நல்லான் தன் வயலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். பயிரின் வளர்ச்சி அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதேநேரத்தில் பக்கத்து வயலுக்குரியவனான முகிலன் சற்று தாமதமாக வயல்வெளி நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் தமிழ்மணி, “என்ன நண்பா உன்னை வயல்பக்கம் பார்த்து பல நாள்கள் ஆகிவிட்டதுபோல’’ என்றான்.
“ஆமாம் தமிழ்மணி ஒரு வாரமாகிவிட்டது நான் வயல் பக்கம் வந்து. வெளியூர் போயிருந்தேன்.’’
தமிழ்மணி: எந்த ஊருக்கு, என்ன விஷயமாய்ப் போயிருந்தாய்? ஆளே சற்று வித்தியாசமாய்த் தெரிகிறாயே! புதிதாக கருப்பு ‘டி’ சர்ட்டெல்லாம் போட்டிருக்கிறாயே!
முகிலன்: ஆமாம், ஆமாம். ஒரு பயிற்சி வகுப்புக்குத்தான் போயிருந்தேன். என் மாமாதான் வற்புறுத்தி அனுப்பினார். அந்த வகுப்புக்கு கருப்புச் சட்டை அணிந்துதான் போகவேண்டும் என்றும் சொன்னார். அதனால்தான் அங்கே போய்தான் இதை வாங்கிப் போட்டுக் கொண்டேன்.
தமிழ்மணி: என்ன பயிற்சியப்பா அது? கருப்புச் சட்டைதான் போடவேண்டும் என்றால் பெரியார் கட்சியா?
முகிலன்: “ஆமாம், ஆமாம். பெரியாரியக் கொள்கைகளைத்தான் விளக்கினார்கள். ரொம்பவும் நன்றாகத்தான் இருந்தது. அவர்கள் சொல்வதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. நாம்தான் இதுவரை எவ்வளவோ மடத்தனமாகப் பல காரியங்களை நமது பெரியவர்கள் செய்தார்கள், நாமும் செய்வோம் என்று காரண காரியம் விளங்காமல் செய்து கொண்டிருக்கிறோம். அவற்றிலிருந்து மாற்றம் காண வேண்டும் என்றுதான் தோன்றுகிறது’’ என்று கூறியபடியே முகிலன் வரப்போரம் குனிந்து அங்கு பயிருக்குப் பக்கத்தில் வளர்ந்திருந்த ஒரு புல்லைப் பிடுங்கி வரப்பின்மீது போட்டான்.
தமிழ்மணி: “பயிரில் களையெடுப்பதுபோன்று நம் பழக்க வழக்கங்களிலும் களையெடுக்க வேண்டும் என்கிறாயா?’’ என்று கேட்டவன் முகிலன் குனிந்தபோதுதான் அவன் சட்டையின் பின்புறம், “மானமும் அறிவும் மனிதர்க்கழகு’’ என்று பொறித்திருந்த வாசகத்தைப் பார்த்தான். “அடடே இது என்னப்பா? மானமும் அறிவும் மனிதர்க்கழகு’’ என்று இருக்கிறது. இதில் என்ன புதுமை? இரண்டும் மனிதனுக்குத் தேவைதானே! இப்போது நாமென்ன மானமில்லாமல் அறிவு இல்லாமலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
முகிலன்: சற்று நிதானமாகச் சிந்தித்தால் அப்படி வாழ்வதாகத்தான் தெரிகிறது. களையெடுக்க வேண்டுமா? என்றுதானே கேட்டாய். இது களையெடுப்பதல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பயிரில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் களையிருந்தால் களை-யெடுக்கலாம். ஆனால், வயல் முழுதுமே களையென்றால் முழுவதும் அழித்தல்லவா மீண்டும் பயிர் செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியில் நான் கற்றவைகளை அசைபோட்டுப் பார்த்தால் அப்படி ஒரு புரட்சியே தேவைப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது.
தமிழ்மணி: என்னப்பா, புரட்சி கிரட்சி என்ற பெரிய வார்த்தையெல்லாம் பேசுகிறாய்!
முகிலன்: ஆமாம்! நண்பா அப்படித்தான். இப்போது நம் பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்கின்றபோது எதற்கும் நம்மால் அறிவுப்பூர்வமாக காரணகாரிய விளக்கங்கள் காண முடியவில்லையே! ஆமாம் அதிருக்கட்டும். நீ யாருடனோ நேற்று சண்டை போட்டாயாமே! என்ன காரணம்? யார் அவர்? எதற்காகச் சண்டை?
தமிழ்மணி: இல்லை நண்பா நேற்று நான் என் மேல்துண்டை எடுத்து வரப்பின் மீது வைத்துவிட்டு இப்படித்தான் வயலில் உலவி புல் எடுத்துக்கொண்டிருந்தேன். பக்கத்து ஊருக்குப் போகும் ஒருவர் பேண்ட் சட்டையுடன் மிக மிடுக்காக வரப்பின் மீது வந்தவர் என் துண்டை மிதித்துக் கொண்டே போனார். நான் அவரைப் பார்த்து என்னய்யா கண் குருடா? என்று கேட்டேன். அதற்கு அந்த நபர் நமக்கு என்னமோ இங்கிலீஷ் புரியாது என்று நினைத்தாரோ என்னமோ? உடனே, “யூ பாஸ்டர்ட் (சீஷீu தீணீstணீக்ஷீபீ) யாரைக் குருடு என்கிறாய்’’ என்று வேகமாகக் கேட்டான். பாஸ்டர்ட் என்றதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே ஓடிச் சென்று கையை ஓங்கிவிட்டேன். நாமென்ன அந்தளவுக்கு மானமற்றவர்களா?
முகிலன்: மெதுவாகச் சிரித்தான்.
தமிழ்மணி: “என்னடா நீயும் சிரிக்கிறாய். உன்னை ‘பாஸ்டர்ட்’ என்றால் உனக்குக் கோபம் வராதா?’’
முகிலன்: நிச்சயம் வரும். ஆனால், நம்மைத் தனி ஒருவரையே தேவடியாள் மகன் என்ற பொருள்படும்படி பாஸ்டர்ட் என்றால் கோபம் வருகிறதே! ஆனால் நம்மினத்தையே வேசிமக்கள், அதுவும் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று சாஸ்திரமே எழுதி வைத்து அதை இன்றுவரை அமல்செய்து வருகிறானே! அதைத் தட்டிக் கேட்கும் தைரியம் இல்லையே என்று அந்தப் பயிற்சியில் கேட்டபோது உண்மையிலேயே வெட்கித்தான் போனேன்.
தமிழ்மணி: என்னப்பா சொல்கிறாய்? நாம் பார்ப்பனன் வைப்பாட்டி மக்களா? எந்த மடையன் சொன்னான்?
முகிலன்: நாம் சில நாட்களுக்கு முன்னால் உரியடி சகிதமாய்க் கொண்டாடினோமே கிருஷ்ண ஜெயந்தி அந்தக் கிருஷ்ணனே கீதையில் சொல்லியிருக்கிறானாம். “நான்தான் இந்த நான்கு வருணத்தையும் படைத்தேன். நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது’’ என்று. அவைதான் பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன். சூத்திரர்கள்தான் நாம். சூத்திரன் என்றால் வேசிமக்கள் என்றுதான் அர்த்தமாம். இவைகளைக் கேட்கின்றபோது உனக்குக் கோபம் வரவில்லையா?
தமிழ்மணி: அது உண்மையாக இருக்குமானால் கோபம் மட்டுமா? அப்படிச் சொல்பவனை கிழித்து மாலையாகப் போடவேண்டும் என்றல்லவா தோன்றுகிறது.
முகிலன்: அது மட்டுமா காமக் களியாட்டக் கோமாளி கூறியதுமல்லாமல் அதுவே மனுதர்மம் என்னும் நூலில் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று எழுதிவைத்துக் கொண்டு நயவஞ்சகத்தனமாக நம் மக்களை படிக்க-விடாமலே அந்தப் பார்ப்பனப் பதர்களைச் சாமி சாமி என்று அழைத்துக்கொண்டு அவனுக்கு ஏவல்காரர்களாகவே வைத்திருந்தார்களே! பெரியார் தோன்றிய பின்தான் இந்தப் பார்ப்பனப் பாதகர்களின் கொட்டம் ஓரளவுக்கு அடங்கியது.
தமிழ்மணி: நாம் இன்னும் ஏராளமான இந்தப் பார்ப்பன அயோக்கியத்தனங்களை அறியாதவர்களாகவே உள்ளோம் என்பது தெரிகிறது.
முகிலன்: அறியாதவர்களல்ல நண்பா! அறிந்தவற்றைப் பற்றியே நாம் சுயஅறிவு கொண்டு சிந்திக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தமிழ்மணி: எதைச் சொல்கிறாய்?
முகிலன்: நாம் கொண்டாடுகின்ற ஒவ்வொரு விழாவும் பிள்ளையார் சதுர்த்தி முதல் தீபாவளி, ஆயுத பூசை போன்று அத்தனையும் ஆரியப் பார்ப்பனர்கள் நம் மீது திணித்தவைதான். நமது கிராமத்திலேயே ஈஸ்வரன் கோயிலில் ஆருத்திரா திருவிழா நடத்துகிறார்கள்.
தமிழ்மணி: ஆம். அதிலென்ன சந்தேகம்.
முகிலன்: சந்தேகமல்ல. ஆபாசம். அந்த திருவிழாவின் முதல் நாள் என்ன செய்கிறார்கள்? நடராசரைச் சிங்காரித்து மேளதாளங்களுடன் தூக்கி வந்து அடுத்த தெருவில் உள்ள சுப்ரமணி வீட்ல வைத்துவிட்டுச் சென்று பின் விடியற்காலை வந்து தூக்கிச் செல்கிறார்களே ஏன்? முன்பெல்லாம் தேவதாசி முறையிருந்ததாமே! அதன் அடையாளமாகத்தானே இதைச் செய்கிறார்கள். அப்படியானால் அன்று இரவெல்லாம் நடராசர் சுப்ரமணி மனைவியுடன் கூடிக் குலாவினார் என்று அர்த்தமா? அந்தக் காம லோலனுக்கு பார்வதி, கங்கை என்ற மனைவிகளிருக்க அது போதாமல் பல இடங்களில் காமம் நுகர முயன்று மூக்குடைபட்ட கதைகளெல்லாம் மிகவும் ஆபாசமாக உள்ளனவே.
மறுநாள் அந்த நடராசர் வீதியுலா என்று அவரைத் தூக்கி வரும்போது அவர் தாசிவீட்டில் தஞ்சம் கிடந்த அடையாளமாக நமது நெற்றியிலெல்லாம் சாந்து பொட்டு வைக்கிறார்களே! இது அதைவிட ஆபாசம் இல்லையா? அதைக் கடவுள் என்று வணங்க வேண்டுமா? நானாவது மணமாகாதவன். நீ மணமாகி ஒரு குழந்தைக்குத் தகப்பன். நீ வேசி வீடு சென்றால் உன் மனைவி உன்னைக் கும்பிடுவாரா? ஊர்தான் உனக்கு விழா எடுக்குமா? இது எவ்வளவு கோமாளித்தனம்?
தமிழ்மணி: கோமாளித்தனமல்ல! முட்டாள்தனம். நாம் தெளிவு பெறவேண்டும்.
முகிலன்: பயிற்சி வகுப்புக்குச் சென்றுதான் தெளிவுபெற வேண்டும் என்பதில்லை. தற்போது நாம் மானமும் அறிவும் இல்லாமலா இருக்கிறோம் என்று கேட்டாயே! இப்போது புரிகிறதா? உண்மையான பொருளில் நாம் மானமும் அறிவும் இல்லாமல் ஏதோ போலியாக ஒரு அடிமை வாழ்வுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று. எனவே, இயக்கப் புத்தகங்களை வாங்கிப் படித்தாலே நாம் மானமும் அறிவும் பெறுவதோடு பெரியாரையும் நன்கு புரிந்தவர்களாக அவர் கொள்கைகளைப் பரப்பிடவும் முனைவோம்.
– கெ.நா.சாமி