தொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்!

செப்டம்பர் 01-15


தந்தை பெரியாரின் சிந்தனைகளை இன்று உலகமே ஏற்பதற்குக் காரணம் அவரது தொலைநோக்குப் பார்வையும்: சரியெனப் பட்டதை தயங்காது கூறியதும்; மூலகாரணங்களைக் கண்டறிந்து அதனைத் தகர்க்கவும், களையவும் அவர் போராடியதும்; மொழி, நாடு, இனம் என்ற குறுகிய வட்டத்துக்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளாது உலகநோக்கில் தன் சிந்தனைகளைக் கூறியதும்; சமரசம் செய்து கொள்ளாது எதையும் அஞ்சாது எதிர்த்தத் துணிவும்; எதையும் தயங்காது எங்கும், எப்போதும், யாரிடமும் கூறிய வெளிப்படையான இயல்பும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்த மாண்பும்; மனிதநேய அணுகுமுறை போன்றவையாகும்!

சோதனைக் குழாய் குழந்தை பிறக்கும், கம்யில்லாத் தொலைபேசி ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும், உருவங் காட்டிப் பேசிக்கொள்வர் போன்ற எதிர்காலக் கண்டுபிடிப்புகளை எண்பது ஆண்டுகளுக்கு முன்பே கணித்துச் சொன்னது மட்டும் அவரின் தொலைநோக்குத் திறன் என்று கொள்வது சரியன்று , அவற்றையும் தாண்டி அவர், பல துறைகளில், பல சிக்கல்களில், பல அமைப்புகளில் தன் தொலைநோக்குச் சிந்தனைகளைக் கூறி உலக மக்களையே விழிப்பிற்குள்ளாக்கியுள்ளார்.

இந்திய விடுதலை பார்ப்பன ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் :

இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லாம், ஆங்கில ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் சுதந்திர வாழ்வு வேண்டும் என்ற கோணத்தில், கொள்கையில், நோக்கில் சிந்தித்துச் செயல்பட்ட நேரத்தில், போராடிய காலத்தில் சுயமரியாதையும், பகுத்தறிவும், கல்வியும், விழிப்பும், சமத்துவ எண்ணமும் இல்லாத மக்கள் வாழும் இந்தியாவில் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவது முழுச் சுதந்திரம் ஆகாது; ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் நாம், ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தில்தான் இருக்கும் நிலை வரும். அது ஒருபோதும் சுதந்திரமாகாது. எனவே, அவர்களின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபடும் போராட்டங்களையும் நாம் நடத்தி வெற்றி பெற்றால் மட்டுமே, நாம் முழுமையான சுதந்திரம் பெற்ற மக்களாக வாழ முடியும் என்றார்.

அய்யா பெரியாரின் தொலைநோக்குச்
சிந்தனையின்படி இன்று அப்படியே நடக்கிறதே!

உண்ணும் உணவுக்குத்  தடை, பேசும் மொழிக்குத் தடை, உடுத்தும் உடைக்குத் தடை, சொல்லும் கருத்துக்குத் தடை. படிக்கும் படிப்புக்குத் தடை, விரும்பும் வாழ்க்கைக்குத் தடை என்று இன்று மக்களின் ஒவ்வொரு உரிமையும் பறிக்கப்பட்டு, ஆரிய பார்ப்பன ஆதிக்கப்படியான ஆட்சியும் நீதியும்தானே இங்கு நடக்கிறது! நூறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னபடிதான் இன்று நடக்கிறது என்று எல்லோரும் கூறி வியக்கிறார்களே!

இந்தியை நுழையவிட்டால் சமஸ்கிருதமே ஆட்சிமொழியாகும்!

எண்பது ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுகையில், இந்தியை இன்று திணித்துவிட்டால், எதிர்காலத்தில் சமஸ்கிருதமே ஆட்சிமொழியாக அது வழிவகுக்கும் என்றார்.

இன்று அது அப்படியே நடப்பதை, அதற்கான முயற்சியில் ஆரிய பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவு பெற்ற ஆட்சியும் ஈடுபடுவதை எல்லோரும் அறிய முடிகிறதே!

இந்தி என்பது ஓர் இடைக்கால ஏற்பாடுதான்; இந்தியைத் திணித்து பரப்பிவிட்டால் அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை எளிதில் கொண்டுவந்து விடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.

பார்ப்பனர்கள்  அறிவிக்கிறார்களே! இந்து மதத்தை வளரவிட்டால்
சூத்திரனாகவே வாழ்வோம்!

நமக்குள்ள இழிவும், நம் மீதான ஆதிக்கமும், ஒழிந்து, நாம் உரிமையும், மானமும், சுதந்திரமும் உள்ள மக்களாய் வாழவேண்டுமானால், இந்துமதம், அதன் உள்ளடக்கங்களான சாஸ்திரங்கள், ஜாதிய படி நிலைகளும் ஒழிக்கப்பட வேண்டும், இவை செல்வாக்கு பெற்று நிலைபெற்றால் நாம் சூத்திர நிலையில்தான் அடிமைகளாய் மானமும், உரிமையும் இழந்து வாழ நேரிடும் என்றார் தந்தை பெரியார்.

இன்று அது அப்படியே நடக்கிறதே!

இந்து மதம் சார்ந்த ஆட்சி இங்கு வந்த நாள் முதலே, நம்மைச் சூத்திரனாக்கும் முயற்சியும், நம் மொழியை நீசபாஷையாக்கும் செயல்பாடுகளும் நம் பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் அழித்தொழிக்கும் முயற்சிகளும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றனவே!

புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியைக் கொண்டு வருகிறார்கள்; நீட் தேர்வு என்ற பெயரில் நம் கல்வி உரிமையை, கல்வி வாய்ப்பைத் தடுக்கிறார்கள், பறிக்கிறார்கள்!

நம்முடைய பண்பாடுகளை, விளையாட்டு களை, கலைகளை, மருத்துவத்தை ஒதுக்கி, ஓரங்கட்டி அழிக்க முயற்சிக்கிறார்கள்.

செம்மொழி என்ற தமிழுக்குரிய உண்மையான தகுதியை நாம் பெற்றுள்ள நிலையில், அதை எப்படியாவது ஒழித்துக்கட்டி விடவேண்டும் என்பதற்காக, அதற்கான அலுவலகத்தையே முடக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள்!

தமிழரின் தொன்மையை, இந்த மண்ணின் உரிமையை, அவர்களின் நாகரிகப் பெருமையைத்  தெளிவாக்கக் கூடிய அகழாய்வுகளை முடக்குகிறார்கள், கிடைத்தவற்றை மறைக்கிறார்கள், மேலும் கண்டறியும் முயற்சிகளைத் தடுக்கிறார்கள்!

ஆக, மதம் வளர்ந்தால், அது ஆட்சி அதிகாரம் பெற்றால் என்னென்ன கேடுகள் வரும் என்று தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கில் கூறினார்களோ அவை அனைத்தும் இன்று நடக்கின்றன.

மொழியில் காலவளர்ச்சிக்கேற்ப கருத்தேற்றம் இல்லையேல் அது அழியும்!

எந்தவொரு மொழியும், கால வளர்ச்சிக் கேற்ற கருத்தாக்கங்களை தன்னுள் வளர்த் தெடுக்க வில்லையென்றால் அது காலவோட்டத்தில் நிலைத்து நிற்காமல் அழியும்.

தமிழ் மொழியை காட்டுமிராண்டிக்கால நிலையிலே வைத்திராமல், கால வளர்ச்சிக்கேற்ற அறிவியல், வாழ்வியல், தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளை காலந்தோறும் சேர்த்து வளர்த்தெடுக்க வேண்டும்.

பழைய குமரேச சதகத்தையும், திருவிளையாடல் புராணங்களையும், கம்ப இராமாயணங்களையும் மட்டுமே போற்றிக் காத்தால் அது தமிழை அழிக்கும் செயல்களாகும் என்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு கூறினார். அவரின் உயரிய தொலைநோக்கைப் புரிந்துகொள்ளா தவர்கள், தமிழைப் பழிக்கிறார், தரக்குறைவாகப் பேசுகிறார் என்று பழிபோட்டனர்.

ஆனால், இன்று தமிழ் வளர தழைக்க, எல்லா அறிவியல் கருத்துகளும் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் அழியும் என்று எச்சரிக்கின்றனர். இது பெரியாரின் சிந்தனை வெற்றியல்லவா?

பள்ளிப் படிப்புவரை தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்வியை தமிழில் படிக்க உரிய பாட நூல்கள் மொழியாக்கம் செய்யப்படாமையால் உயர்கல்வியில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறதே!

தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனை எவ்வளவு யதார்த்தமானது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

உலகம் ஏற்கும் தொலைநோக்குச் சிந்தனைகள்:

தந்தை பெரியார் வழங்கிய பெண்ணியச் சிந்தனைகள்; மதம், கடவுள்சார் சிந்தனைகள்; மொழிகள் சார்ந்த சிந்தனைகள்; அரசியல் சிந்தனைகள், சமதர்மச் சிந்தனைகள்; கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சிசார் சிந்தனைகள், தொழிலாளர் வளர்ச்சிசார் சிந்தனைகள் என்று எல்லாவற்றையும் எடுத்து நோக்கின், அனைத்தும் இக்கால உலகிற்கும் இனிவரும் உலகிற்கும் வழிகாட்டியாய், தீர்வுகளாய், செயல்திட்ட கருத்துகளாய், போராட்ட முறைகளாய், உரிமை காப்பு கவசங்களாய் அமைந்தவை என்பதை எவரும் அறிந்து வியப்பர்!

தந்தை பெரியார் சொன்ன, “சுயமரியாதை’’ என்ற சூழ்ச்சமச் சொல்லே உலக மக்களின் உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒப்பற்ற போர்க்கருவி; அது உலகம் முழுமைக்கும் என்றென்றும் தேவைப்படும் தொலைநோக்குச் சிந்தனை! என்பதால் அப்படிப்பட்ட உலகுக்குத் தேவையான தொலைநோக்குச் சிந்தனையை வழங்கிய தந்தை பெரியார் தலைசிறந்த தொலைநோக்காளர் என்பதை அய்.நா.மன்றத்தைப்போல அகிலமும் சொல்லும். 

                                                                                            

                       

 

                                                                                                                             
                                                                                                                      – மஞ்சை வசந்தன் 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *