– தூத்துக்குடி பாலு
மசூதி ஒன்றின் மாடத்தின்மேல் புறா ஒன்று தன்னுடைய குஞ்சுப் பறவைகளுடன் வசித்து வந்தது. திடீரென்று ஒருநாள் மசூதியின் மேல்பகுதியை இடித்துப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது.
இந்த மசூதியின் மேல்பகுதி இடிக்கப்படும் விவரமறிந்த அந்தப் புறா தன் குஞ்சுப் புறாக்களுடன் மசூதியைவிட்டு வெளியேறியது. சிறிது தூரம் பறந்து சென்ற அது அங்கு ஒரு கிறிஸ்துவ தேவாலயம் இருப்பதைக் கண்டு அங்கு தனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று கருதி அந்தத் தேவாலயத்தின் கோபுர உச்சியில் தன் குஞ்சுகளுடன் குடியேறியது.
சில நாட்கள் சென்றிருக்கும். அந்தத் தேவாலயத்திலும் வர்ணம் பூசுவதற்கென்று தேவாலயக் கோபுரத்தைச் சுத்தம் செய்யத் துவங்கினர். இதனால் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பில்லை என்று கருதிய அந்தப் புறா மீண்டும் பாதுகாப்பான இடம் தேடி பறந்து சென்றது.
சிறிது தூரம் சென்றதும் உயர்ந்த பழைமையான சிவபெருமான் கோவில் கோபுரம் ஒன்றைக் கண்டது. இந்தக் கோவில் கோபுரம்தான் நமக்கும் நம் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பானது என்று கருதி அந்தக் கோபுரத்தில் குடியேறியது.
கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த போது ஒரு நாள் கீழே திடீரென்று கூச்சலும் சப்தமுமாக இருந்தது. இதைக்கேட்டு குஞ்சுப் புறாக்கள் பயந்தன. அந்தக் குஞ்சுப் புறாக்கள் பயத்தோடு தங்கள் தாய்ப் புறாவைப் பார்த்து, அம்மா கீழே ஒரே கூச்சலாக இருக்கிறதே… என்றன. கீழே எட்டிப் பார்த்த தாய்ப் புறா தனது குஞ்சுப் புறாக்களிடம் சொன்னது :
அது வேறொன்றுமில்லை. இந்தப் பாழாய்ப் போன மனிதர்கள், மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நாம் மசூதியின் மேலிருந்தோம், அதற்குப்பின்பு தேவாலயத்தில் இருந்தோம். இப்போது நாம் கோவிலில் இருக்கிறோம். நாம் எங்கிருந்தாலும் நம்மைப் புறா என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், இந்த மனிதர்கள் மட்டும் கோவிலில் இருந்தால் இந்து என்றும், தேவாலயத்தில் இருந்தால் கிறிஸ்துவர் என்றும், மசூதியிலிருந்தால் முஸ்லிம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் மதங்கள் மற்றும் ஜாதிகளின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
இதனால் இவர்கள் மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு மதம் மற்றும் ஜாதிகளின் பெயரால் சண்டையிட்டுக் கலவரம் செய்வார்கள்; மடிவார்கள். பறவைக் காய்ச்சல் நோய் வந்துவிட்டது என்று சொல்லி கண்ணில் பார்த்த பறவைகளையெல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினார்கள். ஆனால், இவர்களிடம் மதம் மற்றும் ஜாதிகளுக்கான கலவரம் எனும் மனிதக் காய்ச்சலுக்கான வைரஸ்கள் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ்கள் பறவைகளான நம்மைத் தாக்கினால் நம்மினமே அழிந்து விடும்.
இந்த மத, ஜாதிக் கலவர மனிதக் காய்ச்சல் நமக்கு வந்துவிடக் கூடாது. அதனால் நாம் வேறிடம் பறந்து செல்வோம் என்று கூறியபடி அந்தப் புறா தன் குஞ்சுகளுடன் அங்கிருந்து மற்றொரு பாதுகாப்பான இடம் தேடிப் பறந்து சென்றது.
– முத்துக்கமலம் இணைய இதழில் இருந்து….