உலகமயச் சூழலில் உயர்ந்து நிற்கும் பெரியார் சிந்தனைகள்!

செப்டம்பர் 01-15

அந்த உணவுக்கூடம் முழுவதும் இளைஞர்கள். அவர்களில் ஆண்கள் _ பெண்கள் என்ற பேதம் உடையிலோ, பேச்சிலோ, உணவு பரிமாறிக் கொள்வதிலோ வெளிப்படவில்லை. இரு பாலினருமே சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள், விவாதிக்கிறார்கள். கருத்து மோதலுக்கிடையில் நட்பைப் பாதுகாக்கிறார்கள். அத்தனையும் இந்த மண்ணில்தான்.

ஆண்கள் என்றால் தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொள்ளலாம். பெண்கள் என்றால் கணுக்கால்கூடத் தெரியாத அளவுக்கு தழையத் தழையப் புடவை கட்ட வேண்டும். ஆண்கள் கூடிப் பேசும் இடத்தில் பெண்கள் இருக்கக் கூடாது. சாப்பிடும் நேரம் என்றால் பெண்கள்தான் சமைக்க வேண்டும். ஆண்களுக்குப் பரிமாற வேண்டும். அவர்கள் சாப்பிட்ட பிறகே பெண்கள் சாப்பிட வேண்டும். இதுதான் பண்பாடு _ பழக்கவழக்கம் எனத் தலைமுறை தலைமுறையாக வற்புறுத்தி நிலைநி-றுத்தப்பட்ட மண்ணில்தான் மேலே குறிப்பிட்ட மாற்றங்கள்.

ஆண்களைப் போல பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப பேண்ட்_சட்டை அணிந்துகொள்ளலாம். ஆண்களைப் போல பெண்களும் தலைமுடியை ‘கிராப்’ வெட்டிக் கொள்ளலாம். வீடுகளில் உள்ள சமையலறையில் பெண்களை அடைத்து வைத்து அவர்களின் நேரம் _ உழைப்பு _ பொருளாதாரம் எல்லாவற்றையும் வீணடிப்பதைத் தவிர்க்கும் வகையில், பொது சமையல்கூடங்களை உருவாக்கி, அங்கே எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடலாம். மிச்சமாகும் நேரத்தைப் பயன்படுத்தி, பொருளாதார மேம்பாட்டுக்கும் தற்சார்புக்கும் உரிய வகையில் ஆணுக்கு இணையாகப் பெண்ணும் உழைக்கலாம் என்ற கருத்தை இந்த மண்ணில் முன் வைத்தவர் தந்தை பெரியார்.

அவரது கருத்துகள் இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதால்தான் நவீன தொழில்நுட்ப உலகின் தலைமுறையினர் ஆண்_பெண் இரு பாலினரும் சரிசமமான முறையில் பணியாற்றி, ஒரே வகையான உடைகளை உடுத்தி, தங்கள் எண்ணங்களை பேச்சின் மூலம் வெளிப்படுத்தி, பொதுவான உணவுக்கூடத்தில் சாப்பிட்டு, தற்சார்பு நிலையுடன் பொருளாதார மேம்பாட்டிற்குத் துணை நிற்பதை இதே மண்ணில் காண முடிகிறது.

மென்பொருள் _ தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றும் இருபால் இளைஞர்களில் எத்தனை பேருக்குத் தந்தை பெரியாரைத் தெரியும். அவருடைய கருத்துகளை எத்தனை பேர் படித்திருப்பார்கள். அவருடைய கொள்கைகளையும் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள். சமூக மாற்றத்திற்கான அவருடைய அயராத உழைப்பை எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள் எனப் பார்த்தால் மிக சொற்ப அளவிலேயே இருக்கும். தன்னை அறியாத தலைமுறைக்கும் தன் சிந்தனைகளால் பலன் தந்து கொண்டிருப்பவர்தான் தந்தை பெரியார்.

அவருடைய இந்தத் தொலைநோக்குச் சிந்தனையை 1972லேயே உணர்ந்த அய்க்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பு, “புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசி யாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’’ எனப் பாராட்டியது.

இளம் தலைமுறையினர் மிக வேகமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் இயந்திரமயமான அவசர யுகத்தில் வாழ்கிறவர்கள். அவர்களுக்கு தங்களின் முந்தைய தலைமுறையின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமோ நேரமோ இல்லை. அதனால்தான் இடஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கான செயல்பாடுகளின் முழுப் பரிமாணம் புரியாமல், அவற்றை எதிர்க்கும் மனநிலையில் கூட பலர் இருக்கிறார்கள்.

எனினும், நடைமுறை வாழ்க்கையில் அவர்களின் துறைசார்ந்த பணிகளில் ஜாதி ஏற்றத்தாழ்வின்றிப் பழகும் தன்மை இருக்கிறது. ஜாதி அடையாளமற்ற ஒரு சமுதாயம் முழுமையாக அமைய வேண்டும் என்ற பெரியாரின் கோட்பாட்டினை இவர்கள் அறியாவிட்டாலும், ஒரு பணியை மேற்கொள்ளும் இடத்தில் அதற்கான ஆற்றல்தான் அவசியமே தவிர, அந்த ஆள் என்ன ஜாதி என்பதன் அடிப்படையில் தகுதி _ திறமைகள் உருவாகிவிடாது என்பதை இளந்தலைமுறை உணர்ந்திருக்கிறது.

நகை அலங்காரங்களில் ஆர்வம் குறைந்து, வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கான சேமிப்புகளில் கவனம் செலுத்தும் இளையோருக்குப் பெரியார் துணை நிற்கிறார். ஒரு துறை புனிதமானது, இன்னொரு துறை தாழ்வானது எனக் கருதாமல், எந்தத் துறை எந்தளவு வாழ்வுக்குத் தேவை என்கிற பகுத்தறிவுப் பார்வை இளைய தலைமுறையிடம் இருப்பதால், புனிதப் பூச்சுகளோ ஒப்பனையோ அவர்களிடம் வெளிப்படுவதில்லை. நகரங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள், கிராமங்கள் போன்ற இயற்கை வளம் இரண்டும் வாழ்வின் தேவை என்பதை உணர்ந்து அனுபவிக்கும் தலைமுறையினராக இருக்கிறார்கள்.

சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி, அதற்கேற்ற வேலை, கை நிறைய ஊதியம், வாரக் கடைசியில் ஓய்வு, அதனை அனுபவிப்பதற்க்கேற்ற இடங்கள், இயற்கைப் பேரிடர்களின்போது தாராளமாக உதவிக்கரம் நீட்டும் சமூக அக்கறை, சமூக ஊடகங்கள் வாயிலான உரையாடல்கள், ஆயிரமாயிரம் சிந்தனைகளின் உடனடி வெளிப்பாடுகள் என அடிமைத்தனம் தகர்த்த சுயமரியாதைமிக்க தலைமுறை உருவாகி யிருக்கிறது.

பெரியாரை அறியாமலேயே பெரியாரின் சிந்தனைகளின் தாக்கத்தால் அவர் காண விரும்பிய சமுதாயத்தை நோக்கிய பயணமாக தலைமுறை மாற்றமாக இதனைக் கருதலாம். அவசர யுகத்தின் இயந்திரகதியில் செயல்படும் இளையோரிடம் குறைகள் _ பிழைகள் இருப்பதும் இயற்கை. அவற்றையும் மீறி, உலகின் போக்கை உற்று உணர்ந்து வாழும் அறிவியல் பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் வாழும் இவர்களிடம் பெரியாரின் பணியின் விளைவுகளையும், சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதையும் கால வளர்ச்சியில் அவை கட்டாயம் ஏற்கப்பட வேண்டியவை என்பதையும் காணலாம். இளைய தலைமுறையின் நோக்கும், போக்கும் பெரியாரின் சிந்தனை வயப்பட்டவை என்பதையும் அறியலாம்.

எனவே, பெரியாரின் சிந்தனைகளையும் அவற்றின் தேவைகளையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லும் முயற்சிகளும் பயிற்சி அரங்குகளும் அவசியமானவை. மக்களை பிளவுபடுத்தும் மதவெறி, ஜாதிவெறி, தீண்டாமை, ஜாதி ஆணவப் படுகொலைகள், மொழித்திணிப்பு, உரிமை மறுப்பு குறித்த விழிப்பு இளையோரிடம் அதிகமாகும்போது, மானுடப் பற்றை முதன்மையாகக் கொண்ட பெரியாரின் புத்துலகம் முழுமையாக மலரும் என்பது உறுதி!                                                     

                                                                                                                

                                                                                                                 -கோவி.லெனின்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *