நூல்: நூற்றாண்டில் திராவிடன்
(தமிழ் இதழியல் மரபில் சமூக மாற்றுச் சிந்தனைகள்)
ஆசிரியர்: இரா.பகுத்தறிவு
பதிப்பகம்: முரண்களரி படைப்பகம்,
34/25, வேதாசலம் தெரு, காந்தி நகர்,
சின்ன சேக்காடு, மணலி, சென்னை – 600 068.
9841374809, 9092545686, 9841425965
மின்னஞ்சல்: yazhinimunusamy@gmail.com
murankalari@gmail.com
விலை: ரூ.85/- பக்கம்: 95
“சுயமரியாதை இயக்கம் தோன்றி சுமார் நான்கு வருடங்கள் ஆகின்றன. இந்தச் சொற்ப காலத்திற்குள் அது தமிழ்நாட்டில் செய்திருக்கும் வேலை இன்னது என்பதை வாசகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. அவ்வியக்கத்தின் முக்கிய கொள்கைகளாக மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியை எழுப்பவும் மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவை உணரச் செய்யவும், மூடநம்பிக்கையை உண்டாக்கும் போலிக் கொள்கைகளையும், அதனால் வாழ்கின்றவர்களையும் வெளிப்படுத்திக் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறியவுமான காரியங்களை முக்கியமாய் வைத்து அத்துறையில் வேலை செய்து வந்திருக்கின்றது.” (10.06.1929)
1925 நவம்பர் 29இல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். தமிழகத்தில் துடிப்புடன் அவ்வியக்கம் செயல்பட்டு வந்தது. 1928 முதல் திராவிடன் இதழை பெரியார் ஏற்று நடத்துகிறார். சுயமரியாதை மாநாடு தலைவர்களின் சுற்றுப்பயணம், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட இயக்கச் செயல்பாடுகள் திராவிடனில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
சுயமரியாதை மாநாடு
சுயமரியாதை இயக்க வளர்ச்சி அந்நாளில் சமயவாதிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்ததை திருவரங்கம் அருகிலுள்ள திருவளர்சோலை எனும் ஊரில் நடந்த சுயமரியாதைக் கூட்டச் செய்தி உணர்த்துகிறது.
“இன்று இவ்வூர் வாசக சாலையாரின் அழைப்பின்படி பூவாளூர் திரு.பொன்னம் பலனார் பங்கெடுத்தார். பறையடிக்க வந்தோரை கிராம முனிசீப்பும், சில மிராசுதார்களும் கூடிக் கலைந்து செல்லுமாறு அச்சுறுத்தினர். அவ்வூரில் எங்குமே கூட்டம் போடக் கூடாதென்றும், அப்படி மீறிப் பேசுவோர்களைக் கட்டிவைத்து அடிக்கப்போகிறோம் என்றும் வீண், பொருளற்ற கூச்சலிட்டு, ஆதி திராவிடர்களின் சேரியில் பெரிய பயமுறுத்தி விட்டார்கள்.
இந்நிலையில் பறையடிப்போர் பயந்து திகைக்க, ஒரு இளைஞன் இரண்டனா பெற்றுக்கொண்டு அதற்கு முன்வந்தார். அவருடன் கூட்ட இளைஞர்கள் பலரும் தொடர்ந்து வந்தனர். திரு.கிருஷ்ணப்பிள்ளை என்பவர், ‘இவ்வீதியில் பறையடிக்கக் கூடாதென அதட்டி மிரட்டிப் பேசினார். ஏன் கூடாதென நம்மவர்கள் பொறுமையுடன் கேட்டனர். அவர் மிக்க கோபத்தோடு, இங்கு கூடாதுதான். மரியாதையாகப் போய்விடுங்கள் என்று பயமுறுத்தினார். பறையடித்த அந்த இளைஞர் திகைத்து நின்றார்.
அப்போது திரு.பொன்னம்பலனார் அவ்விடம் வந்து, இவ்வீதியில் அடிக்கக் கூடாது என்பது ஏன்? என்று கேட்டு, பறைக்கருவியை வாங்கித் தோளில் போட்டுக்கொண்டு, ‘பொதுக் கூட்டத்திற்கு எல்லாரும் வாருங்கள்’ என்று சொல்லிக் கொண்டே வீதியைச் சுற்றி வந்தார். இந்நிகழ்வு கிராமவாசிகளிடையே பெரும் பரபரப்பையும் எழுச்சியையும் உண்டாக்கியதோடு, பறையடிக்கக் கூடாது என்றவர்களுக்குப் பெரும் இழிவையும் உண்டாக்கி விட்டது. இந்நிலையில் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் நூற்றுக்கணக்காக வந்து கூடினார்கள்.’’ (29.06.1929)
அம்பேத்கரும் சுயமரியாதை இயக்கமும்
ஜாதி முறைகள் மூட நம்பிக்கைகள் ஒழித்து மக்கள் ஏற்றத் தாழ்வின்றி பகுத்தறிவுடன் வாழ்ந்திட இந்திய சமூகத்தை வழிநடத்திய ஆகச்சிறந்த போராளி டாக்டர் அம்பேத்கர். அவரின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டுச் செய்தி திராவிடனில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு மாத்திரமல்லாமல் கேரள நாட்டிலும் பரவி, அங்கும் பலத்த உணர்ச்சியை சுயமரியாதை இயக்கம் உண்டாக்கியிருக்கிறது. இவை தவிர, சென்னை மாகாணத்தில் மாத்திரம் இல்லாமல் சமீப காலமாக, பம்பாய் மாகாணத்திலும் சுயமரியாதை இயக்கம் பரவி, பிரபலஸ்தர்களால் மாநாடுகள் கூட்டப்பட்டு, அய்ம்பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடி, தமிழ்நாட்டுச் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களைவிட மிகவும் முற்போக்கானதும் முக்கியமானதுமான தீர்மானங்களைத் தைரியமாகவும் தாராளமாகவும் நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
மாநாட்டுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தனது பிரசங்கத்தில், ‘இந்து சமூகத்தில் உள்ள உயர்வு_தாழ்வே மக்களின் சுயமரியாதையையும் ஆண்மையையும் பலத்தையும் கெடுத்து விட்டது. நல்வாழ்க்கைக்குச் சுயமரியாதை அவசியமானது. ஜாதிபேதம் வருணாசிரமம் ஆகியவைகளைச் சட்டம் மூலமும் அழித்தால்தான் மனிதன் நன்மை அடைய முடியும். இதற்குச் சுயமரியாதை இயக்கமே முக்கிய இயக்கமாகும்.’’ (10.06.1929).
தமிழ்நாட்டுச் சுயமரியாதைத் தீர்மானத்தைக் காட்டிலும் முற்போக்காகவும் தைரியமான தாகவும் பம்பாய் தீர்மானங்கள் இருந்ததென குறிப்பிடுவதன் மூலம் திராவிடனின் நடுநிலையை தெள்ளிதின் உணரலாம்.
பினாங்கு இந்து சபை
1916இல் திராவிடப் பெருங்குடி மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. மக்களின் பெரும் ஆதரவு காரணமாக அவ்வியக்க வளர்ச்சி காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்தது. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பிளவு ஏற்படுத்தி அதனை அழித்தொழிக்கும் நோக்குடன் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பார்ப்பனரல்லாதாரை முதன்மைப்படுத்தும் நோக்குடன் 1917 செப்டம்பர் 20 அன்று சென்னை மாகாண சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
அதுபோலவே சுயமரியாதை இயக்கத்தை அடக்குவதற்காக பினாங்கு இந்து சபை தொடங்கப்பட்டது. அச்சபையால் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளுக்கு எவ்வித தாழ்ச்சியும் ஏற்படுத்த இயலவில்லை என்பதை திராவிடன் கட்டுரை வழி அறிய முடிகிறது.
“பினாங்கு இந்து சபையார் மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை அடக்குவதற்காக இந்து மதப் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களாம். இது நன்றே! இந்து மதப் பிரச்சாரம் செய்தால்தான் சுயமரியாதை இயக்கத்தின் உண்மைகள் தானாகப் பரவும். அப்பொழுது நமக்கு வெற்றி ஏற்படும்.
அவர்களின் பிரச்சாரத்தால் அவர்கள் நம் இயக்கத்தின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. நமது இயக்கத்தை ஒழிப்பதற்கு லோக குருக்களும் சங்கராச்சாரிகளும் மடாதிபதிகளும் அவர்களின் கூலிகளும், சீடர்களும் பிராமண வக்கீல்களும், உத்தியோகஸ்தர்களும் அவர்களின் கொழுத்த பத்திரிகைகளும் எவ்வளவோ பிரச்சாரமும் சூழ்ச்சிகளும் செய்தனர். இவ்வளவு செய்தும் நம் இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் போகின்றதே ஒழிய குறைந்த பாடில்லை!
பினாங்கு இந்து சபையார் மலாய் நாட்டில் சுயமரியாதைப் பிரச்சாரம் நடைபெற இந்து சபையார் எவரும் இடம் கொடுக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். சுயமரியாதைக்காரர்கட்குப் பிரசங்கம் செய்ய வேறு இடம் இல்லையோ! என்ன அறியாமை! (04.11.1929)
சுயமரியாதை மணம்
சமூக மாற்றமோ முன்னேற்றமோ பெண் விடுதலையில்தான் முழுமை பெறுகிறது. ஈரோடு ‘உண்மை நாடுவோர் சங்கம்’ சார்பில் பெண்களே பொறுப்பேற்று பல கருத்தரங்கங்களை நடத்தியுள்ளனர். அத்தொடர் நிகழ்வு சார்ந்த செய்திகளை திராவிடன் தவறாது வெளியிட்டு வந்துள்ளது. இலட்சுமி அம்மாள் தலைமையேற்று நடைபெற்ற அம்மகளிர் கருத்தரங்கில் சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்பு மற்றும் அதன் இற்றைத் தேவைகளும் உணர்த்தப்பட்டுள்ளது.
“நம் நாட்டில் கல்யாணம் என்பதன் பெயரால் சில சடங்குகள் உண்டு. அது சமயம் பலரிடத்திலும் இரவல் வாங்கிய நகைகளைக் கொண்டு பெண்களை அலங்கரிக்கின்றனர். இவ்வாறு பாரத்தை சுமக்கச் சொல்லிப் பெண்களை கஷ்டப்படுத்தக்கூடாது. போதாக்குறைக்கு, பாரமான புடவைகளையும் கட்டிவிட்டு விடுகிறார்கள். இவ்வளவும் போதாதென்று மூச்சுவிட வழியில்லாது முக்காட்டுப் புடவை என்று ஒன்று போர்த்தித் திணற வைக்கிறார்கள். இது கொடுமையான காரியம். இதற்கெல்லாம் மணப்பெண் ஏதாவது சொன்னால் ஜனங்கள், ‘இந்தப் பெண் அதிகப்பிரசங்கி. பெரியோர் வார்த்தைகளை நிராகரிக்கின்றது’ என்று பழி சுமத்துகின்றனர். மனையில் யக்ஞம் வளர்த்துப் புகையுண்டாக்கி அதிகக் கஷ்டங்களை உருவாக்குகின்றனர். இம்மாதிரியான சடங்குகளை ஒழித்து, தாய்மார்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு கஷ்டமில்லாத _ செலவில்லாத _ சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கும்படி வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நாகரிகம் பெருகி வரும் இந்தக் காலத்தில் பழைய குருட்டு வழக்கங்களை ஒழித்து நாகரிகத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஏற்றவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். இம்மாதிரியான சடங்குகளை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து முன்னிலைக்கு வரவேண்டும். மக்களுக்கு முற்போக்கை அளிக்கவல்ல சுயமரியாதைத் திருமணம் செய்ய வேண்டும். பெண்களாகிய நாமும் முன்னின்று பிரசாரம் செய்ய வேண்டும். நம் நாட்டில் செய்யும் சடங்குகள் வெறும் பைத்தியக்காரத்தனமே, சடங்குகள் செய்வதனால் நமக்குக் காசு நஷ்டம்; அலைவதனால் தேசத்திற்கும் கஷ்டம். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் பதினோராம் நாள் தீட்டுக் கழித்தல் என்ற சடங்கு செய்ய வேண்டுமாம். அதற்குப் பார்ப்பனன் வர வேண்டுமாம். பார்ப்பானுக்கு அரிசி, பருப்பு காணிக்கை கொடுக்க வேண்டுமாம். அதே சடங்கில் ஊராருக்கும் விருந்து செய்விக்க வேண்டுமாம். (20.05.1929)
பொருளற்ற சடங்குகள்
பொதுவெளியில் நின்று சமூக மாற்றங்களைப் பேசும் ஆண்கள் சிலர் தம் குடும்பச் சூழலில் மனைவி மற்றும் பிள்ளைகள் தம் கொள்கைகளை ஏற்றிட வற்புறுத்துவதில்லை. ஆனால், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தம் சகோதரி மற்றும் துணைவியாரையும் முழுவீச்சில் ஈடுபடுத்தியுள்ளார். பெரியாரின் தங்கை கண்ணம்மாள் ‘உண்மை நாடுவோர் சங்க’ பெண்கள் கருத்தரங்கில் ‘பொருளற்ற சடங்குகள்’ எனும் அரிய உரை நிகழ்த்தியுள்ளார்.
“சீமந்தம் வளைகாப்பு என்பதன் பெயரால் கர்ப்பப் பெண்ணைப் பத்து நாள்கள் கஷ்டப்படுத்தும் கொடுமையைச் சொல்லி முடியாது. கர்பஸ்திரிக்குப் பூ முடித்தல் என்பதன் பெயரால் ஊரிலுள்ள பூக்களையெல்லாம் சூட்டி, மேற்படி வாசனையால் தலைவலி வரச் செய்து விடுகிறார்கள். மேலும் பளுவான புடவைகள் கட்டி, 2_3 மணிநேரம் மனை இருத்தல் என்று சொல்லி இருக்க வைக்கின்றனர். இம்மாதிரியான கஷ்டமான _அநாகரிகமான _சடங்குகள் எதற்கு என்று கேட்டால், இவைகளெல்லாம் பெரியோர்கள் செய்தது; அதனால் அப்படியே நடக்க வேண்டும் என்று பதில் சொல்லி விடுகின்றனர்.
ஆனால், அந்தக் காலத்தில் பெரியோர்கள் இருபது_முப்பது மைல் தூரம் பிரயாணம் செய்வதாயிருந்தாலும் கட்டமுது கட்டித் தோள் மேல் போட்டுக் கொண்டு நடந்தே போய் வந்தனர். ஆனால், இக்காலத்திலோ, ரயிலென்றும் மோட்டார் என்றும், ஜட்கா என்றும் அனேக வாகனங்கள் இருக்கின்றன. ஊர்ப்பயணம் போக வேண்டுமாயின் ‘கொண்டு வா மோட்டார்!’ என்கிறார்கள்.
இது விஷயத்தில் மாத்திரம் பெரியோர்கள் நடந்தபடி நடப்பதில்லையே! அதேபோலத் தற்கால நாகரிகத்திற்-கு ஒவ்வாத சடங்குகளையும் ஒழிக்க வேண்டும். அனாவசியமானதும் அர்த்தமற்றதுமான சடங்குகளை ஒழித்து, அதற்குச் செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்குப் படிப்பூட்டினால் மிகவும் பயனுள்ளதாயும் இருக்கும்!’’ என்று குறிப்பிட்டார்.
(20.05.1929) சுயமரியாதையே வாழ்க்கையை வலிமையுறச் செய்கிறது. அதுவே திராவிடன் படைப்புகளின் முதன்மைப் பணியாக அமைகிறது.
பெரியாரும் திராவிடனும்
வைக்கம் நுழைவு, சேரன்மாதேவி குருகுலத் தீண்டாமை உள்ளிட்ட சமூகச் செயல்பாடுகளில் பெரியார் முழு வீச்சில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இவ்வறப் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் மெத்தனப் போக்கு, வகுப்புவாரி தீர்மான எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதார் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் பெரியார் அக்கட்சியிலிருந்து வெளியேறி, 1926இல் சுயமரியாதைச் சங்கத்தை தோற்றுவித்து தமிழகம் முழுதும் சுயமரியாதைச் சிந்தனையை பதியமிட்டார். நீதிக்கட்சியுடன் ஏற்புடையவற்றுள் இணைந்தும் செயல்பட்டார். நீதிக்கட்சியின் அரசியல் குரலாக வெளிப்பட்ட திராவிடன் இதழின் தொடர் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட அக்கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, பெரியார் 1928இல் திராவிடனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
பெரியார் பார்வையில் ‘திராவிடன்’
பெரியார் 1925 மே 2இல் தொடங்கிய ‘குடிஅரசு’ இதழ் பெரும் செல்வாக்குடன் மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்பூட்டி வந்தது. தேசியம் பேசிய புதுப்புது பார்ப்பன இதழ்களின் வரவு திராவிடன் இதழை பெருவாரித் தமிழ் மக்களிடமிருந்து விலகச் செய்தது. திராவிடனை ஏற்கும் முடிவினை பெரியார் ‘குடிஅரசு’ வாசகர்களிடம் முன்வைத்து ஒப்புதல் கேட்டார். அக்கோரிக்கைகள் வழி திராவிடனின் தனித்துவத்தை காலம் கடந்தும் பெரியார் பார்வையிலேயே நம்மால் உணர முடிகிறது.
“உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட இம்மாதிரியான ஒரு பெரிய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்குமாக நடைபெறும் ஒரு பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது நம் கடமை என்பது நாம் சொல்லாமலே விளங்கும். நம்மில் எத்தனையோ லட்சாதிபதிகள், வருஷம் 1_க்கு லட்சக்கணக்கான வரவு உள்ளவர்கள், தேசாபிமானமும் சமூகப் பற்றும் சுயமரியாதையில் கவலையுமானவர்கள் இருந்தும் கவனிக்காமல் இருப்பதென்றால் இச்செல்வங்கள் மற்றெதற்காகத்தான் இருப்பதாய்க் கருதுகிறார்களோ தெரியவில்லை.’’ (‘குடிஅரசு’ 06.03.1927)
“தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு _ தமிழ் மக்கள் அதாவது பார்ப்பனரல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்தமுடியாமல் விட்டு விடுவதென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலைமையைக் காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லையென்றே சொல்லுவோம்.’’ (‘குடிஅரசு’ 06.03.1927)
“சகோதரர்களே! பார்ப்பன ஆட்சியாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், பார்ப்பன மதத்தாலும், பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரச்சாரத்தாலும், நீங்கள் இழந்து கிடக்கும் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் திரும்பவும் அடைய வேண்டுமா? வேண்டாமா?
வேண்டுமானால் அதற்கென்றே உங்கள் தொண்டர்களால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகி நடத்தப்பட்டு வரும் ‘திராவிடனை’ வாங்கிப் படியுங்கள். திராவிடன் தான் போலி தேசியத்தையும், சுயராஜ்யப் புரட்டையும் தைரியமாய் வெளியாக்கி சுயமரியாதைக்கென்றே உழைப்பவன். எனவே, “திராவிட’’னன்றிக் கண்டிப்பாய் உங்களுக்கு கதிமோட்சமில்லை; இதை நம்புங்கள்.’’ (‘குடிஅரசு’ 21.08.1927)
“தமிழ்நாட்டில் எத்தனையோ தினசரி பத்திரிகைகள் இருந்தாலும் மற்ற சமூகத்தாருக்கு இருப்பதுபோல பார்ப்பனர் அல்லாதாராகிய 3.5 கோடி மக்களின் நலத்தையே பிரதானமாய்க் கருதி உழைக்கும் தினசரி பத்திரிகை நமக்கு திராவிடனைவிட வேறு இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (‘குடிஅரசு’ 11.09.1927)
“கடந்த பத்து வருடங்களாக பிராமணரல்லாத தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இடைவிடாது உழைத்து வருவது அருமைத் “திராவிடன்’’ ஒன்றே என்பதில் சிறிதும் தடையில்லை. ஆனால் அது இப்போது குசேலரின் நிலையை அடைந்திருப்பது யாவருமறிந்த விஷயம். அதற்கென்ன காரணம்? தமிழ் மக்களுக்கென்று தனி ஊழியம் புரியவந்த குறையே தவிர வேறல்ல. ஆனால், தமிழர்கள் அவ்வளவு நன்றி அற்றவர்களா என்ற கேள்வி பிறக்கலாம். இதற்கு விடை ஆம் என்றும் அல்லவென்றும் சொல்லிவிடலாம். (‘குடிஅரசு’ 08.08.1927)
திராவிடன் இதழின் அதிபரும் ஆசிரியருமான மணி திருநாவுக்கரசு 1931 ஜூலையில் மரண மடைந்தார். அதனையடுத்து திராவிடனை நடத்தும் முழுப் பொறுப்பும் தந்தை பெரியாரை வந்தடைகிறது. 1928 முதலே சுயமரியாதை இயக்க செயல்பாடுகளை திராவிடன் சிறப்பாக வெளிப்படுத்தி வந்தது. பெரியாரின் சுற்றுப் பயணங்கள், மாநாட்டுப் பேருரைகள், மற்றும் களப்பணிகள் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் திராவிடனில் வெளியாகின.
சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோளினை உணர்த்தி இளைஞர் மற்றும் பெண்கள் அதனை நிறைவேற்றும் பொறுப்பினை ஏற்கவேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் நிகழ்த்திய மாநாட்டுப் பேருரை தமிழ்ச் சமூக ஏற்றத்திற்கு என்றும் வழிகாட்டுவதாகும்.
“இதற்கு சுயமரியாதை இயக்கம் எனப் பெயரிட்டது. மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டியும், மதத்தைப் பொருத்தவரையிலும், வாழ்க்கையைப் பொருத்த வரையிலும் ஒழுங்குபடுத்த வேண்டியும்தான். எல்லா வாழ்க்கைக்கும் சுயமரியாதை வேண்டியதுதான். அரசியலில் அமிழ்ந்து கிடப்பதற்கு முக்கிய காரணம் சுயமரியாதை இன்மையே.
உலகிடை இப்பொழுது உயர்வுக்கும் தாழ்வுக்கும் சண்டை நடக்கிறது. கொடுங்கோன்மை அரசாட்சி _ சாதுக்களான குடியானவர்கள் சண்டை; இவர்கள் இரண்டு பேரும் ஒத்துவாழ வேண்டுவதே இதன் நோக்கம். அவர்களும் நாமும் சமம் என்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும். சீக்கிரத்தில் அது ஏற்படத்தான் கூடும். அதன் மூலம்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் பலமற்றுப் போகும். நாளைய தினம் இது வேண்டிய அவசியமிருந்தால் உங்கள் எல்லோரையும்விட நான் சந்தோஷப்படுவேன். ஆனால், இந்தச் சுயமரியாதை இயக்கம் உலகத்தைச் சீரிட்டுக் கொண்டிருக்க வேண்டும். உலகத்திலுள்ள ஆணவம், அகம்பாவம், அறியாமையை ஒழிக்க வேண்டியிருக்கிறது. அதன் மூலமாக எல்லா மக்களையும் சமத்துவமாகச் செய்வதற்குச் சாத்தியமாகும்…! (19.02.1929)
“வாலிபர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தற்சமயம் சிலருக்கு ஒவ்வொரு மயிர்க்காலிலும் சமயப் பித்து இருக்கிறது. ஜாதி _ மத வேற்றுமகளை ஒழிக்க வேண்டியது அத்தியாவசியம். எல்லாவற்றிற்கும் நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். ஒழுக்கம், அறிவு, ஆசை எல்லோருக்கும் உண்டென்பது உண்மை. இவைகளினால் இந்தியாவிலுள்ள 33 கோடி ஜனங்களுள் 16 கோடிப் பெண்களும் அடிமையாய் இருந்து, சந்தைக்குப் போய் மாடு வாங்குவது போல் நடத்தப்படுவது ஒழிய வேண்டும். சிலருக்கு இக்காரியங்கள் செய்யச் சாத்தியப்படாவிட்டால் சும்மாவாவது இருக்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வாலிபர்கள் கையில் இருக்கிறது. பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுச் சுயமரியாதை உணர்ச்சியை உணர்த்த வேண்டும்.’’ (21.02.1929)
திராவிடனின் அவசியம்
தமிழ் இதழியல் வரலாற்றில் பார்ப்பன இதழ்கள் தேசியம், சுயாட்சி, கடவுள், சமயம், ஜாதி உள்ளிட்ட பொருளற்ற கூச்சலுடன் பயணிக்க திராவிடன் இதழின் நுழைவு பெரும் அதிர்வையும், மாற்றங்களையும் ஏற்படுத்தின. கால நகர்வில் பார்ப்பன இதழ்கள் தம் செல்வாக்கால் விற்பனையைத் தக்க வைக்க, திராவிடன் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அவ்விதழின் நலனில் அக்கறை கொண்ட பெரியார் தம் ‘குடிஅரசு’ இதழ் வழியே திராவிடனுக்கு ஆதரவு திரட்டினார்.
