அறிவுலக மேதை இங்கர்சால்

ஜூலை 16-31


பகுத்தறிவு உலகத்தின் ஒப்பற்ற பரப்புரையாளர் அமெரிக்க நாட்டின் ‘இல்லியனாய்’ மாநிலத்தில் பிறந்த கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்கள் ஆவார்கள்.
19ஆம் நூற்றாண்டின் பார்புகழ் பகுத்தறிவு மேதையான அவர் கூறுகிறார்:

“உலகத்திலேயே அதிமுக்கியமான விஷயம் சுதந்திரம். அது உணவை விட, உடையை விடப் பெரியது; செல்வத்தை விட, வீடுகளை விட, நிலங்களை விடப் பெரியது. சிற்பம், ஓவியம், கலைகள் யாவற்றிலும் உயர்ந்தது. எல்லா மதங்களைக் காட்டிலும் சுதந்திரமே நனி சிறந்தது. இத்தகைய இணையிலா மதிப்புடைய மனித சுதந்திரமெனும் மரகதத்தைக் காப்பாற்ற நான் எதனையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்’’ _ 1877இல் இன்றைக்கு 138 ஆண்டுகளுக்கு முன்னால் முழங்கிய சீரிய பகுத்தறிவாளர் மேதை இங்கர்சால் ஆவார்!

அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆம் _ இந்தப் புரட்சிகர கடவுள் _ மத _ பழமை சனாதன எதிர்ப்புக்காக அவர் கொடுத்த “விலை’’ அது!

இல்லியனாய் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் என்ற தலைமை வழக்குரைஞர் பதவியை இரண்டு ஆண்டுகள் வகித்து, திறம்பட வாதாடிப் புகழ்பெற்றார்!

அம்மாநில கவர்னர் பதவி கிடைக்க வாய்ப்பு இருந்தது; ஆனால் அவரது கொள்கைகளைச் சிறிதளவும் விட்டுக் கொடுத்து, அதற்காகச் சமரசம் செய்துகொள்ள அவரால் இயலவில்லை. “என்னுடைய நம்பிக்கை என்னைச் சார்ந்தது. அது இல்லியனாய் மாநிலத்தைச் சேர்ந்ததன்று. இந்த உலகத்திற்கு மன்னரே ஆவதாயினுங்கூட என்னுடைய மன உணர்ச்சிகளில் ஒன்றையேனும் என்னால் அடக்கி விரட்ட முடியாது’’ என்று சொல்லி அப்பதவியை நிராகரித்து விட்டார்.

இக்கொள்கைகளாலேயே இங்கர்சால் அரசாங்கத்தாரால் அளிக்கப்பட்ட அத்தனைப் பதவிகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
என்னே அவரது இலட்சியப் பற்று!

அமெரிக்க நாட்டில் அக்காலத்தில் கட்டணம் கொடுத்துவிட்டு, கர்னல் இங்கர்சாலின் பகுத்தறிவுத் ததும்பும் பேருரைகளைக் கேட்கத் திரண்டனர் மக்கள்! இது ஒரு வரலாற்றுச் சாதனை!
அந்த இங்கர்சாலை _ தனது பச்சை அட்டை ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலமும், தாம் துவக்கிய பகுத்தறிவு நூற்பதிப்பு வெளியீட்டகம் மூலமும், தமிழ்நாடு முழுவதும் பரப்பிய பெருமை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே சாரும்!

தனது பகுத்தறிவு _ சுயமரியாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கத்திற்கு வலு சேர்க்க _ மேலைநாட்டு அறிஞர் பெருமக்களின் அரிய கருத்துக் கருவூலங்களை 1930 முதலே தந்தை பெரியார் அவர்கள் தனித்தனித் தலைப்புகளில், தக்காரைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து சிறுசிறு வெளியீடுகளாக (pamphlets) மலிவு விலைக்கு பல்லாயிரக்கணக்கில் வெளியிட்டார்கள்.

இங்கர்சால் பேச்சுகளையும், தமிழாக்கம் செய்து 1933 முதலே பல தலைப்புகளில் வெளியிட்டார்கள்.

அவரது நினைவு நாள்: 21.7.1899.

-கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *