வெற்றிலை… தொன்றுதொட்டு நாம் பயன்படுத்திவரும் மூலிகைகளுள் ஒன்று. திருமணம், சடங்கு என எல்லா மங்கல நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக, வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி சேர்த்து தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கமாகும்.
தாம்பூலம் தரிப்பதால், உண்ட உணவு எளிதில் செரிமானமாகும். குறிப்பாக, வயிறு முட்ட உண்ணும்போதும், அசைவ உணவுகள் உண்ணும்போதும் தாம்பூலம் தரித்தால் எளிதில் செரிமானமாகி, வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமலிருக்கும். அத்துடன், வயிற்றில் வாய்வுக்கோளாறு ஏற்படாமல் தடுப்பதோடு வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்ற உபாதைகள் தடுக்கப்படும். மேலும், கழிவுகள் வயிற்றில் சேராமல் குடல் சுத்தப்படுத்தப்படுவதோடு, மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
வெற்றிலைச் சாற்றை உட்கொள்வதால் தலைபாரம், மாந்தம், வயிற்றுவலி, வயிற்று உப்புசம், காணாக்கடி போன்றவை சரியாகும். இரண்டு வெற்றிலைகளுடன் ஒன்பது மிளகுகள் சேர்த்து மென்று சாப்பிட்டால் தேள்கடி விஷம் முறியும். உடம்பில் அரிப்பு, ஊறல், திடீர் வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். 100 மில்லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெற்றிலைகள் சேர்த்துக் காய்ச்சி தினமும் காலை – மாலை வேளைகளில் சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பூசிவந்தால் குணம் கிடைக்கும்.
நுரையீரல் தொடர்பான தொந்தரவுகள் ஏற்பட்டால், வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். இரைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் முற்றிய வெற்றிலையின் சாறு இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஒரு சிட்டிகை மிளகுப் பொடி, அதே அளவு சுக்குப்பொடி கலந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
வெற்றிலைச் சாற்றுடன் அதே அளவு துளசிச்சாறு சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு அரை டீஸ்பூன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
வெற்றிலையைக் காம்பு, நடுநரம்பு நீக்கி உண்டால்தான் முழுப் பலன் கிடைக்கும்.