29.04.1981 அன்று சென்னை சட்டக்கல்லூரியின் தமிழ்ப் பேரவையின் சார்பில் “சமூகநீதி இடஒதுக்கீடு’’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டேன். அரங்கம் முழுவதும் இருபால் மாணவர்கள் நிரம்பியிருந்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இலக்கியப் பேரவைத் தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். பேரவைச் செயலாளர் திரு.மணிவாசகம் அவர்கள், இடஒதுக்கீடு பிரச்சனையையொட்டி ஒரு வழக்காடு மன்றம் நடத்த தாம் வலியுறுத்தியதாகவும், அதை மற்றவர்கள் ஏற்காததால் இப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.
சட்டக் கல்லூரி இயக்குநர் மாஸ்டர் சங்கரன், தமிழ்ப்பேரவைக் காப்பாளர் பிரான்சிஸ் ராயன், சட்டமன்ற திமுக உறுப்பினர் கே.எஸ்.ராஜீ ஆகியோரும் என்னுடன் கலந்துகொண்டார்கள்.
மாணவர்களின் எழுச்சியான கரவொலிக்கிடையே நான் உரையாற்றினேன். சமூகநீதிப் பிரச்சனை நீண்ட நெடுங்காலப் பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனையைக் குறித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள் வாதத்தை எடுத்து வைப்பது என்பதுகூட சட்டக்கல்லூரி பயிற்சிதான்! அப்படிப்பட்ட சட்டப் பயிற்சிதான் இங்கே மாணவர்களுக்கு தரப்படுகிறது.
ஒரு வகையில் நான் உருவான இடம்; நான் படித்த சட்டக்கல்லூரி இது. இங்கே பேசுவதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சட்ட நீதிக்கு வாதாடக்கூடிய உங்களிடையே சமூகநீதி பற்றிப் பேச என்னைப் பணித்திருக்கிறீர்கள். சட்டநீதியானாலும், சமூக நீதியானாலும், சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
இந்த நாட்டு சமூகநீதிக்கும், மற்ற நாட்டு சமூகநீதிக்கும் வேறுபாடு உண்டு. இடஒதுக்கீடு பற்றி சமூகநீதி இன்று நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைப் பற்றி இளம் வழக்கறிஞர்களாகிய உங்களிடையே பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இதை வழக்காடு மன்றமாக நடத்தா விட்டாலும் நானே இதை வழக்காடு மன்றமாக ஏற்றுக்கொண்டு உங்களிடையே பேச விரும்புகிறேன்.
முதலில் தமிழ்ப் பேரவையிலே இந்த இடஒதுக்கீடு பிரச்சனைப் பற்றி பேசுவது பொருத்தம்தானா என்ற கேள்வி எழும். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’ என்றுதான் திருக்குறள் கூறுகிறது. “பகுத்து உண்டு வாழ வேண்டும் என்பவனுக்கும், பகுத்துண்டு வாழக் கூடாது என்பவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த இடஒதுக்கீடு பிரச்சனை.’’
இன்று புரட்சிக்கவிஞரின் நினைவுநாள். “எல்லோருக்கும் எல்லாமும் இருக்கும் இடம் நோக்கி நகரட்டும் இந்த வையம்’’ என்றார் புரட்சிக்கவிஞர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதுதான் சமூகநீதி; இடஒதுக்கீடு ஆகும். இது தெளிவான சங்கதி! ஆனால் நம்முடைய நாட்டிலே சிக்கல் என்பது _ வியாக்யான கர்த்தாக்களால் ஏற்படுவதுதான்.
இந்த நாட்டிலே 75 சதவீதம் மக்கள் தற்குறிகளாக இருப்பதற்குக் காரணம், படிக்க பண வசதி இல்லை என்ற காரணத்தால் அல்ல; பள்ளிக் கூடத்திலே சம்பளம் கட்ட வசதி இல்லை என்ற காரணத்தால் அல்ல; அவர்கள் கீழ்ஜாதிக்காரர்கள் என்ற காரணத்தால்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
“குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, காமவிகாரம் கொண்ட காளை மாடு, ‘படித்த சூத்திரன்’ இவர்கள் ஆபத்தானவர்கள்’’ என்று மனுநீதி கூறுகிறது. இந்த மனுதர்ம அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘இந்து லா’.
தந்தை பெரியார் அவர்கள் போராடியதால்தான் அரசியல் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டு, இந்த 15(14) என்ற ஒதுக்கீடு உரிமையே வந்தது. அதனால்தான் இந்த “சமூகரீதியாக’’ பின்தங்கியவர்கள் என்று சட்டத்திலே போட்டார்கள், நாடாளு மன்றத்துக்கே போகாத பெரியார், மக்கள் மன்றத்திடம் சென்று வெளியே இருந்து போராடிப் பெற்ற வெற்றி இது.
எனவே தகுதி, திறமை என்பது கானல் நீர்! உண்மையான தகுதி, திறமை வாய்ப்பு கொடுத்தால்தான் வெளிப்படும்.
“சட்டநீதி உங்கள் தொழிலாக இருந்தாலும், சமூக நீதிக்காக வாதாடுவதை உங்கள் கடமையாகக் கருதுங்கள்’’ என்று என்னுரையை நிறைவு செய்தேன்.
ஏராளமான மாணவ, மாணவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 2.5.1981 அன்று, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பல்கலைக்கழகப் பதிவாளர், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டு அரங்கம் நிரம்பி வழிய அரங்கத்திற்கு வெளியேயும், ஏராளமானவர்கள் நின்று கொண்டிருக்க நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினேன். பேராசிரியர் செல்வராசன் அவர்கள் தமிழ் இலக்கிய பண்பாட்டுக் கழகத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமை ஏற்றுப் பேசினார்.
அடுத்து, “சமூகநீதியும் பல்கலைக்கழகங்களும்’’ என்ற தலைப்பில் நான் எழுச்சியுரை யாற்றினேன்.
இன்றைக்கு நாட்டில் சமூகநீதி இருவகைக் களத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஒன்று வாதாடும் களம்; மற்றொன்று போராடும் களம்.
இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்ட மாமேதை தந்தை பெரியாரின் அரிய உழைப்பால்தான் இத்தகைய போர்மேகம் சூழ்ந்த நிலையிலும் இந்தத் தமிழகத்திலே, நாம் அறிவார்ந்த நிலையில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இங்கிலாந்து நாட்டில் எது சமூகநீதியோ, அல்லது சீன நாட்டில் எது சமூகநீதியோ, அதுவே இந்தப் “புண்ணிய பூமியில்’’ சமூகநீதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
வர்க்கரீதியாக மற்ற நாடுகளிலே ஒருவன் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாறலாம். இந்த நாட்டிலேகூட, ஒருவன் மதம் மாறலாம்; கட்சிகள் மாறலாம்; அது ஏராளம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இங்கே ஒருவன் சாதி மாறமுடியாது. இறந்துபோனாலும் சாதி விடாது. இறந்தும் இறவாமல் இருப்பது இங்கு சாதி. இறந்தவனை எரிக்கவோ அல்லது புதைக்கவோ சுடுகாடு போகும்போது; அங்கே அவனுக்கு முன்னாலே சாதி வந்து நிற்கிறது!
நான் சிறைச்சாலை சீர்திருத்தக் குழுவிலே ஒரு உறுப்பினராக இருந்தபோது, சிறைசாலைக்கு செல்லுகின்ற வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்பட்டதாலும், சிறைச்சாலை விதிகளைப் (Jail Manual) படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சிறைச்சாலை விதிகள்படி, “சிறைக்குள்ளே கிரிமினல் கைதிகள் செல்லும் போது, ‘அரைஞாண்’ கயிறு இருந்தால் அதை வெட்டி விடுவார்கள். காரணம் அதை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டு விடுவார்கள் என்ற காரணத்தால்! ஆனால், அதே சிறைச்சாலை விதிகளில் ஒருவன் பூணூல் போட்டிருந்தால் அதை எடுக்கச் சொல்லக் கூடாது; அப்படியே அனுமதிக்க வேண்டும்’’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனை இருக்கிறதே, அது சில ஆண்டுகளுக்கு முன் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அந்த நூற்றாண்டு விழாவையொட்டி “மாலை முரசு’’ பத்திரிகை ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. அதில், மனநோய் மருத்துவமனையில், “பிராமணர்களுக்கு’’ என்று ஒரு விசேஷ பிரிவு இருந்ததாக ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தார்கள். இப்படிப்பட்ட வேறுபாடு பிறப்பால் இருக்கக் கூடாது என்பதுதான் சமூகநீதி.
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனிச் சலுகை வேண்டும் என்பதும் சமூகநீதியின் அடிப்படையாகும்.
பள்ளத்திலே ஒருவன் இருக்கிறான், மேட்டிலே ஒருவன் இருக்கிறான்! சமமான நிலையை உருவாக்க வேண்டும்.
மற்றப் பிரிவினரைப்போல், ஒடுக்கப்பட்ட மக்கள் சமமான பிரதிநிதித்துவம் பெற வேண்டும்.
இந்தச் சென்னைப் பல்கலைக்கழகத்திலே இன்றைக்கு “சமூகநீதி’’ எந்த அளவிற்கு இருக்கிறது?
சமூகநீதி இந்த நாட்டிலே, இந்தப் பல்கலைக்கழகத்திலே மலர வேண்டும். நியாயங்களின் கதவுகள் திறக்கப்பட வேண்டும். அதுதான் பெரியார், அண்ணா, காமராசர் உலவிய இந்த மண்ணுக்குப் பெருமை என்று கூறினேன். விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
“மக்களின் மத விவகாரங்களில் ‘திராவிடர் கழகம்’ _ வேறு ஸ்தாபனம் தலையிடுவதை அரசு சகிக்காது’’ என்று கடலூரில் 2.5.1981 அன்று தமிழக முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியதை ‘முதல்வர் எச்சரிக்கை’ என்று தலைப்பிட்டு ஏடுகள் எல்லாம் கொட்டை எழுத்துகளில் தலைப்புகள் தந்து வெளியிட்டன.
இதனை நான் வரவேற்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “முதல்வரின் எச்சரிக்கையும் நமது பதிலும்!’’ என்று தலைப்பிட்டு 6.5.1981 அன்று வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கையில் நான், “மக்களின் மத விவகாரங்கள்’’ என்பவைகள் என்ன? அதில், “தலையிடுவது’’ என்றால் அது எந்தெந்தச் செயல்களைக் குறிக்கிறது என்பது பற்றியெல்லாம், இனி அடுத்துப் பேசும் கூட்டங்களிலோ அல்லது அவர் கூட்டும் செய்தியாளர்கள் பேட்டியிலோ (Press Conference) நமது முதலமைச்சர் அவர்கள் விளக்கினால் அவர் விடுத்துள்ள ‘எச்சரிக்கை’க்குப் பொருள் விளங்கும் என்றும், அதை விடுத்து, பொத்தாம் பொதுவாக மக்களின் மத விவகாரங்களில் தலையிட்டால் அதைச் சகிக்க முடியாது என்றால் என்ன பொருள்? என்று கேள்வி எழுப்பியிருந்தேன்.
மேலும், திராவிடர் கழகம் இன்று எந்த கிளர்ச்சியில் ஈடுபட்டாலும், எந்தக் கொள்கைத் திட்டம் இவற்றைக் குறிப்பிட்டாலும் அது நமக்கு நமது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் வகுத்துத் தந்தவைகள்தானே, எடுத்துச் சொன்னவைகள்தானே!
எனவே, ‘அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதுபோல’ நமது முதலமைச்சர் எந்தக் கோபத்தையோ வைத்துக்கொண்டு, யார் மீதோ பாய வேண்டியதற்குப் பதில் நம்மீது பாய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவது தந்தை பெரியார் அவர்களது வாழ்நாள் பணியைக் கொச்சைப்படுத்தும் செயல் என்பதை அவர் உணர வேண்டும். அவரது இந்த “எச்சரிக்கையை’’ அவரது இயக்கத் தோழர்கள் சக அமைச்சர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா? வரவேற்கின்றனரா? நாடு இதனைத் தெளிவாக இனி கேட்கும்!
