மனுமுறை புகுத்த முயற்சி செய்கிறார் ஆச்சாரியார்

செப்டம்பர் 16-30

திராவிடர் கழகம் முக்கியமான பிரச்சினை-யாக  எடுத்துக் கொண்டிருப்பது ஆச்சாரியார் புகுத்தியுள்ள குலக்கல்வித் திட்ட ஒழிப்பு வேலையாகும். நான் அப்போதே சொன்னேன்: அது ஜாதியைக் காப்பாற்றுகிற மனுதர்மத் திட்டம் என்று.

அதாவது ஒரு ஜாதியார்தான் படிக்க-வேண்டும். பார்ப்பனர்தான் படிக்க உரிமையுண்டு என்ற தத்துவம் கொண்டது ஆகும். இதுதான் மனுதர்ம சாஸ்திரம் கூறுவது. எவன் சூத்திரனுக்குப் படிப்புச் சொல்லித் தருகிறானோ அவனே பாவி; சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனு தர்மத்தில் காணப்படுவது. ஆனால் வெள்ளைக்காரன் காலத்தில்  மக்களின்  நிலைமையை அறிந்து எல்லோருக்கும் கல்வியளிக்க ஏற்பாடு செய்தான். அதனால் நாலாவது ஜாதி, எனப்பட்டநாம் 100-க்கு ஓரளவுக்கு 10 பேராவது படிக்கிற நிலைமைக்கு வந்தோம். அதனால் பார்ப்பானை சாமி என்று முன்னர் குறிப்பிட்ட காலம்போய், அவனை அந்தப்படி அழைப்பதற்கு வெட்கப்படும் படியான  நிலைமை ஏற்பட்டுள்ளது. நல்ல அளவுக்குக் குறைந்துவிட்டது. பிராமணன்  என்று கூற கூட வெட்கப்படுகின்றனர்.. ஏதோ பட்டிக்காட்டில் தெரியாத காரணத்தால் கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் சிலர். இன்னுஞ் சிலர் மான உணர்ச்சி இல்லாமல் சாமி என்கிறார்கள். அதுவும் மாறிக்-கொண்டிருக்கிறது.

எனவே இவர்களை இந்தப்படி விட்டுக் கொண்டு போனால் தப்பு; நாம் பிழைக்க முடியாது; இனி வரப்போகிற சமுதாயத்தை அடக்கிப் பழையபடி பார்ப்பானைச்  சாமியாக்-கலாம் என்ற உத்தேசத்துடன் தான் ஆச்சாரியார் இந்த அரை நேரக் கல்வித் திட்டத்தைப் புகுத்தியுள்ளார். இவன் (திராவிடன்) அப்பன் தொழிலை மறந்து விட்டு,  ஜாதி முறையை விட்டுவிட்டு, படித்து விட்டு உத்தியோகம் கேட்கிறான். கொடுக்காவிட்டால் ரகளை பண்ணுகிறான். ஆனதினால் சூத்திரன், கிராமத்துக்காரன் பாதிநேரம்தான் படிக்க வேண்டும். மிகுந்தபாதி நேரம் அவனவன் வேலையைச்செய்யணும், உத்தியோக வேலை செய்யக்கூடாது. இதுதான் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம். அவனவன் ஜாதித் தொழிலைச் செய்யாததனால் தொழிலின் பேரில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார். இரண்டாவதாக இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்குக் காரணம் சூத்திரன் படிப்பதை ஒழித்தால் பழைய வருணாச்சிரமம் தானாக வந்து விடும் என்ற எண்ணம் தான்.

இப்போது ஆச்சாரியார், கிராமங்களில் மட்டுமல்ல, நகரத்தில்கூட இந்தப்பகுதி நேரக் கல்வி என்று சொல்லிவிட்டார். என்ன அவசியம்  இந்தத் திட்டத்திற்கு? மற்றும் ஆசிரியர்களுக்கு எல்லாம் உத்தரவு; பாதி நேரத்தில் அந்தப் பையன் அப்பன்  வேலையைச் செய்கிறானா? அல்லது மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறானா? – சரி!  அந்த நேரத்தில் பிரைவேட்  (தனிப்படிப்பு) சொல்லிக் கொள்ளு-கிறானா? அப்படியானால் நிறுத்து என்றார். ஆசிரியர்கள் கணக்குச் சொன்னார்கள், 100க்கு 30 பேர்தான் வருகிறார்களென்று. ஆச்சாரியார், அப்படியானல் 100க்கு 30 பேர்தான்  வருகிறார்களென்றால் உபாத்தியாயர்கள் வீட்டுக்குப் போய்விடுங்கள் என்று சொன்னார். ஆனதால் வாத்தியார்கள் தங்கள் வேலை போய்விடுமே என்று பயந்து வராத பையன்களின் பெயர்களை யெல்லாம் அதிகமாக எழுதி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு ஆச்சாரியார் இப்போது அதிகப் பிள்ளைகள் வருகிறார்கள் என்கிறார்.

உத்தியோகத்திற்கு வேண்டுமென்றால் அதிகம் படித்தாக வேண்டுமாம். முன்பெல்லாம் சாதாரணமாக மெட்ரிகுலேஷன் படித்தால் போதும் வேலைக்கு; சாதாரணமாக 8,9 வருடம் படித்தால் வேலைக்குப் போதும் என்றிருந்த படிப்பை 15, 20 வருடமாகச் செய்துவிட்டார்கள். அப்படியும் நம் ஆட்கள் வந்துவிடவே இதை அடக்க வழி என்ன என்று பார்த்து செலக்ஷன் (இடைத்தேர்வு) என்பதாக பத்தாவது வகுப்பில் வைத்தனர். அதுவும் போதாதென்று எஸ். எஸ். எல். சி. பாஸ் செய்து சர்டிஃபிகேட் (உயர்பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி) மட்டும் இருந்தால் போதாது. மேற்கொண்டு படிப்பதற்கு மார்க்கு (மதிப்பெண்) தேவையென்றார்கள். சாதாரண சப் -இன்ஸ்பெக்டர் (காவல்துறை துணை ஆய்வாளர்) வேலைக்கு பி.ஏ. பட்டம் என்று ஆக்கிவிட்டனர். இப்படியெல்லாம் செய்தால் படிக்க மாட்டான் திராவிட மாணவன் என்றுதான். அப்படியும் சமாளித்து வந்தார்கள். நம் ஆட்களுக்கு வேலை கொடுக்காமல் அவர்களே ஏகபோக உரிமையாகச் செய்து கொண்டார்கள்.  நாம் கூச்சல் போட்டவுன் இது பெரிய தலை வேதனையா யிருக்கிறதே என்று ஆச்சாரியார் கவலைப்பட்டார். நாம் 100க்கு 97 பங்கு வரிகொடுக்கிறோம். ஆனால் நாம் மாடு மேய்க்க வேண்டும்; பார்ப்பனர்கள்தான் உத்தியோகம் செய்ய வேண்டும் என்றால் இது என்ன நியாயம்? ஒண்ட வந்தவன் நம்மை (திராவிடரை) ஆள்வது; நாம் மடுமேய்ப்பது என்றால் எதற்காக?

நாம் இன்றையதினம் எடுத்துக்கொள்ளும் முயற்சியெல்லாம் நம் மக்கள் மனிதத் தன்மை பெறுவதற்குத்தான். எப்படியாவது இந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி நம் மக்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அந்தப்படி பார்க்கப் போனால் சட்டப்படி நடந்தால் ஒரு பயனுமில்லை என்றுதானே சொல்ல வேண்டும். ஆச்சாரியார் கையில் தானே சட்டம் இருக்கிறது? இவர்கள் சட்ட சபைக்கு வந்து செய்யட்டுமே என்று ஆச்சரியார் கூறுவார். இப்போது சட்டசபைக்குச் சென்றவர்கள்  என்ன சாதித்து இருக்கிறார்கள்? பார்த்தோமே, இந்தக் கல்வித்திட்டம் கொண்டு வந்தது தப்பு என்று பெருவாரியானவர்கள் சொன்னார்கள். என்ன ஆச்சு? இதை நிறுத்திவிட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஜனநாயகப்படி, பார்த்தால் அந்த முடிவுப்படித்தான் நடத்திருக்க வேண்டும் ஆச்சாரியார். ஆனால் இது ஒரு சிபாரிசு என்று சொல்லி மழுப்பிவிட்டார். ஆச்சாரியாரே எலக்ஷனில் (தேர்தலில்) நின்று வந்தவரல்ல. என்ன ஜனநாயகம் மக்களுக்கு, என்ன சங்கதி புரிகிறது? நான்கு அணா கொடுத்தால் ஓட்டுப் (வாக்குப்) போட்டு விடுகிறார்கள். பல இடத்தில் நடந்திருக்கிறது. இல்லையென்று எந்த காங்கிரசுக்காரராவது மறுக்கட்டுமே? ஆகவே குலக்கல்வித் திட்டத்தைப் பொறுத்த போராட்டத்தில் சட்டத்தை எதிர்பார்த்தால் ஒரு காரியமும் நடக்காது. சட்டசபை மூலம் இதை மாற்றலாம் என்றால் முடியாது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். அதுவும் சட்டத்தை மீறினால் தான் முடியும். புரட்சி  என்றால் என்ன அர்த்தம்? சட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன காரியம் நடக்கும்? ஆகவே இந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடத்தப்படவிருக்கிற புரட்சி, சட்டத்தை மீறியதாக இருக்கும். ஈரோட்டில் ஆச்சாரியாருக்கு இந்தத் திட்டத்தை வாபஸ் (திருப்பி) வாங்கும்படி 3 மாத நோட்டீஸ்  (அறிவிப்புக் கெடு) கொடுத்தோம். ஆனால் ஆச்சாரியார் இந்தத் திட்டம் கிராமத்தில் மட்டுமல்ல, நகரத்திலும் வைத்துக்கொள் என்கிறார்.

28.2.1954  காஞ்சிபுரம் செங்கற்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழக முதலாம் ஆண்டுவிழா பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு (‘விடுதலை’ – 7.3.1954)

– தந்தை பெரியார்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *