ஒரு அப்பாவிப் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்திடும் இரக்கமில்லா ஒரு மனித மிருகத்திற்கு நீதிமன்றம் கருணை காட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும்.
அது எப்படி ஒரு பெண்ணின் வாழ்வை அழித்த மிருகத்திற்கு மன்னிப்பு கேட்கமுடியும் என்று நீங்கள் கோபப்படுவது எனக்குப் புரிகிறது. ஆனால் உண்மையில் இதுபோன்ற ஒரு வழக்கு டெல்லி அமர்வு உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் எஸ்.பி.கார்க் அவர்கள் முன்னிலையில் வந்தது. குற்றவாளி குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை நெறித்துக் கொல்லவும் முயற்சி செய்து இருக்கிறான். காவல்துறையால் கைது செய்யப்பட்டு டிரையல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். தான்செய்த குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டான். நீதிமன்றம் அவனுக்கு கடுங்காவல் தண்டனை விதித்தது.
சில காலத்திற்குப் பிறகு அவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன் சிறைத் தண்டனையை குறைத்திட மனு செய்திட்டான். அதற்கு அவன் கூறிய காரணங்கள் குறிப்பிட்ட காலம் ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து விட்டேன். எனக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு தகுந்த வரன் பார்த்து திருமணம் செய்திட வேண்டும் என்பதுதான். ஆனால் உயர்நீதிமன்றம் அவன் கூறிய காரணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மன்னிக்க முடியாத பலாத்காரம் செய்து குற்றத்தைப் புரிந்த ஒரு மனித மிருகத்திற்கு டிரையல் நீதிமன்றம் சரியான தண்டணையைத்தான் வழங்கி இருக்கிறது. எனவே மறு ஆய்வு செய்து சிறைத் தண்டணையைக் குறைத்திட முடியாது என உறுதிபட தீர்ப்பளித்தது.
மேலும் எல்லா நீதிமன்றங்களும் குற்றங்களின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிக்குச் சரியான, முறையான, கடுமையான தண்டனை அளித்திட வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு நீதித் துறையின் மீது மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் ஏற்படும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
(டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு, நாள்: 06.06.2017)