திராவிடர் கழகம், “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கூட்டமல்ல; சுழன்றடித்த அடக்குமுறைச் சூறாவளியெல்லாம் கண்ட ஆயிரம் காலத்து ஆலமரம். மிரட்டுவோரும் அதனடியில் நிற்க வேண்டி வரும் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்!’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
10.05.1981இல் கரூரில் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கரூர் மாநகரம் முழுவதும் கருஞ்சட்டை வீரர்களின் சொந்த வீடு என்பதை உறுதி செய்து, குடும்பம் குடும்பமாக கழகத் தோழர்கள் கூடியிருந்தார்கள். மாநாட்டில் நான் சிறப்புரையாற்றினேன்.
அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்தே கரூர் என்றால் கழகத்தின் கருவூலம் என்ற நிலையில் செயல்பட்டு வந்த ஊரேயாகும். போராட்டத்திற்கு தொண்டர்களைக் கொடுப்பதிலும் சரி, கழகத்திற்கு நிதி திரட்டுவதிலும் சரி, கரூர் முதல் வரிசையில் முன்னணியில் நின்ற நகரமேயாகும்.
இன்றைய தினம் கரூர் படைத்து இருக்கும் ஊர்வலம் சரித்திரச் சிறப்பானது. நடக்க இருக்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் பற்றி பொதுமக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தும் ஊர்வலமாக அமைந்தது. கருப்புச் சட்டைக்காரர்களுக்-கு உரித்தான இராணுவக் கட்டுப்பாடு; காவல் துறையினருக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.
அய்யா ஊட்டிய உணர்வு, அம்மா பெருக்கிய உணர்வு குறையவில்லை. சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது என்று கூறும் வண்ணம், இந்த இயக்கம் சாகவில்லை; சாகாது, சாகவேண்டிய தமிழர்களைக் காப்பாற்றப் புறப்பட்டுள்ள இயக்கம் என்பதை மெய்ப்பிக்கும்.
வகுப்புரிமை மாநாட்டிற்குத் தலைமை வகித்து சுயமரியாதை முழக்கம் செய்த துணைவேந்தர் கல்வி வள்ளல் சுந்தரவடிவேலரின் உரை தமிழினப் பகைவர்களுக்குச் சரியான எச்சரிக்கை முழக்கமாக அமைந்தது.
வரலாறு படைத்த கரூர் மாநாட்டில் அன்புச் சகோதரர் கோவை செழியன் அவர்களின், இனமுழக்க உணர்வு, அவரது மனம் திறந்த பேச்சு மட்டுமல்ல; மடைதிறந்த கருத்து வெள்ளமாகும்.
இரண்டாம் மராட்டிய தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் “தலித்பந்தர்’’ தலைவர் திரு.அருண் காம்ப்ளேவின் சிங்கநாதம் தந்தை பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் சொந்தம் எனக்கூறி அகில உலகத்திற்கே பிரகடனப்படுத்தியதும் பண்பாட்டுப் புரட்சிக்குத் தயாரானால் ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வு இல்லை, எனக்கூறினார். அதனை இங்கு சுயமரியாதை இயக்கம் எப்படிச் சாதித்தது என்று சுட்டிக்காட்டி மாநாட்டினை துவக்கியதும், மனுவின் பிரதிபலிப்புதான் இன்றையச் சாதிக் கலவரங்கள் என்பதை மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத் தக்கதாகும்.
‘தாலி’ என்னும் அடிமைச் சின்னம் எங்களுக்கு வேண்டாம் என்று அதனை சேலம் வேலூரைச் சேர்ந்த ராஜமணி _ வீரபாண்டியன் தம்பதியினர் அகற்றினர்.
தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியை உலகுக்குத் தெரியப்படுத்தினர். மாநாட்டிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்த வரவேற்புக் குழுத் தலைவர் திரு.கே.கே. பொன்னப்பா, பொருளாளர் திரு.கா.எஸ். இராமசாமி, செயலாளர் கண்ணப்பன், முதுபெரும் பெரியார் தொண்டர் திரு.பி.கே. அய்யா மற்றும் தோழர்கள், ஏ.கே.சாமி, செல்லப்பன், வீரண்ணன், சாமியப்பன், இளைஞரணிச் செயலாளர் ராசசேகரன், பகுத்தறிவாளர்க் கழகத் தலைவர் வழக்குரைஞர் பி.ஆர்.குப்புசாமி, மாநாட்டின் வெற்றிக்கு பெரிதும் ஒத்துழைத்த சேலம் மாவட்டத் தலைவர் க.சண்முகம், மாவட்டச் செயலாளர் தன்னாரி, திருச்சி கிழக்கு மாவட்டத் தலைவர் பி.பி.வீரப்பா, ஜோசப் ஆகியோர் பணிகள் பாராட்டத்தக்க வகையில் குன்றாத கொள்கை உணர்வோடும் மங்காத ஒளியோடும் அதனை நிரூபித்துக் காட்டினர்.
17.05.1981 அன்று மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்துவதை முன்னிட்டு நாடு முழுவதும் நான் ரயில் பயணம் மேற்கொண்டு கழகத் தோழர்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்த, 13.05.1981 முதல் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் தொடங்கி தஞ்சை பாபாநாசம் வரையிலும் சென்றேன்.
மாவட்டத் தலைநகரங்களில் கழகப் பெரியோர்கள் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனுதர்ம சாஸ்திரத்தின் சில பகுதிகள் அச்சிடப்பட்ட அச்சுத்தாள்தான் கொளுத்தப்படும் என்றும், தலைமைக் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள அந்த அச்சுத்தாள் தமிழகம் முழுவதும் தோழர்களுக்கு வழங்கப்பட்டு அதனைக் கொளுத்த அறிவுறுத்தப்பட்டது.
கருவறைத் தீண்டாமையானாலும், தமிழ் வழிபாட்டுரிமையானாலும், தமிழனின் உரிமை மறுக்கப்பட்டு _ அவனை கீழ்மகனாகக் காட்டுவதற்கு அடிப்படை இந்த மனு ஸ்மிருதிதான்!
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’’ என்றாலும், இந்த மனுஸ்மிருதிகள் அடிப்படையில் சமத்துவத்திற்கு எதிராக வுள்ளன. எனவே, அவை கொளுத்தப்பட வேண்டும்.
“மனுதர்மம் என்பது வேதமல்ல; மதச் சட்டம்தான்! இதன்மூலம் மனுதர்மத்துக்கும், மத தர்மத்துக்கும் சம்பந்தமில்லை’’ என்று ‘தினமணி’ ஏடு எழுதியது.
இப்படிச் சொல்லியிருப்பதன் மூலம் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சிக்கலை உருவாக்கி விட்டார்கள். எம்.ஜி.ஆர் டில்லிக்குப் போய் திராவிடர் கழகத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மனுதர்மத்தை எரித்தால் இந்த அரசு அதற்காக எங்களைக் கைது செய்து சிறையில் தள்ளட்டும்!
சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மனுநீதி எரிப்புப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்து இருந்தேன்.
திட்டமிட்டபடி 17.05.1981 அன்று சென்னையில் கொத்தவால்சாவடி அருகே ஆச்சாரப்பன் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் பேசி முடித்தவுடன் என்னையும் கழகத் தோழர்கள் பலரையும் இரவோடு இரவாகக் கைது செய்தனர்.
மனுதர்மத்தை எரிக்கும் கழகத் தோழியர்கள் மற்றும் தோழர்கள் பட்டியல் ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக, கிராமம் கிராமமாக பட்டியல் ‘விடுதலை’யில் வெளியிட்டே வந்தோம்.
18.05.1981 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் “மனுதர்ம எரிப்புக் கிளர்ச்சியும் தமிழக அரசின் விசித்திரப் போக்கும்!’’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில், குடந்தை மாநாட்டில் நாம் தீர்மானித்தபடியும், கரூரில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாக கமிட்டி ஒப்புதல் அளித்தபடியும் தமிழ்நாடு முழுவதும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று, அது மிக வெற்றிகரமாக நடந்துள்ளது என்பதனை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
***
பெரியார் பெருந்தொண்டர் _ சீர்திருத்தக் கவிக்கொண்டல், சீர்திருத்தப் பாடல்கள் மூலம் நிலைத்த வாழ்வை எய்தியவருமான மானமிகு உடுமலை நாராயணகவி அவர்கள் 23.05.1981 அன்று இயற்கையெய்தினார்கள். இது இயக்கத்திற்கு பெரிய இழப்பாகும்.
‘கருத்தும் நகைச்சுவையும் விரவிய பாடல்கள் எழுதுவதில் நிகரற்றவர்’ என உடுமலையாரை கலைவாணர் புகழ்ந்திருக்கிறார்.
இத்தகைய புகழைப் பெற்றிருந்தவரான அவரது இறப்பின்போது நான் சுற்றுப் பயணத்தில் இருந்த காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை.
அவர் உயிருடன் இருந்தபோது, 26.02.1981 அன்று உடுமலை வட்டம் ‘பூலவாடி’யில் கவிஞர் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு பெரியார் பெருந்தொண்டர் பட்டயத்தை வழங்கி, கைத்தறி ஆடையை அவருக்குப் போர்த்தினேன்.
இயக்கத்தின் இன்றைய நிலையையும் ‘விடுதலை’ ஏடு பற்றியும் அக்கறையோடு என்னிடத்தில் விசாரித்தார்கள். நான், சிறுவயதில் மாணவர் கழகப் பிரச்சார பயிற்சி முகாமில் பயிற்சி முடிந்து கோவை மாவட்டச் சுற்றுப் பயணம் வந்தபோது, அதே பூலவாடியில் கவிஞரின் இல்லத்தில் தங்கிப் பிரச்சாரத்திற்குச் சென்றதையும் நான் அவருக்கு நினைவுப் படுத்தியபோது கவிஞர் நாராயணகவி அவர்கள் மிகுந்த உவகைப்பட்டார். கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம், 04.06.1981 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர், திண்டிவனம் இராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
இரங்கல் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர் அவர்கள், “உடுமலை நாராயணகவி அவர்கள் மறைவிற்கு 10 நாட்களுக்கு முன் எனக்கு அவரிடமிருந்து தொலைப்பேசி வந்தது. அவரால் பேச முடியவில்லை. அவர் சார்பாக நண்பர் செல்லமுத்து என்னிடம் பேசினார். திமுக ஆட்சிக்காலத்திலே நாராயணகவி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ‘பொற்கிழி’ வழங்கிச் சிறப்பித்தோம்.
அவர் வெறும் சினிமாக் கவிஞர் மட்டுமல்ல. நந்தனாருக்குப் போட்டியாக “கிந்தனார்” காலட்சேபத்தை அவர் எழுதி, என்.எஸ்.கே. நடத்தினார். பாமர மக்களின் உள்ளத்திலே பதியத்தக்க அளவுக்கு அவர் கருத்துக்களை எடுத்துச் சொன்னார். பராசக்தி, வேலைக்காரி, சொர்க்கவாசல் படங்களிலே அவர்அற்புதமாகப் பாடல்களை எழுதினார்.
உடுமலை நாராயணகவி அவர்களின் பாடல்களை எல்லாம் நண்பர் செல்லமுத்து அவர்கள் திரட்டி _ தொகுத்துத் தரவேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
இரங்கல் கூட்டத்தில் தலைமை வகித்து நான் பேசும்பொழுது, “ஆத்திகம் எது? நாத்திகம் எது? என்ற உடுமலை கவியின் அருமையான பாடல்கள், சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு எழுதப்பட்டதைச் சென்சார் கத்தரிக்கோலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அண்ணாவின் ஆலோசனையை ஏற்று, “ஆகும் நெறி எது? ஆகா நெறி எது?’’ என்று அதைப் பிறகு மாற்றினார். உடுமலை நாராயணகவி அவர்கள் ‘குடிஅரசில்’ வந்த கருத்துக்களை எல்லாம் பாடலாக்கினார்.
நான் கடைசியாக அவரைச் சந்தித்தபோது ‘நான் சாகும்வரை நாத்திகன்தான்’ என்று உறுதியாகச் சொன்னார். அவர் கலைமேதை, கவிதைத் துறையில் அவர் ஒரு வழிகாட்டி’’ என்று குறிப்பிட்டேன்.
இரங்கல் கூட்டத்தில் திக., திமுக. உள்ளிட்ட தோழர்கள், தோழியர்கள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
***
“24.05.1981 அன்று, தமிழ்ப் பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ‘தினத்தந்தி’ நிறுவனர் பெருமதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனார் அவர்கள் மரணமுற்றார். அவர் இறப்பு, தமிழ்ப் பத்திரிகை உலகிற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். நான் சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் சி.பா.ஆதித்தனாரின் மறைவுச் செய்தி கேட்டு, சி.பா.ஆதித்தனாரின் துணைவியார் திருமதி கோவிந்தம்மாள் அவர்களுக்கு தந்தி மூலம் இரங்கல் செய்தி விடுத்தோம்.
“பாமரர்களிடமும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பெருமை ஆதித்தனாரைச் சாரும்’’ என தந்தை பெரியார் மனம் திறந்து பாராட்டும் அளவிற்கு பெருஞ்சாதனை புரிந்தவர் ஆதித்தனார்.
தமிழர்களிலும் தலைசிறந்த பத்திரிகையாளர் உருவாகலாம் என்ற சாதனையை நிகழ்த்தியவர் ஆதித்தனார்.
தமிழின உணர்வுக்காக அவர் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவின் மூலம் தமிழ்நாடு ஒரு பத்திரிகைப் பெருமகனான பேரறிவாளரை, தொழில் மேதையை _ ஆற்றல் வாய்ந்த நிர்வாகியை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது துணைவியார் அம்மையார் அவர்கட்கும் செல்வர்கள் ராமச்சந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன், மருமகன் கே.பி.கந்தசாமி ஆகிய அனைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.
கழகத்தின் சார்பில் சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் எனது தலைமையில் பெரியார் திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், அப்துல் சமது எம்.பி., டி.செங்கல்வராயன், திண்டிவனம் இராமமூர்த்தி, தெள்ளூர் தருமராசன், டைரக்டர் பஞ்சு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
இரங்கல் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றுகையில், “பத்திரிகைத் துறையில் மாபெரும் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியவர் ஆதித்தனார். தந்தை பெரியார் அவர்களிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு; அதற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஆதித்தனார் அவர்கள், மலேயா (சிங்கப்பூர்) ஆகிய பகுதிகளில் இருந்தபோதே தந்தை பெரியாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தவர். அவர் தமிழகத்திற்கு வந்தஉடன் முதலில் தந்தை பெரியாரைத்தான் சந்தித்தார். தந்தை பெரியார் 89ஆவது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஆதித்தானார் எழுதிய கட்டுரையிலே அவரே இதைத் தெரிவித்து இருக்கிறார். “மறக்க முடியாத மூன்று நாட்கள்’’ என்பது அக்கட்டுரையின் தலைப்பு!
தேசப்பட எரிப்பு
தமிழ்நாடு நீங்கலாக, இந்திய தேசப்படத்தை எரித்த கிளர்ச்சியில் தந்தை பெரியார் அவர்களோடு அவரும் கலந்துகொண்டார். இரண்டு பேரும் சென்னை மத்திய சிறையிலே மூன்று நாட்கள் அடுத்தடுத்த அறையிலே இருந்தார்கள். அந்த மூன்று நாட்களையும் “மறக்க முடியாத மூன்று நாட்கள்’’ என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையில் அவர் எழுதியிருந்தார்.
திருக்கழுக்குன்றத்திலே நடந்த திராவிடர் கழக மாநாட்டுக்கு தாம் சென்றிருந்ததையும் அண்ணாவைச் சந்தித்ததையும் அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடுகிறார்.
ஆதித்தனாருடைய மாமனார் மணச்சை ஓ.ராமசாமி (நாடார்) மலேயாவில் இருந்தார். அவர் “குடிஅரசு’’ பத்திரிகையைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.
1929இல் தந்தை பெரியார் அவர்களும் அன்னை நாகம்மையார் அவர்களும் மலேயா சென்றபோது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பைத் தந்தவர் ஓ.ராமசாமி நாடார். அப்போது மலேயா நாட்டில் தந்தை பெரியார் வருகைக்கு சிறு சலசலப்பு இருந்தது! ஓ.ராமசாமி நாடார் அவர்கள் அதை முறியடிக்கும் வகையில் எழுச்சியான வரவேற்பு தந்தார். தந்தை பெரியார் அவர்களுக்கு மிக விலை உயர்ந்த “கடிலாக்’’ என்ற வெளிநாட்டுக் காரைத் தந்து மலேயாவை விட்டுச் செல்லும் வரை இந்தக் காரிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழிலே ஒரு நாளேடு துவக்கி லட்சோப லட்சம் பிரதிகள் விற்கச் செய்து சாதனை படைத்தவர் அருமை ஆதித்தனார் அவர்கள்.
அந்த ஏடு முதியோர் கல்வியின் முன்னோடியாகத் திகழ்ந்தது. 1948ஆம் ஆண்டு அவர் ‘தமிழன்’ என்ற வார ஏட்டைத் துவக்கினார். மிகச் சுவையான துணுக்குச் செய்திகள் அதிலே வரும். கோ.தா.சண்முக சுந்தரம் அதற்கு ஆசிரியர். நான் மாணவனாக இருந்தபோது அதைப் படிப்பேன். தமிழ் ஏடுகளிலே கேலிச் சித்திரங்களுக்கு மதிப்பை உண்டாக்கியவர் அவர்தான்.
தமிழ்ப் பத்திரிகை உலகில் பெரும் புரட்சி நடத்தியவர், முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், மிகப் பெரும் தொழில் அதிபர் இப்படிப் பல்வேறு பெருமைக்கும் உரியவரான ஆதித்தனார் மறைவுக்கு ஆங்கில ஏடுகளில் இரண்டு வரி செய்திகள் மட்டுமே வந்தன.
சாதாரணமாக பத்திரிகையாளர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்காக இரண்டு காலம்கூட எழுதுவது பத்திரிகை மரபு. அந்த நாகரிகத்தையும்கூடக் கடைபிடிக்கவில்லை இந்த ஆங்கில நாளேடுகள். காரணம் அவர் சூத்திரர் _ தமிழர்தானே! வெகுச் சிறிய செய்தியைத்தான் போட்டன!
அதேநேரத்திலே பாலக்காடு மணி அய்யர் என்ற மிருதங்க வித்வான் இறந்த செய்தி முதல் பக்கத்தில் மிகப் பெரிய செய்தியாக புகைப்படத்துடன் அதே ஏடுகள் வெளியிட்டன. காரணம், முகத்தில் பிறந்த ஜாதி அவர்!
மனுநீதி எங்கே இருக்கிறது? என்று கேட்பவர்களுக்குச் சொல்கிறோம்; மனுநீதி இங்கே இருக்கிறது. ஆதித்தனார் முதுகில் பூணூல் தொங்காத ஒரு ‘குறை’யால் அவருக்கு இந்த நிலை! அவர் மறைவேகூட இந்தச் சமுதாயத்திற்கு ஒரு பாடம். இதைச் சுட்டிக்காட்டினால் ‘வகுப்புவாதம்’ என்கிறார்கள்.
“ஆங்கிலப் பத்திரிகையை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு அரசியலையே மாற்றிவிடலாம் என்ற காலம் மலையேறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டேன்.
இரங்கல் கூட்டத்திற்கு ஆதித்தனார் மருமகனும் ‘தினகரன்’ பத்திரிக்கை உரிமையாளருமான கே.பி.கந்தசாமி, ஆற்காடு வீராசாமி எம்.எல்.சி. ஆகியோரும், கே.டி.கோசல்ராம் எம்.பி. அவர்கள், காந்தி காமராசர் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் தெள்ளூர் தருமராசன் உள்ளிட்ட பிரமுகர்களும், கழகத் தோழர்களும், ஆதித்தனார் குடும்பமும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
(நினைவுகள் நீளும்…)