கேள்வி : கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அங்குள்ள கைதியிடம் தன் வீட்டில் பூஜை, பரிகாரம் செய்யக் கேட்டிருக்கிறாரே! குற்றவாளிகளைத் திருத்த வேண்டியவர்களே இப்படி இருக்கிறார்களே?
-இயற்கை தாசன், கொட்டாகுளம்
பதில் : இதுபற்றி சிறைத் துறை டி.ஜி.பி. அய்.ஜி, அமைச்சர் ஆகியவர்களுக்கு அவசியம் எழுதுங்கள்; என்ன நடவடிக்கை தொடருகிறது என்று பார்க்கலாம்! மகா வெட்கக்கேடு!
கேள்வி : புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை, தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய அய்யா பெரியார் அவர்களை அம்பேத்கர் திரைக் காவியத்தில் காண முடியவில்லையே ஏன்? – வெங்கட. இராசா, ம. பொடையூர்
பதில் : திரைப்படம் எடுத்தவர்கள் வெட்கப்பட வேண்டிய செய்தி இது!
கேள்வி : தமிழ் ஆதீனங்களைப் பார்ப்பனர் என்றுமே மதித்ததில்லை. ஆனால், தமிழக ஆதீனகர்த்தாக்களில் சிலர் பார்ப்பனரின் ஊதுகுழலாகச் செயல்படுவது எதனைக் காட்டுகிறது? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : அடிமைப் புத்தி சில சூத்திரர்களை விட்டு நீங்குவதில்லையே _ என்ன செய்ய?
கேள்வி : இதுவரை நடைபெற்ற விசாரணைக் கமிஷன்களில் அரசியல் தலைவர்களோ, அமைச்சர்களோ… எவரேனும் தண்டிக்கப்-பட்டதுண்டா? உண்டு என்றால், அவர்கள் யார் யார்? ஒன்றும் இல்லை என்றால்…. அப்படியொரு கமிஷன் தேவைதானா? – தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : தேவையல்ல. மக்கள் வரிப் பணமாவது மிச்சமாகும்.
கேள்வி : தினமணி ஏடு தி.மு.க. ஆட்சியை அகற்றி அ.தி.மு.க ஆட்சியமைக்க வரிந்து கட்டிக் கொண்டு முயற்சிப்பது போல் தெரிகிறதே….
– பாவலர் அறிவரசன், திருலோக்கி
பதில் : சோ வின் சீடர் பூணூலால் கட்டி இ-ழுக்க முயலுகிறார். பூணூல், அறுபடுமேதவிர, ஆட்சி அவாளுக்கு ஒரு போதும் போகாது! 1971 இல் நடந்ததே 2011 இல் தொடரும்!
கேள்வி : யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருக்கும் புதிய இந்தியத் துணைத் தூதரகத்தில் ஒரே ஆரியப் பார்ப்பனக் கூட்டமாக இருக்கிறது. துணைத்தூதரும் ஆரியன் (பார்ப்பனன்) தானோ? ஆரியப் பார்ப்பனக் கூட்டம், ஈழத் தமிழருக்கு எதிராகத்தானே செயல்படும்? – மு. பழநி, திருவான்மியூர்
பதில் : ஓநாய்களைச் சைவமாக்க முடியுமா? ஒரு போதும் முடியாதே. இனம் இனத்தோடு சேருகிறது போலும்!
கேள்வி : சீனாவின் நீதித்துறைச் செயல்-பாடுகளைப்பற்றி, நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான குழு அளித்துள்ள செய்திகள் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றனவே! நம் நாட்டிலும் நீதித்துறை அதுபோல் செயல்பட வாய்ப்பு உள்ளதா? – கோ. பிரியா, திருவள்ளூர்
பதில் : ஜனநாயகம் என்ற நிலைமையால் அதற்குத் தடை உள்ளது; சீனாபோல் துணிந்து சீர்திருத்தத்தில் ஆளுவோர் இறங்கினால் பலன் கிட்டும்!
கேள்வி : மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்-தேர்வினை மீண்டும் மத்திய அரசு நுழைத்துவிடுமா? – க. அபிநயா, சேலம்
பதில் : நுழைத்துவிட அனுமதியோம்; தமிழக கலைஞர் ஆட்சியும் அதனை அனுமதிக்காது! உறுதி!
கேள்வி : ஆந்திர அரசியலில் ஆளாளுக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்களே…….
-பரிமளா தேவி, சிவகாசி
பதில் : என்ன செய்வது! அங்கே உண்ணாவிரத அரசியல் மிகவும் மலிவில் கிடைக்கிறதுபோலும்! இந்தக் கேலிக்கூத்து ஒரு நாடகம்போல நடக்கிறது!
கேள்வி : கணக்குத் தணிக்கை அறிக்கையில் யூகத்தின் அடிப்படையில்தான் இழப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதை மறைத்து ஊழல் என்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதை எதிர்த்து வழக்குத் தொடர முடியுமா? – இ.ஜீவா, கோடம்பாக்கம்
பதில் : நீதிமன்றங்கள் பல நேரங்களில் நுனிப்புல் மேய்கின்றன; அதனால் வழக்கு எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பது சந்தேகமே!