ஆகஸ்டு 1-_15, 2017 இதழ் படித்தேன். தலையங்கத்தில், ‘திராவிடரா? தமிழரா?’ என்ற தலைப்பின் கீழ் தந்திருக்கும் அரிய விளக்கம், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கம். குழப்பும் தேசியத் தலைமைக்கு ஒரு கருத்து சம்மட்டி அடி!
‘மனுநீதி, மறுவடிவமே நீட் தேர்வு! இந்தித் திணிப்பை, ஒழித்ததுபோல் இதனையும் அறவே ஒழித்திட வேண்டும். மாநில அரசும், இதற்குத் துணை புரியவேண்டும்! அறிவியலும், இந்து மதமும் இரு துருவங்களே. ஒன்று சேர முடியாது! மூடநம்பிக்கையின் முடை நாற்றத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது, தண்ணீரைத் தேடி! சிறுகதை! தன்மானத்தை மனச்சான்றை, மக்கள் நலத்தை வருமானத்திற்காக விற்றுவிடும் சில ஊடகங்களின் மோசடியே மூடநம்பிக்கைகளின் வளர்ச்சிக்குக் காரணம். ஆளுக்கு 15 லட்சம் வீடு வந்துசேரும் என்ற மோடிக்குத் தந்த விளம்பரம் தானே இன்றைக்குள்ள இழிநிலைகளுக்குக் காரணம். ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்ற தங்களுடைய தன் வரலாறும், ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற கலைஞர் அவர்களின் தன் வரலாறும் வெறும் வாழ்க்கை வரலாறல்ல; அது, திராவிட இயக்கங்களின் தியாக வரலாறு! ஒவ்வொரு தமிழரின் கரங்களிலும் தவழ வேண்டிய தமிழினத்தின் காலப் பெட்டகம்! நேற்று, இன்று, நாளை? என்ற சிந்தனையைத் தூண்டும் இளையோர், மாணவர், மகளிர் அனைவரின் வழிகாட்டிகள்!
‘நீடாமங்கலம் இழிவன்கொடுமை’ ஒன்றே போதும், திராவிட இனத்தை எத்தகைய கொடுமைகளிலிருந்து திராவிட இயக்கங்கள் மீட்டெடுத்திருக்கின்றன என்பதற்குச் சான்றுதர!
மொத்தத்தில் ஆக. (1-_15) உண்மை இதழ், ஒரு சிந்தனைத் திறவுகோல் என்றால் அது மிகையன்று!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதும் “அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?’’ என்னும் தொடரில் ஆகஸ்டு (1_15) 2017 இதழில் வெளிவந்துள்ள மனுதர்ம செய்திகள் மதவாத சக்திகளை தோலுரிப்பதாய் உள்ளது. அம்பேத்கரை இந்துத்வாவாதியாகக் காட்ட முயலும் கயவர்களுக்கு சம்மட்டி அடியாக இத்தொடர் அமைவது பாராட்டத்தக்கது.
– க.பழநிசாமி, திண்டுக்கல்
கோவை மாவட்டம், அட்டப்பாடியைச் சேர்ந்த துளசி என்ற இருளர் இனப் பெண் இடஒதுக்கீட்டால் மருத்துவரான செய்தி ‘உண்மை’ இதழில் (ஆகஸ்டு 16_31, 2017)இல் கண்டு மகிழ்வடைந்தேன். அக்கட்டுரையிலும் மற்றும் தமிழ் இதழ்களிலும் மருத்துவம் பயின்ற முதல் இருளர் இனத்துப் பெண் துளசி என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துளசிக்கு முன் இருளர் இனத்தைச் சேர்ந்த தங்கம் என்ற சென்னையைச் சேர்ந்த பெண் 1980இல் இடஒதுக்கீட்டால் மருத்துவராகி இருக்கிறார் என்ற உண்மையை தங்களுக்கு ஆதாரத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன். இதனுடன் ஆதாரத்தையும் இணைத்துள்ளேன்.
– ச.பாஸ்கர், சென்னை-14