தீபாவளியை மாற்றி நரகாசுரன் விழாவாகக் கொண்டாடுவோம்!

செப்டம்பர் 16-30

 

 

 

திருவோணம் என்று கேரளத்தில் மலையாளிகளின் பண்டிகையாகக் கொண்டாடப்படும் விழாவின் கதை என்ன?

தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்வார்; இந்த நாட்டில் அரசியல் போராட்டங்கள் என்ற பெயரில் நடந்தவை எல்லாம் தேவாசுரப் போராட்டங்களே.

தேவர்களுக்கும் (ஆரியர்களுக்கும்), அசுரர் களுக்கும் (திராவிடர்களுக்கும்) நடைபெற்ற போராட்டங்களே புராணக் கற்பனைகளில் பிரதிபலித்துள்ளன!

கேரளத்தவர் கொண்டாடும் ஓணம் திருவிழா பற்றிய கதை என்ன?

மக்கள் மகாபலியின் பக்கம்

மக்கள் மகாபலியின் பக்கம்’ என்ற தலைப்பில் கேரள முதல்வரின் ஊடக ஆலோசகர் என்.பிரபா வர்மா அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உள்ள ஒரு முக்கியப் பகுதி:

“மகாபலி அசுரச் சக்கரவர்த்தியாக இருந்தார் என்றல்லவா கற்பனை செய்யப்படுகிறது. சமூகத்தில் சமத்துவம் நிறுவியதில் சகிப்புத்தன்மையிழந்த தேவர்கள் அந்த அசுரச் சக்கரவர்த்தியை வஞ்சனையின் மூலமாக பாதாளத்திற்குள் மிதித்துத் தள்ளினார்கள் என்றும் அந்தக் கற்பனை கூறுகிறது. எதுவாக இருந்தாலும் எல்லாத் தெய்வங்களையும் தள்ளி வைத்து ஓணம் நாள்களிலாவது மலையாள மக்கள், வஞ்சனையின் மூலமாக நாடு கடத்தப்பட்ட மகாபலி என்ற அசுரச் சக்கரவர்த்தியின் பக்கம்தான் நிற்கிறார்கள். அங்குதான் நீதி கிடைக்கிறது.

எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலகட்டம்

ஆனால், மகாபலியை தள்ளி வைத்து “வாமன தினமாக’’ ஓணம் கொண்டாட வேண்டுமென்று வாதிப்பவர்களும் இன்று உள்ளனர். அவர்கள் எல்லாத் துறைகளிலும் வாமன ஆட்சியை விரும்புகிறவர்கள். அத்தகையவர்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கால கட்டமும்தான் ஓணம் கூறும் செய்தி.’’

அந்த வாமன ஆட்சிதான் இப்போது மத்தியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற மனுதர்மப் பார்ப்பன வாமன அவதார ஆட்சி!

அவதாரங்கள் கதையின் தத்துவங்கள் ஆரியர்கள் எப்படி சூழ்ச்சி, தந்திர, நயவஞ்சக வியூகங்களால் திராவிடர்களை வென்றனர் என்பதை அடிப் படையாகக் கொண்ட கற்பனைகளாகும். அந்தக் கற்பனைகள் தோன்றுவதற்கான மூல வேர்தான் அன்று நிகழ்ந்த ஆரிய – திராவிடப் போராட்டம்!

அசுரர்களின் வெற்றியாகக் கருதி – மாபலி மீண்டு வந்த நாளை ஒரு திருவிழாவாக…

18-19 ஆம் நூற்றாண்டில் மகாராட்டிரத்தில் சமூகநீதிக் குரலை எழுப்பிய, ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க வலையை அறுத்த மகாராட்டிரப் புரட்சியாளர் ஜோதி பாபூலே அவர்கள் இந்த மாபலி சக்கரவர்த்தி கதையை நமது திராவிட பார்ப்பனரல்லாதவர்கள் அசுரர்களின் வெற்றியாகக் கருதி -_- மாபலி மீண்டு வந்த நாளை ஒரு திருவிழாவாகக் கொண்டாட உற்சாகப்படுத்தி, அது இன்றும் அங்கே நடைபெறுகிறது _- தத்துவம் மறைக்கப்பட்ட நிலையில்!

தீபாவளி என்ற பண்டிகையின் கற்பனை அவதாரக் கதை நரகாசுரனை அழித்தது; ஒழித்தது என்பதும் இதே அடிப்படைக் கருத்துகளைக் கொண்டதேயாகும்!

தந்தை பெரியாரின் கருத்தும் அதே!

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரக் கற்பனைகளின் மூல ஊற்றே ஆரிய சூழ்ச்சியால் திராவிடரை அழித்ததே என்பதை தந்தை பெரியாரும் மிகச் சிறப்பாக விளக்கினார்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரும் விளக்கியுள் ளார்கள்!

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்தவர்களை அழித்த கதையை, பாதிக்கப்பட்ட மக்களின் உற்றாரும் உறவினர்களுமே கொண்டாடி மகிழவே நரகாசுரன் கதையில் நான் இறந்ததைக் கொண்டாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்ததாக அதீத, அயோக்கியத்தன கதை முடியும் _- அதை இன்றளவும் பின்பற்றும் அப்பாவி ஏமாளி அடிமைகளான சூத்திர _- பஞ்சம _- திராவிட மக்களின் பரிதாப நிலை!

மாபலி மன்னனைச் சிறப்பிக்கும் நாளான ஓணம் பண்டிகையை திசை திருப்பவே வாமனனைப் பண்டிகையாக்கும் _- நரகாசுரன் அழிக்கும் விழா!

“தீபாவளியை மாற்றி’’ நரகாசுரன் விழா!

இதை மாற்றி மாபலி விழாவை ஓணமாகக் கொண்டாடுவதைப்போல “தீபாவளியை மாற்றி’’ “நரகாசுரன் விழா” -_ அநீதிக்கு எதிரான போரின் தொடர்ச்சி விழா என்று அசுரர் திருவிழாவாக அதையொட்டிய சில நாளில் உணர்ச்சியுள்ள திருவிழா – பற்பல ஊர்களில் விருந்துகளுடன் _- மீட்பு நாளாகக் கொண்டாடுவது, இவ்வாண்டு தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும், உணர்வுள்ளோரே, ஒன்று சேர்ந்து வாருங்கள்!
அக்கருத்தில் ஓணத்திற்கு நமது வாழ்த்துகள்!

– கி.வீரமணி
ஆசிரியர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *