2019 – தேர்தலை இனப் போராட்டமான தேர்தலாய் நடத்துவோம்!

செப்டம்பர் 01-15

கே:    “மாதொருபாகன்’’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது எழுத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலல்லவா?

    – இலட்சுமிபதி, தாம்பரம்

ப:    நிச்சயமாக. சாகித்ய அகாதமியின் தேர்வு மூலம் தமிழ்நாட்டிற்கே தனிப்பெருமை தரும் தமிழ் எழுத்தாளர்.

    சில ஜாதி வெறியர்களின் தலையீட்டிற்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் வைத்த குட்டு மறந்து விட்டதா?

    சலசலப்புக்கு சாகித்ய அகாதமி அஞ்சக்கூடாது. பெருமாள் முருகனின் பெருமை _ தமிழனின் பெருமையாகும்.

கே:    அண்ணாவின் பெயரை கட்சிப் பெயரில் கொண்டவர்கள் குருமூர்த்திகளின் வழிகாட்டுதலில் செயல்படுவது எதைக் காட்டுகிறது?

    – கெ.நா.சாமி, சென்னை-72

ப:    அண்ணாவின் பெயரில் நடைபெறும் பெருத்த மோசடி. போலிகளின் பதவி வெறியின் பச்சை படமெடுத்தாடல் இது. அண்ணா “நாமம்’’ வாழ்க!

கே:    ஜெயலலிதா மறைந்த உடனே பா.ஜ.க.வெனும் குரங்கு அப்பம் பங்கிட  முயல்வதைத் தாங்கள் எடுத்துக்காட்டியும், இந்தப் பூனைகள் குரங்கிடமே தஞ்சம் புகுந்துவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    – செல்வம், மயிலை

ப:    நாம் சொல்லும் எதையும் காலந்தாழ்ந்தே புரிந்துகொள்ளும் நமது சமுதாயம் _ இனம்; அதற்குள் குதிரை காணாமற் போய்விடுமே!

கே:    மாட்டுக்காக மனிதனைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் சமூகநீதி, இடஒதுக்கீட்டை குழிதோண்டிப் புதைக்கும் வேலையைச் செய்துகொண்டு, ஜாதிவெறியைத் தூண்டிக்கொண்டு, மறுபுறம் பழங்குடியினர் வீட்டில் சாப்பிடும் கபட நாடகம் மக்களிடம் எடுபடுமா?

    – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    ‘வித்தைகள்’ பார்ப்பதற்கு அந்த நேர வே(வா)டிக்கையே தவிர, அது வாழ்வுமுறையை மாற்றிவிடாது _ நிச்சயமாக.

கே:    ‘பார்ப்பன குரு’ சங்கராச்சாரி, தமிழை ‘நீசபாஷை’ என்று சொல்லிவிட்ட பிறகு அந்த ‘நீசபாஷை’யில் பத்திரிகைகளை நடத்தி பார்ப்பனர்கள் வயிறு வளர்ப்பது நாணயமான செயலா?

    – ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி

ப:    நாய் விற்ற காசு குலைக்காது; கருவாடு விற்ற காசு நாறாதே!

கே:    அய்யாவின் கருத்துக்களை உலக மயமாக்கும் தங்களின் முயற்சிக்கு, ஜெர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு சுயமரியாதை மாநாடு எந்த அளவுக்குத் துணைபுரிந்தது?

    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    பெரும் அளவுக்குத் துணை புரிந்தது; நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற நிலவில் காலடி எடுத்துவைத்த மனிதர் கூறினார்,

    “இது மனிதனின் சிறு சில அடிகள்தான் எனினும் மனித குலத்தின் வேகப் பாய்ச்சலாக மாறியே தீருவது உறுதி!’’ என்று. அதுதான் நம் பதிலும் கூட!

கே:    இந்திய நதிகளை இணைக்க ஆர்வங்காட்டாத மோடி அரசு இரு எட்டப்பர் அணிகளை இணைத்துவைத்து இத்தனை ஆட்டம் போடுவதேன்?

    – தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

ப:    இந்த இரு அணிகள் கோலுக்கு ஆடுபவர்கள். நதிகள் அப்படியா? அவரது விருப்பத்திற்கேற்ப கங்கை நதியை தூய்மைப்படுத்த முடியவில்லையே!


கே:    வை.கோ. தி.மு.கவுடன் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியலில் வலு சேர்ப்பதோடு, இந்தியா அளவில் மதவாத சக்திகளுக்கு எதிராய் அணி அமைப்பதில் தாங்களும் அவரும் தீவிரமாய் ஈடுபடுவீர்களா?

    – க.செல்வம், கோவை

ப:    நம் பணி என்றும் அனைவரையும் இணைத்து, 2019இல் ஒரு பெரும் இனப் போராட்டமாக தேர்தலை நடத்துவதுவதற்கு அனைத்து முயற்சிகளையும் அமைதியாக, ஆழமாகச் செய்யும் பணியாகும்!

கே:    நீட் தேர்வை நிரந்தரமாய் நீக்க தொடர் போராட்டங்களோடு, மேலும் சட்டப்படியான நடவடிக்கைகள் ஏதேனும் உண்டா?

    – மா.ரமேஷ், மதுரை

ப:    நீட் தேர்வை ஒழிப்பது ஒரு தொடர் போராட்டத் தேவையாகும்; பொருத்திருந்து பாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *