திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் உண்டியல் செலுத்த சென்னை அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திரமோகன் கொண்டுசென்ற 2 1/2 லட்ச ரூபாய் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விடுதியின் கதவுக்கு உட்புறம் உள்ள பூட்டை இரும்புக் கம்பியின் உதவியால் நீக்கிய திருடர்கள், கதவைத் திறந்து பணத்தை எடுத்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருத்தணியை அடுத்த புண்ணியம் கிராமத்தில் வசிக்கும் புருஷோத்தமன் (44), மகள் சரண்யா (18)வுடன் ஆடிக்கிருத்திகையைக் காண திருத்தணி வந்து சாமி கும்பிட்டுள்ளார். பின்பு தெப்பவிழாவைப் பார்க்க வந்தபோது, கூட்ட நெரிசலில் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். கிழிந்த வேட்டியுடன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பெங்களூர் சி.பி.எம். லே அவுட் பகுதியில் வசிக்கும் பாஸ்கரன், மனைவி தெய்வானையுடன் ஜூலை 26 அன்று திருத்தணி கோவிலுக்கு வந்துள்ளார். அவரது கைப்பையில் பிளேடால் அறுத்த மர்மநபர் அதிலிருந்த ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரத்தைத் திருடிச் சென்றுவிட்டார். கோவிலில் காணிக்கை செலுத்த வைத்திருந்த பணம் என்று தெய்வானை கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் வசிக்கும் லட்சுமிபதி (26)யின் மனைவி திருத்தணி கோவிலுக்கு வந்தபோது கைப்பையிலிருந்த 2 தங்க வளையல், செல்பேசி, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை பிளேடால் கிழித்து மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த பாலவாக்கம் டி.எஸ்.பி.நகர் 2ஆவது தெருவில் வசிக்கும் சிதம்பரத்தின் மனைவி காமாட்சி, அங்குள்ள வேம்புலி அம்மன் கோயிலில் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த நபர் திடீரென காமாட்சியின் கழுத்திலிருந்த 5 சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். காமாட்சி சத்தம் போட்டுக் கத்தியும் உதவிக்கு யாரும் வரவில்லையாம். நீலாங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுகார்பேட்டை பி.கே.ஜி. கார்டன் தெருவில் வசிக்கும் ரியாஸ்கான் (75) ஜூலை 24 அன்று அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ரியாஸ்கானின் கழுத்திலிருந்த 3 சவரன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். யானைக்கவுனி காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை தரமணியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலை, ஆடிஅமாவாசை அன்று மூடிவிட்டு மறுநாள் பூசாரி வந்து திறந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். கோவில் நிருவாகிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
திருவள்ளுர் அருகேயுள்ள புன்னப்பாக்கம் கிராமத்தில் கோடீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த சோமசுந்தரர், விநாயகர் சிலைகள், அம்பாள் சிலை உள்பட 10 சிலைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னை- கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பலராமன் தெருவில் வசிக்கும் சதாசிவத்தின் மனைவி கலைச்செல்வி (27) நாகாத்தம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் கலந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கலைச்செல்வியின் முதுகில் அடித்துவிட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.