அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

ஆகஸ்ட் 01-15

“இந்துச் சட்டங்களின் பிதா எனக் கருதப்படும் மனுவின் பெயரால் பிரகடனப் படுத்தப்பட்டிருப்பவையும் மனுஸ்மிருதியில் அடங்கியிருப்பவையும் இந்துக்களின் சட்டத் தொகுப்பாக அமைந்துள்ள இந்துச் சட்டங்கள் கீழ்ஜாதியினரை அவமதிப்பதாக இருக்கின்றன. மனித உரிமைகளை மறுப்பதாக இருக்கின்றன. இதன்பால் தனக்குள்ள ஆழமான, அளவிட முடியாத வெறுப்பை வெளிப்படுத்தும் பொருட்டும் மதம் என்ற போர்வையில் சமூக ஏற்றத்தாழ்வை பொதித்து வருவதைக் கண்டித்தும் மனுநூலை எரிப்பது என இம்மாநாடு தீர்மானிக்கிறது’’ எனத் தீர்மானம் நிறைவேற்றி மனுநூலை எரித்தார். எரிக்கச் செய்தார்!
அவர் எப்படி இந்துத்துவ அம்பேத்கர்?

“இந்துக்களுக்கு அழுக்குப்படியாத, சுத்தமான, சமுதாய மதிப்புடைய பணிகளை வழங்கும் இந்து மதம், தீண்டப்படாதவர்கட்கு அருவருப்பான, இழிவான வேலைகளை ஒதுக்குகிறது. இந்துக்களுக்கு கண்ணியமும் கவுரவமும் தருகிறது. தீண்டத்தகாதோர்க்கு இழிவைச் சுமத்தி அவமதிக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கிறது. இந்துக்களின் பாசி படர்ந்த பத்தாம் பசலித்தனமான அமைப்புக்கு எதிரான கிளர்ச்சி பம்பாயில் துவங்குகிறது’’ என்றார் அம்பேத்கர்! அவர் எப்படி இந்துத்வர்?

இந்தக் கருத்துகள் இந்துக்களை கவலை கொள்ளச் செய்தன. தம்முடன் சமத்துவம் கோரும் முயற்சியாக இதனை இந்துக்கள் கருதினர்.

1935இல் இன்றைய குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம் தோல்கா வட்டம் கவிதா கிராமத்தில் தீண்டாதார் ஒருவர் தன் நான்கு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். மறுநாள் இந்துக்களின் பிள்ளைகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. எதிர்ப்பைக் காட்டிடப் பள்ளிப் பகிஷ்காரம். இந்த விசயத்தில் காந்தியாரும் வல்லபாய் பட்டேலும் நடந்துகொண்ட முறை விந்தையானது. பகிஷ்காரத்திற்கு மாற்றாக தீண்டாதோர் அனைவரும் கிராமத்தைவிட்டு வெளியே போய்விட வேண்டும் என்றார். எப்படி இருக்கிறது மகாத்மாவின் யோசனை! அவரின் அருமந்த சீடர் வல்லபாய் படேல் செய்தது துரோகம்! இந்துக்கள் மீது வழக்குத் தொடர்ந்த தீண்டாதாரை வஞ்சகமாக இச்சகம் பேசி வழக்கைத் திரும்பப் பெறச் செய்துவிட்டார்! குஜராத்தின் இருபெரும் மனிதர்கள் தீண்டாதோருக்குச் செய்த துரோகம்! ஒருவர் தேசப்பிதா! இன்னொருவர் இரும்பு மனிதர்! நல்ல யோக்யதை!

இருபெரும் இந்து மகா புருஷர்களைத் தோலுரித்த அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

1930இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்து கள்ளர் ஜாதியினர் தீண்டா-தோர்க்கு எட்டுத் தடைகளை விதித்தனர். அவை சரிவரக் கடைப்பிடிக்கப் படாமையால் 1931 ஜூன் மாதத்தில் மேலும் 11 தடைகள் விதித்தனர். மத்திய இந்தியாவில் உள்ள தீண்டாதாரான பலாய்கள் 1927இல் தங்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஓர் இயக்கம் தொடங்கினர். அதுவே பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. அவர்கள் மீது கடும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர் ஜாதி இந்துக்கள்.
மனுநூல் கூறும் தர்மம் வெறும் கடந்தகால விசயம் அல்ல. இன்றுதான் இயற்றப்பட்டது போலவே காட்சியளிக்கிறது. எதிர்காலத்திலும் தன் செல்வாக்கை நிலைநாட்ட அது முயல்கிறது. ஆகவேதான் அம்பேத்கர் அதனைக் கொளுத்தினார். அதன்மூலம் இந்து தர்மத்தை எரித்தார். இந்து மதத்தை எரித்தார். இப்படிப்பட்டவரா இந்துத்வா அம்பேத்கர்?

“இந்துமதக் கோட்பாடுகளில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய எதுவும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துமதக் கோட்பாடுகளிலிருந்து வெளியேறிச் செல்ல விரும்புவதற்கு இது ஒன்று மட்டுமே காரணம் அல்ல. தீண்டாமை என்பது இந்துமதக் கோட்பாடுகளின் ஒரு பகுதியாகும். தான் தாழ்த்தப்பட்டவன் என்பதையும் கடவுளின் முடிவுப்படி தாழ்த்தப்பட்டவனாக இருப்பதையும் ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாகிறது. ஏனெனில் இந்து மதக்கோட்பாடுகள் கடவுளால் உருவாக்கப்-பட்டவை என்கிறார்கள். இந்து மதத்தில் இருந்துகொண்டு தாழ்த்தப்பட்டவரின் ஆன்மா செத்துப் போயிருக்கிறது. இந்துமதக் கோட்பாடுகள் தாழ்த்தப்பட்டோரின் கவுர வத்திற்கும் சுயமரியாதைக்கும் முரணானவை. அவர்கள் மற்றொரு கண்ணியமான மதத்திற்கு மாறிக் கொள்வதை நியாயப்படுத்திடும் வலுவான ஆதாரம் இது’’ என்று எழுதிய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா? இந்துமதத்தில் ஜாதிகள் ஒன்றன் மீது ஒன்றாக செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ள அமைப்பு. அவை தரப்படுத்தப்பட்டும் படிமப்படுத்தப்பட்டும் அமைந்துள்ளன. இதற்கு மனு பொறுப்பானவர். மனு அடிமைத் தனத்தையும் அங்கீகரித்துள்ளார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத்துள்ளார். மூன்று உயர் ஜாதியினர்களாலும் சூத்திரர்கள் அடிமைப் படுத்தப்படலாம்! ஆனால், உயர்ஜாதியினர் சூத்திரர்களுக்கு அடிமையாக முடியாது. பார்ப்பனர் நான்கு வர்ணங்களில் எந்த வகுப்பினரையும் அடிமையாக்கிக் கொள்ளலாம். அதுபோலவே சூத்திரர் ஆதிசூத்திரரை (தாழ்த்தப்பட்டவரை) அடிமையாகக் கொள்ளலாமாம். ஆனால், ஆதி சூத்திரர் எந்த ஜாதியாரையும் அடிமையாகக் கொள்ள முடியாதாம். இந்து மதத்தின் படிநிலை ஏற்றத்தாழ்வுகளைத் தோலுரித்தவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

வழக்குகளை விசாரிக்கும்போது நீதிபதி பார்ப்பனரிடம், “கூறுக’’ என்றும், சத்திரியனிடத்தில் “உண்மையைக் கூறுக’’ என்றும், வைசியனிடம், “அவனுடைய பொன், தானியம், பசு ஆகியவற்றின் மீது ஆணையிட்டுக் கூறுக’’ என்றும், சூத்திரனாயின், “தலைமீது ஆணையிட்டு பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி அச்சுறுத்திப் (பின்) கூறுக’’ என்றும், பிரமாணம் செய்ய என்றும் கூறவேண்டும் என்கிறார் மனு. பார்ப்பனர் தொடுத்த வழக்கை முதலிலும், சத்திரிய, வைசிய, சூத்திரர் வழக்கை அடுத்தடுத்து வரிசை முறையிலும் விசாரிக்க வேண்டுமாம். இங்கும் வர்ணப் பாகுபாடுதான்! பெண்ணுடன் உறவு கொள்ளவும், திருமணம் செய்துகொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தும்போதும் பொய் சாட்சி சொல்லலாம் என்கிறது மனுநூல். “ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் செய்’’ என்ற சொல்லடை இதனால்தான் வழங்குகிறது! சூத்திரன், மேல் மூன்று ஜாதியாரைத் திட்டினால் நாக்கை அறுக்க வேண்டுமாம். அவன் பெயரையும் ஜாதியையும் திட்டினால் பழுக்கக் காய்ச்சிய இரும்பை சூத்திரன் வாயில் நுழைக்க வேண்டுமாம். பார்ப்பனர் எத்தகைய பாவத்தைச் செய்தபோதும் அவனைத் தண்டிக்காமல் ஊரை விட்டுத் துரத்த வேண்டுமாம். பார்ப்பனன் ஒரு சத்திரியனைக் கொலை செய்துவிட்டால் சடங்குகளைச் செய்து புரோகிதனுக்கு ஓர் எருமையும் ஆயிரம் பசுக்களையும் தானம் செய்ய வேண்டுமாம். கொலைகாரனாகப் பார்ப்பனர் இருந்தாலும் பார்ப்பனர் தானம் பெற்று வாழ வேண்டுமாம். ஒரேவிதமான குற்றத்திற்கு ஜாதிக்கேற்றவாறு தண்டனை மாறுபடுவதுதான் மனுநூலின் சமத்துவமின்மைக்கான எடுத்துக்காட்டு. (தொகுப்பு: பாகம் 6 _ பக்கங்கள் 93 முதல் 99 வரை)

சூத்திரன் செல்வம் சேர்க்கக் கூடாது. கடவுள் கூறும் கடமை சூத்திரன் பிற மூன்று உயர்ஜாதியார்க்குத் தொண்டூழியம் செய்வது மட்டுமே! இதனால்தான் பார்ப்பன பாரதியே பாடினான், “சூத்திரர்க்கொரு நீதி/தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதி/என்று சாத்திரம் சொல்லிடுமாயின் அது/சாத்திரமன்று, சதியென்று கண்டோம்’’ என்று! மனுசாத்திரம்தான் இந்துமதத்தின் உயர்ந்த சாஸ்திரமாம்!

“நீதியின் கோணத்தில் இந்துமதத் தத்துவத்தைக் கொஞ்சம் பகுத்து ஆராய்ந்தால் அது சுதந்தரத்திற்கும் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிராக இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது’’ என எழுதிய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்?

“ஜாதி, ஒருவரோடொருவர் பழகுவதைத் தடுக்கிறது. ஜாதி, தொழிலை மட்டும் பிரிக்கவில்லை; தொழிலாளரையும் பிரித்து வைக்கிறது. ஜாதிமுறை ஒன்றன்மேல் ஒன்றாய், அடுக்கு அடுக்காக, உயர்வு தாழ்வுகளை வகுத்திடும் முறையாகத் தொழிலாளர்களையும் பாகுபடுத்துகிறது. மனிதனைச் சக்தியற்றவனாக ஜாதி ஆக்குகிறது. மனிதனை மலடாக்குகிறது. கல்வியும் செல்வமும் சூத்திர ஜாதியினர்க்கு மறுக்கப்பட்டு மனித இன வளர்ச்சிக்கு இலாயக்கற்றவனாக ஆக்குகிறது. சமூக உரிமைகளைப் பொறுத்தமட்டில் இழிவான விதிமுறைகளை மனுநுல் கூறுகிறது. ஜாதி ஒருங்கிணைந்து வாழ அனுமதிக்கவில்லை. ஆக, இந்துமதத்துவம் சமூகப் பயன் நோக்கத்தையும் நிறைவு செய்யவில்லை. தனி மனிதனின் நீதிக்கும் துணை புரியவில்லை.’’ இவ்வா-றெல்லாம் இந்து மதத்தின்மீதும், ஜாதி, சாஸ்திரங்களின் மீதும் குற்றச்சாற்றுகளை அடுக்கடுக்காகச் சுமத்திடுபவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்? சிந்திப்பீர்!

(படிக்க: தொகுப்பு நூல் பாகம் 6, பக்கம் 91 முதல் 95 வரை)

(கேள்விகள் தொடரும்…)

-சு.அறிவுக்கரசு

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *