சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உலகம் ஒப்புக் கொண்டதேயாகும். என்னவென்றால், காரண காரிய தத்துவ உணர்ச்சியையும் உலகம் ஏற்றுக்கொண்டு விட்டது. மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகின்றது; இயற்கையையே ஆராயத் தலைப்பட்டாய் விட்டது. விவரம் தெரியாத வாழ்வை அடிமை வாழ்வு என்று கருதுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமே அதுதான். எந்தக் காரியமானாலும் காரண காரியமறிந்து செய்; சரியா, தப்பா என்பதை அந்தக் காரண காரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு; எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்கிறது. அதுதான் சுயமரியாதை. மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பது தான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை.
இன்றைய சுதந்திரவாதிகள் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். இது உண்மையிலேயே மூடவாதம் என்று சொல்வோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுதந்திரம் பலனளிக்காது என்பதுதான் சரியான வார்த்தையாகும்.
சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி உண்டு. சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் இருக்கத் தக்கதாகவே இருக்கும். சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது. புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்ததாக மாத்திரம் இருக்கும்.
உதாரணமாக, இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வோம். இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகின்றது. ஒன்று தோழர் காந்தியார் பெயர்; மற்றொன்று தோழர் ஜவஹர்லால் பெயர்.
காந்தியார் இந்துமதம் புனருத்தாரணம் ஆவதும், பழைய முறைகள் உயிர்ப்பிக்கப் படுவதும் சுதந்திரம் என்கிறார். ஜவஹர்லால் பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்ததானாலும் அல்லது இரண்டுமே வந்துவிட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ந்து பார்த்தால், சுதந்திரம் சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.
முழு ராஜ்யமுள்ள பிரிட்டிஷ் தேசத்தில் குடிகளுக்கு ஏன்? ராஜாவுக்கே தன் இஷ்டப்படி கல்யாணம் செய்து கொள்ள சுதந்திரம் இல்லாமல் ராஜ்யத்தைத் துறக்க வேண்டியதாகி விட்டது என்றால் அதுவும் ஜனப் பிரதிநிதிகளால் – அதுவும் பொது ஜனங்களுடைய விருப்பம், ஆமோதிப்பு என்பவைகளின் பேரால் என்றால் ஜவஹர்லால் சுயராஜ்யத்தில் காந்தியார் சுதந்திரத்தில் மனிதனுக்குக் கடுகளவாவது சுயமரியாதைக்கு இடமுண்டா என்று கேட்கிறோம்.
அப்படிக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுய மரியாதைக்குப் பிறகு) சுதந்திரமாய் இருந்தால், காதலுக்கு பிரிட்டிஷ் அரசருக்கு ஏற்பட்டதுபோல் விலங்கு இருக்குமா? என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பதற்கு நிகர் உலகில் மனிதனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று சொல்ல வேண்டும்.
தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் நேரப் போக்குப் பிரசாரமாக நடந்து வந்திருந்த போதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது ஏன்? சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகாபண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது; தோழர் காந்தியாரைப் பல கரணங்கள் போடச் செய்துவிட்டது.
பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பிவிட்டது. கீழ்சாதி, மேல்சாதி என்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும், குர்-ஆனுக்கும் புதிய வியாக்யானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். காங்கிரஸ் தொல்லை இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு, பார்ப்பனீயம் அடியோடு மாண்டிருக்கும் என்றே சொல்லலாம்.
இந்தியா முழுமைக்கும் பிரசாரம் செய்யப் போகின்றது சுயமரியாதை இயக்கம். அது தனது பழைய வாலிபர்கள் பெரும்பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்துவிட்டதால் புதிய வாலிபர்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள்; எனக்கு ஒரு சமயம் குறை ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குக் குறை ஏற்படாது.
வாலிபர்களே! தயாராய் இருங்கள்!
சுயமரியாதை இயக்கத்தின் அறிவியல் கொள்கை
நான் 1925ஆம் ஆண்டில் காங்கிரசிலிருந்து விலகிய பின் அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பார்ப்பனரால் நடத்தப்படும் போராட்டமே யொழிய, பொது ஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகுப்பதற்கோ அல்லது வேறு எந்த விதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதோ அல்ல என்பதைத் தெளிவாக உணர்ந்து அப்படிப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதையும், எந்தக் காரணம் கொண்டும் நமது நாட்டில் இனியும் பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என்பதையும் கருதி, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஊற்றாக இருந்து வரும் கடவுள், மதம், ஜாதித் தத்துவங்களையும் இந்தத் தத்துவத்திற்கு இடமாக விருக்கிற மூட நம்பிக்கையும், மூட நம்பிக்கையை அரசியல், கடவுள், மதம், சாத்திரம், தர்மம் ஆகியவற்றின் பேரால் வளர்க்கும் பார்ப்பன சமுதாயத்தையும் ஒழிப்பது என்ற கொள்கை மீது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து, நானே தோற்றுவித்தவனாகவும், தொண்டாற்றுபவனாகவுமிருந்து பல தோழர்களின் ஆதரவு பெற்று அதை நடத்தி வந்தேன். இந்த நிலையில் காங்கிர சானது அரசியல் ஆதிக்கத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், சமுதாயத் தொண்டே தான் காங்கிரசின் பிரதான கொள்கை என்றும் சொல்ல நிர்மாணத் திட்டம் என்னும் பேரால் பொய் நடிப்பு நடித்து மக்களை ஏமாற்றி வந்த (காங்கிரஸ்) தனது வேடத்தை மாற்றிக் கொண்டு அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி துணிந்து வெளிப்படையாகவே அரசியலில் புகுந்து ஆட்சியைக் கைப்பற்ற முன்வந்து விட்டதையும் உணர்ந்தேன்.
பிறகு எனது நிலை மேலே குறிப்பிட்டபடி கடவுள், மதம், ஜாதி, தர்ம, சாத்திர, சம்பிரதாய, பார்ப்பன சமுதாய ஒழிப்பு வேலைகளுடன், அரசியலில் பார்ப்பனர் நுழையாதபடியும், ஆதிக்கம் பெறாமல் இருக்கும்படியும் தொண்டாற்ற வேண்டிய அவசியத்திற்கு ஆளாக நேரிட்டு விட்டது.
அதாவது இவ்வளவு துறையிலும் பாடுபட வேண்டியதே எனக்குச் சமுதாய தொண்டாக ஆகிவிட்டது. இதன் பயனாய் எனது வேலை இரட்டித்து விட்டதுடன் எதிர்நீச்சல் போல் மிக மிகக் கஷ்டமான காரியமுமாகி விட்டது. எப்படி எனில் நான் கடவுள், மத, சாஸ்திரம், சம்பிரதாய, ஜாதித் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) அரசியல் துறையில் முன்னேறி விடுகிறார்கள். அரசியல் துறையில் பாடுபட்டால் எதிரிகள் (பார்ப்பனர்) கடவுள், மத, சாஸ்திர, சம்பிரதாய, ஜாதித் துறையில் முன்னேறி விடுகிறார்கள். ஆதலால் இரு துறைகளில் மூடநம்பிக்கையுள்ள பாமர மக்கள் இடையில் வேலை செய்வதென்பது எனக்கு மேற்சொன்னபடி மிக மிகக் கஷ்டமாகவும், காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் வேலை போலும் திணற வேண்டியதாகி விட்டது.
இதற்கிடையில் எனக்கேற்பட்ட மற்றொரு மாபெரும் தொல்லை என்னவென்றால், என் தொண்டுக்கு ஆதரவாகச் சேர்த்து எடுத்து அணைத்துப் பக்குவப்படுத்தி வந்த தோழர்கள் எல்லாம் 100-க்கு 100 பேரும் பக்குவமடைந்த வுடன், விளம்பரம் பெற்று பொது மக்கள் மதிப்புக்கு ஆளானவுடன் அத்தனை பேரும் எதிரிக்குக் கையாள் களாகவே (எதிரிகளால் சுவாதீனம் செய்யப்பட்டு) எதிரி களுக்குப் பல வழிகளிலும் பயன்படுபவர்களாகி விட்டதோடு எனக்கும், எனது தொண்டிற்கும் எதிரிகளாக, முட்டுக்கட்டை களாக பலர் விளங்க வேண்டியவர்களாகி விட்டார்கள். இதற்குக் காரணம் (பிரஹலாதன், விபீஷணன் போல்) நமது ஜாதிப் பிறவித் தன்மைதான் என்று சொல்ல வேண்டியதைத் தவிர எனது 40 வருட பொதுத் தொண்டின் அனுபவத்தில் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் நான் 40 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வந்து இன்றுள்ள நிலையில் எனது தொண்டின் பயனும் நிலையும் இருக்கிறதென்றால் என்னைப் பற்றி அறிஞர்கள் தான் விலை மதிக்க வேண்டும்.