இந்தியாவில் நம்பப்படும் மூடப் பழக்கத்தைக் களைந்து ஆராய்ச்சிப் பூர்வமாக கற்பித்தலின் முன்மாதிரியாக இதனைத் தெரிவிக்கின்றேன்.
தமிழின் செம்மொழித் தகுதியை மேலும் மெருகூட்ட என்னுடைய ஆய்வுகள் ஊன்றுகோலாக அமையுமென்று கருதுகிறேன்.
மரா மரா மரா மரா மரா மரா என்று கூறும்போது இராமன் பெயர் வெளிப்படுகிறது. இதன் வழியிலே சென்று பார்த்தால் இராம காவியத்திற்கு அடிப்படையான மூலக்கருத்தும் மரம்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
கதாநாயகனான இராமன், கதாநாயகனின் பிரிய சகோதரன் இலக்குமணன்.
இராமனுக்கு அடுத்து வரும் பெயர் உச்சரிப்பிலே உள்ள சொல் இலக்குமணன். இலகு என்றால் மெதுவான, கடினமற்ற என்று பொருள். மணன் என்றால், தமிழ்மொழியிலே முற்காலத்தில் உச்சரிக்கப்பட்டதில் இருந்து பிரிந்து சென்றுள்ள தெலுங்கு மொழியில் மெதுவான மரம் என்று காணலாம்.
இராமன் மரம், இலக்குமணன் இலகுவான மரம். மேற்கண்ட சொற்களை உறுதிசெய்யும் விதத்தில், இராமனுக்கு உண்டான மரம் வேப்ப மரமாகவும். இலக்குமணனுக்குத் தேவையாக உள்ள பொருள் வேப்ப மரத்தில் தொத்திக் கொண்டு வாழும் மதணி என்னும் தாவரமாக உள்ளது.
கதையில் புனைக்கப்பட்ட கருத்துகளில் பல உள்ளன.
அதன்படி பார்த்தால் இராமன், இலக்குமணனின் மற்றொரு சகோதரன் பரதன். இவன்தான் நாட்டை ஆள்பவனாகக் கூறப்பட்டது. அதுவும் இவன் தன்னுடைய மூத்த சகோதரன் விட்டுக்கொடுத்த அரியணையிலே இராமனுடைய காலணியை வைத்துவிட்டு அதன் அருகே மட்டும் அமர்ந்து ஆட்சி செய்தானாம்.
அதன்படி பார்த்தால் முன்னே பிறக்கும் வேப்ப மரத்தைவிட பின்னே பிறக்கும் அரச மரம் பல மடங்கு பெருத்து, படர்ந்து கிராமப் பஞ்சாயத்துக் கூட்டம் நடக்கும் மேடையைக் குளிரவைத்து மக்களை வழிநடத்தும். ஊர்த் தலைவர்கள் அதன் அருகே பஞ்சாயத்துப் பேசி பன்னெடுங்காலமாக மக்கள் நீதிமன்றமாக வீற்றிருக்கும் மரத்திற்கு முன்னோர்கள் வைத்திருக்கும் பெயர்தான் அரச மரம். இந்த வாக்கியம் ஒன்று போதும். இராமாயணக் கதை உருவாகக் காரணங்கள் மரங்கள்தானென்று.
எல்லாம் சரி, சீதைக்கு எந்த மரம் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கலாம். நடமாடும் உயிரினங்கள் முதல் நகர இயலாத உயிர்கள்கூட சிலவற்றிற்கு ஆண், பெண் என்னும் உருக்கள் தனித்தனியாக உள்ளதை அறியலாம்.
ஆனால், வேப்ப மரத்தைப் பொருத்தமட்டில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே வாழ்கின்றன. இதில் சீதையின் கற்புக்கு என்ன பொருளென்றால், வேம்பு மரத்தின் பெண் பூவில் வேறு மரத்தின் ஆண் மகரந்தம் சேரக்கூடிய வாய்ப்பை காற்றும், தேனியும், பிற பூச்சிகளும் முயற்சித்தாலும் வேம்புவின் கசப்புத் தன்மையால் தன்னைச் சீண்டிய வேற்று மர ஆண் மகரந்தம் செயலிழந்து விடுவதால்தான் சீதை கற்பு மிக்கவளாகிறாள்.
அனுமன்
சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு பறந்துவரும் வாயுபுத்திரன்கூட மரமோ என்று கேட்கலாம். என் பெயர்கூட அனுமன்தான். என்னால் எந்த மலையையும் தூக்கமுடியவில்லை. காரணம், கற்பனையில் பல சாதனைகள் என் மீது சுமத்தலாம் அவ்வளவுதான்.
திவ்ய தரிசனம்
இராமாயணத்தில் வரும் உரையாடல்களில் இராமன் சீதை எங்கே உள்ளார்களென்று தேவ ரிசியான நாரதர் கேட்பார். அப்போது திவ்ய தரிசனம் அனுமன் மட்டும்தான் காணமுடியுமென்றால், குருவாகவும் போற்றத் தகுந்தவராகவும் இருக்கும் இராமன் திவ்ய தரிசனம் காணமுடிவதில்லை.
அனுமன் என்பது தற்போதுள்ள குரங்குதான். இதிலே எவ்வித மாற்றமும் கிடையாது. ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு அனாமத்தாக எம்பிக் குதித்து அடுத்த மரத்தைப் பிடித்துக் கொள்வதால் அனுமத்தா என்றாகியுள்ளது. கொர் கொரென்று கத்துவதால் குரங்காகியுள்ளது.
மனிதர்கள் வாழவே பயப்படும் கிடுகிடு பள்ளத்தாக்கிலும், அடர்ந்த கரியமில வாயுவைக் கக்கும் பசுமை படர்ந்த வனத்திலும், மனிதனால் கட்டுப்படுத்த முடியாத காட்டு மிருகங்களுக்கு இடையிலேயும் அஞ்சாமல் வாழும் குரங்குகள்தான் அஞ்சாநேயா என்றும் பெயர் பெற்றிருக்கின்றன.
மனிதர்கள் கோடைக் காலத்தில் நடந்தால் வெப்பத்தில் சோர்ந்து விழும் சமயத்தில், ஒரு தென்னை மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிச் செல்லும்போது இளநீர் கீழே விழும். அதை, களைத்துப் போன வழிப்போக்கருக்குக் கொடுத்து உதவியிருக்கலாம். இதனால்தான் இதற்கு சஞ்சீவி மூலிகை என்றும், இறக்கையோ இயந்திரமோ இல்லாமல் காற்றிலே தாவிக்குதிப்பதாலும்தான் அனுமனாக கருதி இராமாயணத்தில் புனைந்திருக்கலாம்.
அடடே, இதென்ன இந்துக்கள் தன் பக்திக்கு மூலாதாரமான இராமனையே பொய் என்று கூறுகின்றான். அப்படியானால், இராமனுடைய எதிரி பத்துத்தலை இராவணன்கூட மரம்தானா என்றும் சந்தேகிக்கலாம்.
பத்துத்தலை இராவணன்
இராமனை எதிர்க்கும் இராவணன் இராமனைவிட பலசாலி என்றும் கூறப்படுகிறது. இருந்தும் ஒரு பெண்ணான அதுவும் பத்தினி தெய்வமான சீதா தேவியைச் சிறைப்பிடித்ததாலே இராவணன் மாண்டுவிடுகிறான் என்பார்கள்.
மனிதனாகப் பிறந்த ஒருவன் மது மயக்கத்தில்தான் இராவணனைப் போல் ஒரு காரியம் செய்யக்கூடிய தன்மை அதிகம். அப்படியானால் போதை தரக்கூடிய மதுவை இராவணன் இராம காவியத்திலே எங்கும் சுட்டிக் காட்டவில்லை என்றும் கூறலாம்.
தற்போதும் சரி, முற்காலத்திலும் சரி, மது அருந்துபவன்தான் மாற்றான் மனைவியைக்கூட பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றான் என்பதை இராமாயணத்தின் மூலமாகத் தெரிவிப்பதை, நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருப்பதை நான் உணர்ந்ததால்தான் இந்தக் கட்டுரையை எழுத முடிந்தது.
போதையை ஊட்டும் சாராயத்தைத் தயாரிக்கும் சாராய வேளாண் மரத்தில்தான் பட்டையை வெட்டி உரித்து அதன் சாரம் தண்ணீர் கலந்து சாராய ஊறலான பிறகு சாராயத்தைக் காய்ச்சுவார்கள்.
மது தயாரிக்கக்கூடிய சாராய வேளாண் மரப் பட்டையில் இரண்டு அடுக்குகள் அமைந்துள்ளன. மேல்பட்டை, உள்பட்டை என்று உள்ளதில் மேல் பட்டையை மட்டும் சரியாக வெட்டி உள்ளிருக்கும் ஜவ்வு போலவும் நாறு போன்ற பட்டையை அப்படியே விட்டால் மீண்டும் மீண்டும் மது தயாரிக்கும் சாராயத்தைக் கொடுக்கின்றன.
இராவணன் என்னும் கருப்பொருள் சாராய வேளாண் மரமேதான். மற்றபடி பத்துத்தலை இராவணன் எந்த லோகத்திலும் பிறப்பதில், உண்மை ஏதும் கிடையாது. பத்துமுறை பட்டையை எடுத்தாலும் பட்டுப் போவதில்லை சாராய வேளாண் மரம்.
கும்பகர்ணன்
கும்பகர்ணன் பிறப்பால் இராவணனை ஒத்து இருந்தாலும், ஆறு மாதம் உறக்கம் ஆறுமாதம் விழிப்பு. இப்படியும் மரம் உள்ளதா என்று கேட்கலாம்.
தமிழ்மொழியிலேதான் இராமாயணம் முதலில் எழுதியிருக்கலாம். அதனை வால்மீகி திருடி வேறு மொழியிலே எழுதியதால்தானோ என்னவோ வால்மீகி ஓர் வழிப்பறித் திருடனென்று கூறப்பட்டிருக்கலாமென்று கருதுகிறேன்.
ஆறு மாதங்கள் மட்டுமே தனது சாற்றைக் கொடுக்கும் பனைமரமானது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ளது. இலங்கேஸ்வரன் என்று சொல்வதற்குக் காரணம்கூட, தமிழனென்றால் பிற்காலத்தில் ஏதேனும் உள்நாட்டுப் போர் மூளுமோ என்று கருதியேகூட இராவணனை இலங்கேஸ்வரனென்று குறிப்பிட்டு கதையைப் புனைந்திருக்கலாம்.
பனை மரத்தின் மதுவைப்பெற அதன் பூங்கொத்தைக்கூட தாரை தப்பட்டையை அடிப்பதுபோல் அடித்துத்தான் வரவழைக்கப்படுகிறது கள். கும்பகர்ணனின் வசனங்கள்கூட கள் பதநீரைப் போல்தான் அமைந்திருக்கின்றன.
விபீடணன் வெப்பு விரட்டின மரம்
பிறப்பால் இராவணனைப் போலும், கும்பகர்ணனைப் போலும் தன்னுடைய சாற்று வெளிப்பட்டாலும் பட்டைச் சாராயம் பனங்கள்ளில் உள்ளதுபோல் போதை மயக்கம் உருவாகாமல் மனிதர்களின் உடல் வெப்பத்தை விரட்டும் தன்மை கொண்டிருப்பதாலும் விபீடணன் இராமனுடன் சேர்ந்திடுவதுபோல் காவியத்தில் புனைந்துள்ளார்கள்.
மேற்படி இராமாயணத்தில் வரும் உச்சரிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் மரா மரா மரா மரத்தின் இயல்புதான் மராயினம். மரங்களின் இனமாகியுள்ளது. இது தமிழ் மொழியிலே முதலில் உருப்பெற்று ஓலைச் சுவடியைக் கொண்டு வேற்றுமொழியில் வந்திருக்கலாம்.
இராமாயண காவியத்தில் உருப்பொருள் கண்டுபிடித்தது போல் மேலும் ஏராளமான மூடநம்பிக்கையைக் கொடுக்கும் ஏமாற்று வித்தைகள் பற்றிய விளக்கங்களையும் கண்டறிந்துள்ளேன்.
பரமாத்மா என்றழைக்கப்படும் மனித குலம் செழிக்க மிகவும் உதவக்கூடிய அய்ம்பூதங்களான பூமி, வானம், காற்று, சூரியன், தண்ணீரை முதற் பொருளாக வைத்து வணங்கினால் போதும்.
ஆரோக்கியமான உடலைக் காக்க கும்பியிடும் உணவை உடல் உழைப்புக்கு ஏற்றபடி குரல் வளைக்குள் கடக்கச் செய்தால் மூடர்கள் கூறும் கடவுளாக மாறும். தேவையற்ற உணவைக் கும்பியிட்டால் உணவேகூட பேயாகிறது. யோகாவை மட்டும் செய்தால் ஒரு வேளை உணவு யோகாவுடன். மனையுடன் உடல் உழைப்பு இரண்டு வேளை உணவு. மனைவி, குடும்பம், எதிர்காலத்திற்கு உழைத்திட மூன்று வேளை உணவுடன் யோகாவே சிறந்தது.
– அனுமுத்தன்