பார்வதி குளம்

உங்களுக்குத் தெரியுமா? செப்டம்பர் 01-15


“மீட்போம், மீட்போம்! பார்வதி குளத்தை மீட்போம்!’’

“வெளியேறு! வெளியேறு! பார்வதி தீர்த்தம் குடித்த குளத்தை விட்டு வெளியேறு’’

“சிவன் சொத்து குலம் நாசம்’’

தனது வீட்டிற்கு முன்னால் கேட்ட பெரும் இரைச்சலை செவிமெடுத்த அழகுமுத்து வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார்.

வீட்டிற்கு முன் ஆண்களும், பெண்களுமாக சுமார் அய்ம்பது பேர் நின்றுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அனைவர் நெற்றியிலும் விபூதி, குங்குமம் நிறைந்திருந்தது. அதே தெருவில் வசிக்கும் பக்தர்கள்.

“என்ன சமாச்சாரம்? ஏன் இப்படி சத்தம் போடறீங்க?’’ என்று கேட்டார் அழகுமுத்து.

கூட்டத்திற்கு தலைமை ஏற்று வந்த செங்கோடன் அழகுமுத்துவைப் பார்த்து,

“நீங்க பள்ளிக்கூடம் கட்டியிருக்கீங்களே, அதன் வாசலானது பார்வதி குளத்தை ஆக்கிரமித்து, குளத்தை மூடி அதன்மேல் கட்டப்பட்டிருக்கு. நீங்க உடனே வாசலை இடித்து குளத்தை எங்ககிட்ட ஒப்படைக்கணும்’’ என்றான்.

“இந்தப் பள்ளிக்கூடம் நூறு வருஷமா என்னோட தாத்தா காலத்திலிருந்து நடந்துகிட்டு இருக்கு. லாப நோக்கம் இல்லாம பள்ளிக் கூடத்தை நடத்திகிட்டு வர்றேன். எவ்வளவோ ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்களை உருவாக்கிய பள்ளி இது’’ என்றார் அழகுமுத்து.

“இந்த சேதியெல்லாம் எங்களுக்கு வேண்டாம். குளத்தை தூர்த்து ஆக்கிரமிப்பு செய்ஞ்சிருக்கீங்க. அந்த ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தணும். இந்தக் குளத்தின் மகத்துவம் உங்களுக்குத் தெரியுமா?’’

“தெரியலையே’’

“ஒருமுறை பார்வதியும் பரமசிவனும் இந்த வழியா நடந்து வந்துகிட்டு இருந்தபோது திடீரென பார்வதிக்கு விக்கல் எடுத்தது. விக்கலை நீக்க தண்ணீர் எங்குமே கிடைக்கல. உடனே பரமசிவன் இங்கே ஒரு குளத்தையே உருவாக்கி அதில் பார்வதியை தண்ணீர் குடிக்க வைத்து விக்கலைப் போக்கினார். அப்படிப்பட்ட குளமாக்கும் இது’’

“அப்படியா, நான் எந்தப் புராணத்திலும் இந்தக் கதையைப் படிக்கல. சரி, இப்ப நான் என்ன செய்யணும்?’’

“வாசலை இடித்து குளத்தை பக்தர்கள்கிட்ட விடணும்’’

“உங்களைப் போல நிறைய பேர் தனித்தனியா வந்து சத்தம் போட்டுட்டு போயிருக்காங்க. வழக்கும் என் மேல் போட்டிருக்காங்க. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கு. சரி, அது கிடக்கட்டும். நான் சொல்றதை கேளுங்க. வாசலை சுத்தமா  இடிச்சா மாணவர்கள் உள்ளே வர வழி இருக்காது. அதனால ஒரு பாதை மட்டும் எனக்கு ஒதுக்கிக் கொடுங்க. மீதி இடத்தை நானே என் செலவில் தோண்டி குளமாக்கி, மண்டபமும் கட்டி, பூங்காவும் அமைத்துத் தற்றேன். சரியா?’’

இதைக் கேட்ட செங்கோடன்தன் பின்னால் இருந்தவர்கள் சரி என்று தலையசைக்கப் போவதை உணர்ந்து சமாளித்துக்கொண்டு,

“நீங்க சொல்றதை ஒத்துக்க முடியாது. முழுக் குளத்தையும் விடணும்’’ என்றான்.

“பள்ளிக் கூடத்தை நினைச்சுப் பாருங்க. பசங்க நலம். முக்கியமில்லையா? சரி, அதை விடுங்க. குளத்தை முழுவதுமா எடுத்துக்கலாம். ஆனால், அதுக்கு மேல் நான் ஒரு பாலம் கட்டிக்கிறேன். மாணவர்கள் செல்ல உதவியா இருக்கும்.’’

“இல்லை, இல்லை. அய்தீகப்படி அது ஆகாது. குளத்தை முழுமையாக விட்டால்தான் உரிய பலன் கிடைக்கும். எப்படி நாரதர் கொடுத்த மாம்பழத்தை ஒருவரே முழுசாச் சாப்பிட்டால்தான் பலன் கிடைக்குமோ அதுபோல முழுக் குளத்தையும் ஒப்படைத்தால்தான் மக்களுக்கு முழுப் பலனும் போய்ச் சேரும். இல்லாட்டி தெய்வ குற்றம் வந்து சேரும்’’ என்றான் செங்கோடன்.
இப்படி பேச்சு நீண்டுகொண்டே போவதை விரும்பாத அழகுமுத்து, “சரி, பிறகு பேசிக் கொள்ளலாம்’’ என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்துவது புதிதல்ல. அவ்வப்போது சிலர் இதுபோன்று திடீரெனப் போராட்டம் நடத்துவது உண்டு.

அழகுமுத்து கூறும் திட்டத்திற்கும் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சில போராட்டக்கார பக்தர்கள் அழகுமுத்துவை தனியாக சந்தித்து ஒரு பெரும் தொகை கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவதாகக் கூறினார்கள். ஆனால், அதற்கு அழகுமுத்து ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது அவர் நீதிமன்ற தீர்ப்புப்படி நடக்க முடிவெடுத்து விட்டார்.

***

நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. அது அழகுமுத்துவுக்குச் சாதகமாக இல்லை.

நகராட்சியே முன்னின்று பள்ளி வாயிலை இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால் பள்ளி மூடப்பட்டது. இருப்பினும் அடுத்த தெருவில் வசிக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒருவர் தன் வீட்டுத் தோட்டத்தின் ஒரு பகுதியை பள்ளிக்கு ஒதுக்கிக் கொடுத்ததால் அதில்பாதை உருவாக்கப்பட்டு பள்ளி திறக்கப்பட்டது.

பள்ளியின் வாயிலை இடித்த பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். நெருக்கமாக பல வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் குளத்தைத் தோண்டி சீரமைக்க பல்வேறு குழுவினரும் தனித்தனியே வசூல் வேட்டையில் இறங்கினர். விவரம் புரியாமல் பலரும் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். பல்வேறு குழுக்களாக பண வேட்டையாடி யவர்கள் பிறகு சமாதானமாகி தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு குளம் என்று கூறப்பட்ட பகுதியில் இருபது அடி ஆழத்திற்குத் தோண்டினர். தோண்டிய பின்பு நான்கு புறமும்  மண் அணைத்து கரை போட்டனர். கரை போட்டபின் அது குட்டைபோல் காட்சியளித்தது. ஆனால் எல்லோரும் நினை    த்தபடி குட்டையில் தண்ணீர் சுரக்கவில்லை.

கரையில் ஒரு மண்டபமும் கட்டி சாமிசிலை ஒன்றையும் வைத்து குடமுழுக்கும் நடத்தினர்.
சில மாதங்கள் கடந்தன. அந்த ஆண்டின் மழைக்காலம் வந்தது. கடும் மழை பெய்து குளம் நிரம்பும் என மக்கள் நினைத்தனர்.

ஆனால், அந்த ஆண்டும் சுத்தமாக மழையே பெய்யவில்லை. நாடே கடும் வறட்சியில் சிக்குண்டு கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது.

வசூலித்த பணம் தீர்ந்தவுடன் யாரும் குட்டையின் பக்கம் வரவில்லை. வறண்ட குட்டையைப் பார்த்த சிறுவர்கள் அதனுள் இறங்கி விளையாட ஆரம்பித்தனர். அங்கேயே சிறுநீரும் கழித்தனர்.
பிறகு நாள் செல்லச் செல்ல பலரும் குட்டையில் இறங்கி மலம், சிறுநீர் கழிக்க ஆரம்பித்தனர். திறந்தவெளி கழிவறையாக குட்டை மாறியது. துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.

“பள்ளி மாணவர்கள் கலகலவென சிரித்து மகிழ்ந்து புழங்கிய இடம்இப்படி பாழ்பட்டுவிட்டதே’’ என சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

மாடியில் குடியிருப்பவர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் தங்கள் வீட்டுக் குப்பைகளை குட்டையில் கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் குட்டை குப்பையால் நிரம்பியது. வீணான உணவுப் பொருட்களைக் கொட்டியதால் நாய்கள், பன்றிகள் தொல்லை பெரிதாகிவிட்டது. கொசுத் தொல்லையும் அதிகரித்துப் பலரும் நோயால் அவதிப் பட்டனர். புதிது புதிதாகத் தோன்றும் நோய்களின் பிறப்பிடமாக அந்தப் பகுதி விளங்க ஆரம்பித்தது.

சிலர் ஏதேனும் பண்டிகைகள் வந்தால் உடன் மண்டபத்தில் ஒலிபெருக்கி அமைத்து இரவு பகல் முழுவதும் பெருத்த ஓசையுடன் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் மாணவர்களின் படிப்புக் கெட்டு தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றனர்.

மொத்தத்தில் மாணவச் செல்வங்கள் நடமாடிய அந்த இடம் சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாகிவிட்டது.

***

ஓராண்டு கழிந்த நிலையில் ஒரு நாள் அழகுமுத்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது வெளியில் பெரும் இரைச்சல் கேட்டது.

அழகுமுத்து வெளியே வந்து பார்த்தார்.

அங்கு வீட்டிற்கு முன் செங்கோடனும், செங்கோடனைப் போன்று போராடிய குட்டிப் போராட்டத் தலைவர்களும், பொதுமக்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

“என்ன செய்தி, நான் வாசலை இடித்து ரொம்ப நாளியிடுச்சே. இன்னும் நான் என்ன செய்யணும்? பள்ளிக் கூடத்தையும் இடிக்கணுமா?’’ என்று கேட்டார் அழகுமுத்து.

“அய்யா, எங்களை மன்னிச்சுடுங்க. பள்ளிப் புள்ளைங்க புழங்கிய இடம் இப்ப பாழ்பட்டுக் கிடக்கு. குடியிருப்புப் பகுதிகளிலும், சாலை ஓரமாகவும் கோயில், குட்டைன்னு இருக்கக் கூடாது என்கிறதை உணர்ந்திட்டோம். நம்ம பகுதியில் நெறைய குழந்தைங்க நோயால செத்துப் போச்சிங்க. நீங்கதான் மனசு வைச்சி இந்தப் பகுதியை காப்பாத்தணும்’’ என்று பணிவாக அழகுமுத்துவிடம் கேட்டான் செங்கோடன்.

வந்திருந்த மக்களும் அதை ஆமோதித்னர்.

“நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர் பார்க்கிறீங்க? எனக் கேட்டார் அழகுமுத்து.

“திரும்பவும் அந்த இடத்தை நாங்கள் பள்ளிக்கே விட்டுத் தர்றோம். பசங்க நல்லா படிக்கட்டும்’’
“வேண்டாம்பா, வேண்டாம். என் காலத்தில் நான் அதை ஆக்கிரமிக்க விரும்பல. நீங்க போகலாம்’’ என்று கூறிய அழகுமுத்துவை செங்கோடன் விடவில்லை.

“நீங்க அப்படி சொல்லக்கூடாது அய்யா. அந்தக் குட்டையை மூடி நல்லதா ஏதாவது செய்ய நீங்கதான் யோசனை சொல்லணும்.’’

அழகுமுத்து சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு பேசினார்.

“இந்தத் தெரு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கிருந்து யாராவது உயர் பதவிக்கு சென்றிருக்கிறார்களா?’’

“இல்லை, இல்லை’’ என மக்கள் பதில் கூறினார்.

“அதுக்குக் காரணம் நீங்க மாணவர்களை படிக்க விடலை. சிந்திக்கவும் விடலை. கோயிலில் வாரக் கணக்கில் ஒலிபெருக்கியைக் கட்டி இரைச்சலை உண்டாக்கி மாணவர்களின் படிப்புக்கு இடையூறு செய்றீங்க.’’

அழகுமுத்து இவ்வாறு கூறியதும் அனைவரும் தலைகுனிந்தபடி அமைதியாக நின்றனர்.

“அதனால நான் சொல்றதைக் கேளுங்க. குட்டை இருக்கும் இடத்தில் நூல் நிலையம் ஏற்படுத்துங்க. நான் எல்லா உதவியும் செய்யத் தயார். மாணவர்கள் படித்து முன்னேறட்டும். இடமும் சுத்தமாயிடும்’’ எனக் கூறி முடித்தார் அழகுமுத்து.

செங்கோடனும் மற்றவர்களும் அவர் கூறியதை ஏற்று கலைந்து சென்றனர்.

சில நாட்களில் நூல் நிலையம் திறக்கப்பட்டது. மாணவர்களும், பொதுமக்களும் நூலகத்தை பயன்படுத்தத் தொடங்கினர். இடம் கலகலப்பாகியது. அறிவுப் புரட்சி தொடங்கியது.  

                                                                                                    – ஆறு.கலைச்செல்வன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *