கும்பிடுறேன் சாமிகளை கோட்டையில் அமர்த்தியவர்!

செப்டம்பர் 01-15

அய்யா அவர்களின் 139ஆவது பிறந்த நாள். பிறந்த நாள் எல்லோருக்கும் கொண்டாடு வதற்கும், அய்யா அவர்களுக்குக் கொண்டாடு வதற்கும் ஆயிரமாயிரம் வேறுபாடு உண்டு.

தாய்க்கும் தந்தைக்கும் விந்து வெதுப்பில் உதிர்ந்து, பனிக்குடம் நிறைந்து பத்து மாதம் பொறுத்து, வெளியில் தள்ளப்பட்டு, வடிவமாய் வருவது இயல்பு. ஆனால், வந்த பின்பு நீ யார் என்ற கேள்விக்கு என்ன பதில்?

பிறந்தேன், வாழ்ந்தேன், இறந்தேன் அவ்வளவுதானா? இல்லை தோழர்களே!

பிறந்த நிலையில் வளர்ந்து, தான் கண்ட சமூகத்தில் தன் கண் எதிரே நடக்கும் அடக்குமுறைகளைக் கண்டு பொங்கி எழுந்து தன் பிறப்பையே இந்த சமூக மேம்பாட்டிற் கென்று உறுதிமொழி கொடுத்த தலைவர் யார்?

அவர்தான் பெரியார்.

“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகிலுள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்கொண்டு அதே பணியாய் இருப்பவன்’’ என்று பிரகடனம் செய்தார்.

இந்தப் பிரகடனத்தில், திராவிட சமுதாயத்தை உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல, “மானமும், அறிவும்’’ உள்ள சமுதாயம் என்றார். அப்படியென்றால், மானமும், அறிவும் அற்றுதான் இருந்ததா திராவிட சமூகம் என்று கேட்பான் இன்றைய ‘பேஸ்புக்’ இளைஞன். அவர்களுக்கு தீர்க்கமாய்ச் சொல்லுவேன். ஆம்! என்று.

பெரும்பாலோர் பிறப்பில் இந்தச் சமூகம் பெறுவது அதிகபட்ச சுமை மட்டுமே! பிள்ளை பெறுவது சராசரி மனிதனின் சாதனை. ஆனால்,  பெரியாரின் பிறப்பு அப்படியா? தந்தை பெரியார் மட்டும் பிறந்து இருக்காவிட்டால் நான் எந்த நிலையில் இருந்து இருப்பேன்? இந்தச் சமூகம் எப்படி இருந்திருக்கும்? என்று எண்ணிப் பார்க்கவே முடியாது.

சமூகத்தில் மானம், அறிவு கொடுப்பது என்ன? அவ்வுளவு எளிதா? ஆண்டாண்டுக் காலமாய் அடிமைப் புழுக்களாய், நக்கிக் குடிக்கும் நாய்களாய், பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், ஆமை போல அடங்கி, ஒடுங்கி இருந்தவனை, தெருவில் நடக்க, இடுப்புக்கு பின் விளக்கமாற்றோடும், கழுத்தில் எச்சில் சட்டியோடும் நடந்து, தன் அடிமைத்தனத்தைப் பெருமையோடு ஏற்றுக்கொண்டு, “ஆமா சாமி, ஆகட்டும் சாமி, கும்பிடுறேன் சாமி’’ என எல்லாவற்றிலும் அடிமைத்தனம் ஏறி, முதுகெலும்பு வளைந்துபோன மனிதனின் முதுகெலும்பை மட்டும் அல்ல, அவன் பிறந்த சமூகத்தின் முதுகெலும்பையும், மானம், அறிவு உள்ள சமூகமாய் மாற்றியவர்தான் அய்யா.

இன்றைய இளைஞர்களுக்கு அய்யா என்றால் கடவுள் மறுப்பாளர் என்ற உணர்வுதான் மேலோங்கி நிற்கின்றது. ஆனால், அவர் கடவுள் மறுப்பை மட்டும் செய்யவில்லை. “நான் ஏன் கடவுள் மறுப்பை மேற்கொண்டேன் என்பதற்கு’’ அவரே சொன்னது:

“ஜாதிதான் மனித அடிமைக்கு முதல் காரணமாய் உள்ளது. ஜாதியின் அடித்தளமாக மதம் உள்ளது. ஆகவே, கடவுள் மறுப்பை மேற்கொண்டார் அய்யா. இன்று முகநூலில் அய்யாவை ஆயிரம் விமர்சிக்கும் ‘பேஸ்புக்’ தம்பிகளுக்கு:

*  உங்கள் முப்பாட்டன் தெருவில் நடக்கும் உரிமையும்
*    உங்கள் பாட்டன் இடுப்பில் வேட்டி கட்டுவதற்கான உரிமையும்
*    உங்கள் அப்பா மேல்சட்டை போடுவதற்கான உரிமையும்
*    ஏன், நீங்கள் கணினியைத் தொட்டு ‘பேஸ்புக்’கில் அவரை விமர்சிக்கும், உரிமையையும் பெற்றுக் கொடுத்தவர் “அய்யா மட்டுமே’’ என்பதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவேன்.

“1950களில் சென்னை மாகாணத்தின் மேயர் சர்.பிட்டி.தியாகராயரைக் கோவில் குடமுழுக்கில் தடுத்து நிறுத்திய நிலை கண்டும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோவில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டபொழுது, கடவுளே இல்லை என்ற கொள்கை உறுதிகொண்டவரானாலும், கடவுள் இருக்கும் இடம் என்று சாமானியன் நம்பும், அந்த இடத்தில் நிகழும் அடிமைத்தனத்தை உடைத்து கோவிலுக்குள் அழைத்துப் போனது அய்யாதான்!

“சூத்திரன் கல்வியைக் காதால் கேட்டால், ஈயத்தைக் காய்ச்சி காதிலே ஊற்று! கல்வியை மனதில் பதித்தால் நெஞ்சைப் பிள! கற்ற கல்வியை நாவால் சொன்னால் நாக்கை அறு!’’ என்று இந்து சாஸ்திரங்கள் சட்டம் போட்டு செயல்படுத்திய கொடுமை வரலாறு. இன்று இருக்கும் இளைய தலைமுறையினருக்குத் தெரியுமா?

பேருந்தில் புலையருக்கு இடம் இல்லை. கோவிலுக்குள், பஞ்சமர், புலையர், ஒடுக்கப் பட்டவர், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் யாருக்கும் அனுமதி இல்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. உன் தாய்மொழியைப் போற்றும் உரிமைகூட உனக்கு இல்லை. கட்டியவன்கூட கோயில் கருவறைக்குள் செல்லும் உரிமையில்லை; கருத்துக் கூறும் உரிமையில்லை. எதிர்த்துப் பேசும் உரிமை அறவே இல்லை போன்ற உரிமைகள் அற்ற அடிமைத்தளையை அறவே மாற்றி அனைவருக்கும் உரிமை கிடைக்கச் செய்தவர் தந்தை பெரியார் அல்லவா!.

சாதனைகளை மட்டும் அல்ல. ‘பேஸ்புக்’ தம்பிமார்கள் அவரை எதிர்த்துக் கருத்துப் பதிவிடும் உரிமையை அவர்தான் பெற்றுக் கொடுத்தார்.

நண்பர்களே! அய்யாவின் பிறப்பை இவ்வளவு கொண்டாடக் காரணம், அந்த மனிதர் மூத்திர சட்டியோடு நமக்கு உழைக்கவில்லை என்றால், கழிப்பிடம் கழுவும் தந்தைக்குப் பிறந்த மதுமித்தா மருத்துவர் ஆகி இருக்க முடியாது. இன்று ‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம். பார்ப்பன சூழ்ச்சி என்பது எல்லா நிலைகளிலும் மற்றவர்கள் கீழானவர்களே என்பதுதான். அதனை உடைக்கவே அய்யா போராடினார்.

அவர் போராட்டம் முதலில், மானம் பெற, பிறகு அறிவு பெற, அதனைக் கொண்டு கல்வி பெற, கல்வியின் மூலம் மானமும், அறிவும் பெற்ற சமுதாயமாக உயர்த்திட எண்ணினார், உயர்த்தினார். இன்று அவரின் “கைத்தடி’’ மதவாத சூலத்திடமிருந்து நம்மைக் காக்கும் ஆயுதமாக இருந்துகொண்டே இருக்கிறது.
முதலில் கேட்ட கேள்விக்கு விடை: “தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் பிரசன்னா எங்கோ ஒரு மூலையில் அடிமையாக பண்ணை வேலை பார்த்துக் கொண்டு இருப்பான். அந்த நன்றி உணர்வில் எழுதுகிறேன். ‘கும்புடுறேன் சாமி’ என்ற நிலைமாறி, ‘வணக்கம்’, ‘Hi’, “Hay dude” என்று சுதந்திரமாய் சொல்லி வாழ வழி செய்தவர். இவை வெறும் வார்த்தை மாற்றம் மட்டும் அல்ல! இவை ஒரு
வர்க்கத்தின் தலைமுறை மாற்றம்! வாழ்க தந்தை பெரியார்!
                                                                                                                                                                                              
                                                                                                                                       
                                                                                                                            –   தமிழன் பிரசன்னா

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *