ஆசிரியர் பதில்கள்

ஜூலை 16-31

கே:    ‘நீட் தேர்வு’ முடிவுகளில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பிடிக்கவில்லை என்பது எதனைக் காட்டுகிறது?

    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து, தமிழகத்திலிருந்து ‘நீட்’ எழுதியவர்களில் எவரும் வராதது _ தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தால்தான் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்பது பொருந்தாத வாதம் என்பதையே காட்டுகிறது!

கே:    பிழைப்புத் தேடி வந்தவனையெல்லாம் வாழவிடலாம்! ஆனால், தமிழ்நாட்டை ஆளவிடலாமா?

    – ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி

ப:    தமிழ்நாட்டு வாக்காளர்களின் உணர்வுகளும் உணர்ச்சியும் எப்படியோ அப்படித்தான் அமையும். வந்தாரை வாழவைத்தால் மட்டும் போதுமா? என்னே பரந்த -_ விரிந்த மனப்பான்மை!

கே:    பி.ஜே.பி. பார்ப்பானும், காங்கிரசு பார்ப்பானும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே? (“கொலைக் குற்றவாளியை’’ குடியரசுத் தலைவர் சந்தித்து மணிக்கணக்கில் உறவாட,  இந்நாட்டு சட்டங்கள் அனுமதியளிக்கிறதா?)

    – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:    நிச்சயமாக! அது மட்டுமா? “கன்னியாகுமரி பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், காஷ்மீரப் பார்ப்பானுக்கு நெறிகட்டும்’’ என்பாரே பெரியார்!

கே:    “சாமியார்கள் நாடாண்டால் நாடு குட்டிச்சுவராகும் என்பதற்கு’’ உ.பி. ஒரு மோசமான முன்உதாரணம் அல்லவா?  

    – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:    உ.பி.யைப் பார்த்துவிட்டு கேட்கிறீர்களா? பலே, பலே!

கே:    ஆதார் அட்டையை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தபோது எதிர்த்த பி.ஜே.பி. அதைத் தற்போது அனைத்திலும் கட்டாயமாக்குகிறது. ஜி.எஸ்.டி. அவர்கள் கொண்டுவந்தபோது கடுமையாக எதிர்த்த மோடி இன்று நட்ட நடுநிசியில் அமல்படுத்துகிறாரே? இவை எதைக் காட்டுகின்றன?

    – கெ.நா.சாமி, சென்னை-72

ப:    எப்போதுமே இரட்டை வேடம், இரட்டைக்குரல்தான் எங்களுடையது என்பதற்கு நல்ல சான்று இது!

கே:    தற்போது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்பட்டிருக்கும் மோதலுக்கான தயார்நிலை குறித்து தங்கள் கருத்து என்ன?

    – அ.சுடர்மதி, வேலூர்-1

ப:    நமது வெளியுறவுத் துறை குறிப்பாக சீனாவுடன் பாராட்டிய சிறப்பு ஒத்துழைப்பு என்னவாயிற்று?

கே:    கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ உரிமை கொண்டாடுவது சரியா?

    – சீ.இலட்சுமிபதி, தாம்பரம்

ப:    நம் நாட்டு அரசியலில் இது புதிதல்ல. மதிய உணவுத் திட்டத்திற்குக்கூட இதேபோல பல கட்சிகள் உரிமை கொண்டாடுவது தெரியாதா?

கே:    அரசு ஊழியர்கள் போராடினால் உடனே கவனம் செலுத்தும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் போராட்டங்களை அலட்சியப்படுத்துவது ஏன்?

    – வீ.தமிழரசி, சென்னை-35

ப:    அங்குள்ள அரசியல் அழுத்தத்தை விவசாயிகளால் கொடுக்க முடியவில்லை என்பதன் யதார்த்தம்தான் அதிலிருந்து வெளிப்படுகிறது!

கே:    சில மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் மோதிக் கொள்வது அத்துமீறலாலா அல்லது ஆதாயம் கருதியா?

    – பூ.குணசீலன், சேலம்-3

ப:    அதிகார ஆசையினால் ஏற்பட்ட அத்துமீறல்! சில நேரங்களில் அரசியல் (விளம்பர) ஆதாயம் கருதியும் கூடத்தான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *