நாம் வீணாக ஆத்திரப்பட்டு விட்டோம்; முரட்டுத்தனமாக நடந்துகொண்டோமே; பெரியாரே நேரில் வந்து கேட்டுக்கொண்டது எவ்வளவு பெரிய வாய்ப்பு; இதை நாம் உணர்ந்து கொள்ளவில்லையே என்றெல்லாம் உணர்ந்து மனம் திருந்தி அய்யா அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.
பெரியார் அவர்களும் மனிதாபிமானத்தோடு பரவாயில்லை என்று சொல்லிப் பாராட்டினார்கள்! இது கடந்தகால வரலாறு! தோழர்களே! இதை யாரும் மறந்துவிட வேண்டாம்!
திமுக ஆட்சியிலே கலைஞர் முதல்வராக இருந்தபோது இதே பிரச்சனை திருச்சியிலே தோன்றியது. நமது கழகத் தோழர்கள் இதற்காகப் போராடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடனே கலைஞர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளை அழைத்தார்கள். “நீங்கள் போய் அந்த உணவு விடுதியின் உரிமையாளரிடம் முறையிட்டு அந்தப் பெயரை மாற்ற நடடிவக்கை எடுங்கள் என்று சொன்னார்கள். அதன்படி காவல்துறை அதிகாரிகள் நேரடியாக உணவு விடுதிக்குச் சென்று உரிமையாளரைச் சந்தித்துப் பேசினார்கள். “பிராமணாள்’’ என்ற பெயர் மறைந்தது. அந்த முன் மாதிரியையும் யாரும் மறந்துவிட வேண்டாம்! இவை எல்லாம் இந்த இயக்கம் கடந்துவந்த பாதைகள் என்பதை அருமைத் தமிழ் இனமக்களே மறந்துவிட வேண்டாம்! நமது இழிவிற்கும் நாம் முன்னேறாமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்!’’ என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை மேற்கோள் காட்டி உரையாற்றினேன்.
எம்.ஜி.ஆர் ஆட்சியின் கறை படிந்த பக்கங்கள்
27.06.1981 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் ‘அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழின விரோதப் போக்கு, புதிய கண்ணப்பன் சரித்திரம்’’ என்று தலைப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஒரு பிரிவாக இருந்த பல் மருத்துவக் கல்லூரியை, தனிக் கல்லூரியாக்கி, டாக்டர் இராஜன் என்ற தமிழரை முதல்வராகவும், டாக்டர் கண்ணப்பன் என்ற தமிழரை துணை முதல்வராகவும் நியமித்து, தமிழர்கள் இருவர் தலைமையில் இந்தியாவிலேயே தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக அது திகழ்ந்து வந்தது. இந்த மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை.
டாக்டர் கண்ணப்பன் துணை முதல்வராக மட்டும் இல்லாமல் பல் சீரமைப்புத் துறையின் பேராசிரியராகவும் இருந்தார். அவரின் கீழ் அந்தத் துறையின் பட்ட மேற்படிப்பு வகுப்பில் பல மாணவர்கள் எம்.டி.எஸ். பயின்று வந்தனர். அவர்களின் ஒரு மாணவனின் பெயர் அருண் சித்தரஞ்சன் எம்.டி.எஸ். இறுதித் தேர்வு சென்ற ஏப்ரலில் நடந்தபோது இந்த மாணவரும் எழுத வேண்டும். இறுதித் தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவன் தன்னுடைய படிப்பின்போது கண்டறிந்த உண்மைகளை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக வடித்து பேராசிரியரிடம் காட்டி அதை அவர் அனுமதித்த பிறகே தேர்வு எழுத முடியும் இதுதான் நடைமுறை.
அருண் சித்தரஞ்சன் என்ற மாணவரோ, ஆறே பக்கங்களில் தன் ‘ஆராயச்சி’ அனைத்தையும் அடக்கி விட்டார். கல்லூரித் தலைவரும் பேராசிரியரும் மாணவரைக் கூப்பிட்டு, தப்பும் தவறுமாக உள்ள கட்டுரையைத் திரும்பப் பெற்று ஒழுங்கான கட்டுரை ஒன்றை எழுதுமாறு கேட்டார். மாணவரோ பேராசிரியர் சொல்வதைக் கேட்கவில்லை. காரணம் அவருக்கிருக்கும் பலமான செல்வாக்கு. செல்வாக்கு என்றவுடன் ஏதோ சாதாரணமானது என்று எண்ணிவிட வேண்டாம்! நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் எம்ஜிஆர் செல்வாக்கு என்றால் அது சாதாரணமானதா?
டாக்டர் கண்ணப்பனை டெலிபோனில் அழைத்தார் எம்ஜிஆர். இருபத்தி நான்கு மணி நேரத்தில் அருண் சித்தரஞ்சன் என்ற மாணவனின் ஆராய்ச்சிக் கட்டுரை புதிதாகச் தயாரிக்கப்பட்டு, மாணவனை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் எனவும், அப்படிச் செய்யாவிட்டால் பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் மிரட்டினார். பேராசிரியர் கண்ணப்பரின் நேர்மையும் கண்டிப்பும் இதற்கு இணங்க மறுத்தது. எம்ஜிஆர் இப்படி எல்லாம் சொல்லுகிறாரா என்ற சந்தேகத்தில் மறுபடியும் அவருடன் டாக்டரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தபோது மறுபடி தனது முந்தைய “ஆணையை’’ தனது உதவியாளர் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர் கண்ணப்பன் இந்த உத்தரவுக்கு பணிய மறுத்ததன் விளைவால் இரவோடு இரவாக மதுரைக்கு மாற்றப்பட்டார். எம்ஜிஆர் அவர்களின் கோபம் காரணமாக ஏற்பட்ட இந்த மாறுதல் இரண்டு தமிழர்கள் அல்லாதவர்களுக்கு ஆதாயமாக ஆகிவிட்டது.
துணை முதல்வராக டாக்டர் ஜனார்த்தனம் என்ற மலையாளியும், பல் சீரமைப்பு பேராசிரியராக டாக்டர் ரங்காச்சாரி என்ற அய்யங்காருமே இந்த ஆதாயம் பெற்றவர்கள்.
எம்ஜிஆர் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கை 505 ஆகும். அதில் அன்றைய நிலவரப்படி ஓராண்டுக்கு மேலாக வேலை நீக்கத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை 814. இவ்வளவு பேருடைய நிலைகளைப் பற்றி கவலைப்படாத அரசு இஸ்மாயில் கமிஷனால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட திரு.வித்தியாசாகரனைப் பற்றி மட்டும் கவலைப்பட்டு கசிந்துருகியது. இந்தச் செயல்கள் எல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களாக காட்சியளித்தது கண்டு நான் நேரடியாக இத்தகைய கண்டனத்தை அன்றே எம்ஜிஆர் அரசுக்கு எதிராகப் பதிவு செய்தேன்.
மாயவரம் தி.நாகரெத்தினம் (சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர்) நவநீதம் ஆகியோரின் செல்வி குந்தவிக்கும், சீர்காழி வட்டம் மேலசாலை இராமனுசம்_புஷ்பவல்லி ஆகியோரின் செல்வன் கலியபெருமாளுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் 28.-06.1981 அன்று மாயவரம் ஏ.வி.சி. திருமண மண்டபத்தில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
விழாவிற்கு நான் தலைமை தாங்கி நடத்தி வைத்தேன். விழாவில் நான் உரையாற்றும்போது, தந்தை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிற நான் வாழ்க்கையில் சிறப்பாக இருந்து வருகிறேன் என்று நண்பர் நாகரெத்தினம் இங்கு வரவேற்புரையில் குறிப்பிட்டார். இத்தகைய அறிவிப்புகள் பிரகடனங்கள் வரவேற்கத்தக்கவையாகும்.
தந்தை பெரியார் அவர்கள் கொள்கையைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவ்வாறு வாழ்ந்து காட்டி தந்தை பெரியார் உருவாக்கிக் கொடுத்த வாழ்க்கை நெறியினை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும், அது ஈர்க்க வேண்டும்.
நாத்திகர்கள் என்றால் முரட்டுதனம், ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் என்று தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு இருக்கிறது. உண்மையிலேயே ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் பொது அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாம்தான்.
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து பக்தி என்பது தனிச் சொத்து என்பதை அய்யா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
பச்சையப்பன் கல்லூரியில் பேசும்பொழுது, “பக்தி என்பது எப்படிச் தனிச் சொத்து? ஒழுக்கம் என்பது எப்படி பொதுச்சொத்து? என்பதற்கு அவர் தன்னையே உதாரணமாகக் கொண்டு சொன்னார்.
நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் அதனால் என்ன நஷ்டம்? பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு என்ன நஷ்டம்? அவன் சொல்வான் இந்தப் பாவிப்பயல் கடவுள் இல்லை என்கிறான். நரகத்திற்குப் போவான் என்று சொல்வார்கள். நான்தானே நரகத்துக்குப் போவேன். பக்கத்து வீட்டுக்காரனையும் கூட்டிக்கொண்டா போகப் போகிறேன். இது என்னைப் பொறுத்ததுதான். இதனால் வேறு யாருக்கும் சங்கடமில்லை.
ஆனால், என்னிடத்தில் ஒழுக்கம் இல்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரன் நிம்மதியாகத் தூங்க முடியுமா? அவன் கதவைச் சாத்தாமல் இருக்க முடியுமா? என்று கேட்டார்.
ஒரு மனிதனுக்கு பக்தி இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல; ஏனெனில் சமுதாயம் அதனால் பாதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக சமுதாயம் வளருகிறது.
ஆனால், ஒழுக்கம் இல்லாமல் இருந்தால் சமுதாயம் கேடு அடைகிறது. தந்தை பெரியார் வெறும் எதிர்மறைக்காரர் அல்ல. ஆக்கரீதியாக ஒரு நல்ல சமுதாயத்தை _ மக்களை மக்களாக மதிக்கக்கூடிய உலக மானிட சமுதாயத்தை அய்யா அவர்கள் உருவாக்கினார்கள். மனித பண்பின் உச்சகட்டத்தில் இயக்கத்தை அய்யா அவர்கள் நடத்தினார்கள்.
எனவே, வாழையடி வாழையாக உங்களுடைய வருங்காலச் சந்ததிகளை பகுத்தறிவாளர்கள் குடும்பம் சிறந்த பல்கலைக்கழகம் போன்றது என்பதை பிறருக்கு எடுத்துக்காட்டும் வகையில் திகழ வேண்டும் என்று அன்போடு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று வாழ்த்தி என்னுரையை நிறைவு செய்தேன்.
விழாவில், கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, பேராசிரியர் இராமதாஸ் எம்.ஏ., பி.எல்., சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் எஸ்.டி.மூர்த்தி, விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம், வடஆற்காடு மாவட்டத் தலைவர் ஏ.டி.கோபால், மேலும் பல்வேறு கழக நிர்வாகிகளும், தோழர்களும் கலந்து கொண்டார்கள்.
29.06.1981 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் பட்டளிப்பு விழா மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவுக் கூட்டம் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவுக்கு நான் வருகை தந்தபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் மாணவிகளும் தோழர்களும் எழுந்து நின்று வரவேற்றக் காட்சி என்னையும், விழா மண்டபத்தையும் அதிரச் செய்தது.
விழா மண்டபமே நிறைந்து வழிய கூட்டம். கடந்த பத்து ஆண்டுகளில் இது குறிப்பிடத் தகுந்த நிகழ்ச்சியாக இருந்ததால் பல கருத்துக்களை மாணவர்கள் தெரிவித்தனர். நான் விழாவில் உரையாற்றும்போது, “சமூகநீதி’’ பற்றிப் பேசினேன்.
நம்முடைய சமுதாயத்தில் நாம் சாதியை யாரும் விரும்பவில்லை. ஜாதி ஒழிய வேண்டியதுதான். ஆனால், ஜாதி இருக்கிற காரணத்தால்; ஜாதி அங்கீகரிக்கப்பட்டு இருக்கிற காரணத்தினாலே, இந்திய அரசியல் சட்டத்திலே “Caste” என்ற வார்த்தை 18 இடங்களிலே வருகிறது. ‘‘Untouchability is abolished and its practise is forbidden by law’ என்று தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜாதி ஒழிக்கப்படவில்லை. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கி உணர்வு பூர்வமாய்ப் பேசினேன்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணை வேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு அவர்கள் உரையாற்றும்போது,
இப்போது நம்மிடையே வந்துள்ள உயர்திரு. வீரமணி அவர்கள் இந்தப் புனித பூமியிலிருந்து தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு குறிப்பாக நம்முடைய பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களுடைய சீரிய மாணவராக அவருக்குப் பின் அவருடைய மாபெரும் பணியினைத் தொடர்ந்து ஆற்றிவரும் தானைத் தலைவராக விளங்குகிறார் என்று சொன்னால் அது நம்முடைய பல்கலைக்கழகம் செய்த மாபெரும் பேறு என்பதை கோடிட்டுக் காட்ட ஆசைப்படுகிறேன்.
இங்கு இருக்கிற மாணவ மணிகள் அம்மாதிரியான வீரமணிகளாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்கிற சீரிய ஒரு கனவினைக் கண்டு, இவரும் மேலும் மேலும் உங்களுக்கு ஊக்கத்தைத் தருவதற்காகவும் சமூகத்திலே ஆக்கத்தை படைப்பதற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது மிகையாகாது. நான் தந்தை பெரியார் அவர்களுடைய மாணவர்களிலே ஒருவன் என்று நம்முடைய நண்பர் மோகன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அது உண்மைதான், நான் பச்சையப்பன் கல்லூரியிலே படித்தபோது முதல்முறையாக என்னுடைய அன்றைய மாணவர் திரு.கஜேந்திரன் அவர்கள் என்னை தந்தை பெரியாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்-படுத்தினார். அன்று அவரிடம் பேசிய அந்தப் பேச்சு இன்றுகூட என்னுடைய காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது; காரணம் அவர்களுடைய அந்த எண்ணம் அந்த அளவுக்கு நம்முடைய நெஞ்சத்தைத் தொடுவதோடு மட்டுமல்ல-. நம்முடைய உணர்ச்சிகளை எல்லாம் தட்டி எழுப்பக் கூடிய ஆற்றல் படைத்ததாக இருந்தது.
அதன் பிறகு தொடர்ந்து பல ஆண்டுகளாக அவரிடம் நான் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மாபெரும் வாய்ப்பினைப் பெற்றவன். இன்று நான் ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தனாக இருக்கிறேன் என்று சொன்னால்; ஒரு மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் (Back ward community) சேர்ந்த நான் இன்று சமூகநீதி தேவை என்று கர்ஜிக்கிற அளவுக்கு அந்த உணர்ச்சியைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு வித்திட்டவர் நமது தந்தை பெரியார் அவர்கள்தான். 95 ஆண்டுகள் அவர் வாழ்ந்தார் என்று சொன்னால் இறுதிவரையிலே சமுதாயத்திற்காக தன்னை தேய்த்துக் கொண்டவர் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை அளவுக்கு அவரிடம் கண்ட அந்த தைரியம் அந்த வீரதீரம், இனி யாரிடம் பார்க்கப் போகிறோம் என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்கிற வேளையிலே, அவரும் மிக அருமையாக தயார் செய்து நம்மிடையே, மேலும் தொடர்ந்து பணி ஆற்றக்கூடிய வல்லமை படைத்த இதோ ஒருவர் இருக்கிறார் என்று நம்முடைய வீரமணி அவர்களை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார் என்று குறிப்பிட்டு “துன்பம் வந்தாலும் துணிவாற்றி செய்க’’ என்று சொல்லுவதுபோல், அந்த அளவிலே நமது வீரமணி அவர்கள் எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும்கூட சமூகநீதிக்காகப் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டார்கள். ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பலரும் கலந்துகொண்டு அரங்கமே நிரம்பி வழிந்தது.
(நினைவுகள் நீளும்)