“இது சமயம் நமது நாட்டிலுள்ள சற்றேறக்குறைய எல்லாப் பத்திரிகைகளும் பார்ப்பனத் தலைமையின் கீழ்தான் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர்களேதான் கொள்கைகளை உற்பத்தி செய்கிறார்கள். அதுவும் பார்ப்பனரல்லாத சமூகத்திற்குக் கெடுதி பயக்கத்தக்கதாகவே பார்த்துக் கண்டுபிடிக் கிறார்கள். அதை மீற யாருக்கும் தைரியமில்லை.
ஏனெனில் அவர்களை விரோதித்துக் கொண்டால் எந்தப் பத்திரிகையையும் நடத்த முடியாதபடி செய்யத்தக்க அளவு செல்வாக்கு அவர்களுக்கு இருக்கின்றது. இச்சூழலில் யோசித்தால் திராவிடனின் அவசியமும் அருமையும் தெரியாமல் போகாது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையிலும் முன்னேற்றத்திலும் அபிமானமும் கருணையும் உள்ள கனவான்கள் திராவிடனை முன்னிலும் அதிகமாக ஆதரிக்க முன்வர வேண்டுமாக வேண்டிக் கொள்கிறோம்.’’ (‘குடிஅரசு’ 07.09.1929)
‘திராவிடன்’, ‘குடிஅரசு’ இதழ்களும் சுயாட்சி உரிமையும்
‘திராவிடன்’, ‘குடிஅரசு’ இதழ்கள் சமூக மற்றும் அரசியல் உரிமைகளை அனைவருக்கும் பெற்றுத்தருவதையே தம் கடமையாகக் கொண்டிருந்தன.
“திராவிடனும், குடியரசும் பார்ப்பனர்கள் கையிலிருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிடுங்கிப் பார்ப்பனரல்லாத ஜமீந்தார்களும் மிராஸ்தாரர்களும் வியாபாரி களும் லேவாதேவிக்காரருமான பணக்காரர் களுக்கும் ஆங்கிலம் படித்த வக்கீல்களுக்கும் கொடுப்பதற்காக நடத்தப்படுகிறது என்று நினைப்பார்களேயானால் அவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள். வெள்ளைக்கார ஆதிக்கம் ஒழிவதாயிருந்தால் நேரே அது ஏழை மக்களான தொழிலாளர்கள் கைக்கு வருவதுதான் நன்மையே அல்லாமல், ஏழை மக்களுக்குப் பணக்காரர்களும் பார்ப்பனர்களும் வக்கீல்களும் தர்மகர்த்தாக்களாகவும் தரகர்களாகவும் இருக்கக் கூடாது என்றே சொல்லுவோம்.’’ (‘குடிஅரசு’ 11.09.1927)
சித்திரபுத்திரன், அரசியல் ஆர்வலன் உள்ளிட்ட பல பெயர்களில் தொடக்கம் முதலே திராவிடனில் பல கட்டுரைகளை பெரியார் எழுதியுள்ளார். அத்தகு திராவிடனை நெருக்கடிச் சூழலிலும் தொய்வில்லாது வழிநடத்தியவரும் அவரே.