வரம்
அனைத்து வரமும்
அள்ளித் தருவதாய்
எண்ணிக் கொள்ளும்
எங்கள் அம்பாள்
உள்ள ஊரில்,
காய்க்காத
மரமும்கூட –
சொ(க)ல்லடி படுகிறது
பிள்ளைப்பேறு
இல்லாதவள் என்று.
முரண்பாடு
மலையில் பாறை
சிற்பியால் சிலை,
பக்தர்கள் முன் கடவுள்
பார்ப்பனர் முன் கல்
தடுமாறும் புத்தியால்
தட்டில் சில்லறை
வரி ஏய்ப்பில் கோயில் நிருவாகம்,
பட்டினி வாழ்வில் ப(க்)தர்கள்கூட்டம்.
வெங்கட. இராசா, ம. பொடையூர்
ஆண்டவர் (சாமி) வரமாட்டார்
ஆண்டாண்டு தோறும்
அழுது புரண்டாலும்
மாண்டார் வரமாட்டார் – அதுபோல்
ஆண்டாண்டு தோறும்
அர்ச்சனை செய்தாலும்
ஆண்டவர் (சாமி) வரமாட்டார்.
– உ.கோ. சீனிவாசன், திருப்பயற்றங்குடி
முடிந்தால்….
தேரை
இழுத்தது போதும்
முடிந்தால்
தேரில் இருக்கும் சாமியே
தேரைக் கொண்டு போகும்!
தங்கச் சங்கிலி
போடவில்லையென்று
இங்கே ஒருத்தன்
மனைவியை
உதைத்துக் கொண்டிருக்கிறான்
எந்தக் கவலையும் இல்லாமல்
இல்லாததுபோல்
நீங்கள்
இரும்புச் சங்கிலி கட்டி
தேரிழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
கொடுங்கள்
சாமியின் நகையை
ஒரு பெண்ணை வாழவைக்கும் வேலையைச்
செய்யுங்கள்!
முடிந்தால்
தேரிலிருக்கும் சாமி
தேரைக் கொண்டு போகட்டும்!
– லெட்சுமிசங்கரன்
மலம்
குழந்தை மலத்தை
வாரும் தாய்க்கு
அசுசை இல்லை.
பசுவின் மலம்
புனிதம் என்றவனும்
மனிதனே
அவரவர் மலத்துவாரங்களை
அவரவர் கைகளே
சுத்தப்படுத்துகையில்
அருவருப்பு எங்கே போனது?
அடுத்தவன் மலத்தைக்
காணுகையில் மட்டும் உன்மனம் ஏன்
அமலமற்றுப் போகிறது?
மனத்தை
மலமாக்கிய குற்றம்
யாருடையது?
மலப்பரிசோதனைக்கு
மருத்துவனுக்கு மட்டுமேன்
கையுறை?
நிர்மல மனங்களில் –
மலம் வாரியோன்
மனிதரினும் உயர்ந்த
மனிதநேயச் செம்மல்
சமூகத்தின் மலத்துவாரம் அடைபட்டு நாறாதிருக்கச்
செய்திடுவீர் அவருக்கொரு
சல்யூட்.
– கே. பி. பத்மநாபன், சிங்காநல்லூர்
இந்திரக் கலை!
அக்கினி நெருப்புப் பிழம்பாய்
நின்றான்…
முனிவன் கோதமன்!
நாணிக் குறுகி
நின்றாள்…
அகலிகை
தம் சிரம் கவிழவே!
தெரிந்தே செய்தாய்
அகலிகை?
பத்தினிப் பெண்டிர்க்குக்
களங்கம் கற்பித்தாய்!
கல்லாகக் கடவாய் நீ
என்று சாபத் தீக்கொழுந்து விட்டெரிந்தது!
தவறுதான்!
தண்டிப்பது மட்டும் நியாயமா?
நான் விரும்பியது
இந்திரனைத்தான்!
நீங்கள் –
சூழ்ச்சி செய்து
என் பெண்மையைக் களவாடினீர்!
மட்டுமா?
என்றாவது இன்ப புரிக்கு
என்னைக் கொண்டு சென்றிருப்பீரோ?
இந்திரன்…
ஓர் ஆணழகன்!
ஆயக்கலை வல்லவன்!
தேவர் தலைவன்!
வெஞ்சமர் மறவன்!
இளைஞன்! கலைஞன்!
சுவைஞன்! கவிஞன்!
இந்திரன் வந்தான்…
இந்திர புரிக்கு
அங்கவன் கொண்டு சென்றான்
என்றாள் அகலிகை!
அங்கே…
கோதமன் உள்ளமே
கல்லாகியது!
– இந்திர தனுசு, மதுரை