பாரெங்கும் பரவும் பகுத்தறிவு பாகிஸ்தானை விடுமா?
எந்த மதமும் தனது மதத்தில் இருந்து கடவுள் மறுப்பு, நாத்திகம், பகுத்தறிவு என்று யார் பேசினாலும் அவர்களை விட்டுவைப்பதில்லை. அறிவு குறித்துப் பேசினாலும், கேள்விகள் கேட்டாலும் அவனைச் சாத்தான் என்று ஓரங்கட்டு–வதற்குத் தக்கவாறு அதனதன் மத நூல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் நாத்திகமும் எங்களுக்குள் ஒரு பிரிவுதான் என்று இந்து மதத்தைப் போல செரிக்கவும் பார்ப்பார்கள். அதாவது, நாத்திகர் பார்ப்பனராக இருந்தால் அவரும் தேவ குலத்தில் இருப்பார்.
அதுவே சூத்திரனாக இருந்தால் அரக்கனாக சித்திரிக்கப்படுவார். இப்படி, ஓரிருவர் பேசினாலே அரண்டு போகும் மதவாதிகள், ஒட்டு மொத்தமாய் ஓர் இளைஞர் குழுவே நாத்திகர்களானால் என்ன செய்வார்கள்?
உலகெங்கும் அறிவியலாலும், கேள்வி கேட்கும் அறிவாலும் இன்று பெருகிவரும் நாத்திகம் இஸ்லாம் மதத்தை மட்டும் விட்டுவைக்குமா? அதீதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட இம்மதத்திலிருந்து வெடித்துக் கிளம்பியிருக்கின்றன புரட்சிக் குரல்கள். அரபு நாடுகளின் வெப்பநிலைக்கேற்ப உடை உடுத்தினர் அரபு முஸ்லிம்கள் என்றால், உலகம் முழுக்க அப்படித்தான் உடுத்துவோம் என்று இன்றைக்கும் அடம்பிடிக்கும் அளவுக்கு நீள்கிறது இவர்களின் கட்டுப்பாடுகள். அதிலும், இஸ்லாமிய நாடாகவே இருப்பவற்றில் நிலைமை இன்னும் கொடுமை. தாலிபான் ஆட்சிக்கால ஆப்கானிஸ்தானமும், மத அடிப்படைவாதிகள் நிறைந்திருக்கும் எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
இப்போது பகுத்தறிவுச் சிந்தனை பரவத் தொடங்கியிருக்கிறது பாகிஸ்தானில்! மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாகிஸ்தான் இஸ்லாமிய இளைஞர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். “நாங்கள் இஸ்லாமைத் துறந்து நாத்திகர்களா வோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் குறைவாக இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படை-வாதிகளின் கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் அவர்களின் சிந்தனை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
ஹஸ்ரத் நாகுதா என்ற முன்னாள் பாகிஸ்தான் முஸ்ஸிம் இதைத் தொடங்கியிருக் கிறார். “ஏன் நாத்திகராக ஆனீர்கள்?’ என்ற கேள்விக்கு ஹஸ்ரத்தின் பதில்:
“நான் சவுதியில் இருந்தேன். இரண்டு முறை ஹஜ் பயணம் மேற்கொண்டவன் நான். நாளொன்றுக்கு அய்ந்து முறை தொழுகை நடத்தியவன் நான். எனக்குப் பதினெட்டு வயதானபோது “நான் முஸ்லிமாக இருப்பதற்குக் காரணம் என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததன்றி வேறு காரணம் இல்லை என்பதை உணர்ந்தேன்” ஹஸ்ரத் லாகூரைச் சேர்ந்த கணினி மென்பொறியாளர். பன்னாட்டுப் பல்கலைக்-கழகங்களிலும், பாகிஸ்தானில் புகழ்பெற்ற லாகூர் பல்கலைக்கழகத்திலும் பயிலும் எண்ணற்ற மாணவர்கள் இவர்களோடு இணைந்திருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறார் என்பதை நான் உணர எந்தவிதமான சான்றுகளும் கிடைக்கவில்லை. சான்று கிடைக்காத ஒன்றை நம்ப என் மனம் இடம் தரவில்லை என்கிறார் இன்னொருவர். முன்பு இஸ்லாமிய அறிஞர் என்று ஸாகிர் நாயக்-கையும், முட்டாள் என்று ருஷ்டியையும் நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிந்திக்கச் சிந்திக்க என் எண்ணம் தலைகீழாக மாறிவிட்டது என்கிறார் அவர். மேலும், நான் எப்படி நாத்திகன் ஆனேன்? என்று எல்லோரும் கேட்பார்கள்; அவர்களிடம் நான் திருப்பிக் கேட்பது, பிறக்கும்போது எல்லோரும் கடவுள் நம்பிக்கையற்றவர்களே.. நீங்கள் எப்படி கடவுள் நம்பிக்கையாளர் ஆனீர்கள்? என்று தான் என்று திருப்பியடிக்கிறார். படிவங்களில் நான் என்னை இஸ்லாமியன் என்று குறிப்பிட விரும்பவில்லை. கடந்த முறை எனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்கச் சென்றபோது, அதில் மத நம்பிக்கையற்றவர் என்ற பிரிவு இல்லை. இனி அப்படி இருக்கப்-போவதில்லை. அடுத்த முறை நான் என்னை இஸ்லாமியன் என்று குறிப்பிட மாட்டேன்.. நாத்திகர் என்று-தான் பதிவு செய்வேன் என்கிறார். இந்தத் தருணத்தில், மக்கள் தொகைக் கணக்-கெடுப்பில் உங்களை நாத்திகர் என்று பதிவு செய்யுங்கள் என்று தந்தை பெரியார் விடுத்த அழைப்பும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அழைப்பும் நம் நினைவுக்கு வருகிறது. உலகெங்கும் பகுத்தறிவாளர்களின் சிந்தனை ஒன்றாகவே இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் உண்டா?
– இளைய மகன்