உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? ஜூலை 16-31

                                                                   டாக்டர் டி.எம்.நாயர்

                                                                   (மறைவு: 17.07.1919)

டாக்டர் டி.எம்.நாயர் (தரவாட் மாதவன் நாயர்) அவர்கள் இங்கிலாந்தில் காது, மூக்கு, தொண்டை (E.N.T.) துறையில் மிகப் பெரிய மருத்துவப் படிப்பு முடித்துத் திரும்பிய அறிஞர்.

டாக்டர் சி.நடேசனார் திராவிடர் சங்கத்தை 1912 முதலே உருவாக்கி நடத்திய நிலையில்,  டி.எம்.நாயர், சர்.பிட்டி.தியாகராயர் இருவரும் அதில் இணைய இம்மூவரும் முப்பெரும் தலைவர்களாகி முன்னெடுத்துச் சென்றனர் _ திராவிடர் இயக்கத்தை!

“நீதிக்கட்சி’’ என்று மக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (S.I.L.F.) சார்பில் துவக்கப்பட்ட ‘Justice’ ’ ஆங்கில நாளேட்டிற்கு அதன் முதல் ஆசிரியப் பொறுப்பை ஏற்ற பெருமகனார். (26.2.1917)

டாக்டர் டி.எம்.நாயர் அவர்களுக்கு, 1918 ஜூனில் லண்டன் போய்ச் சேர்ந்தபோது, அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது, மருத்துவம் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்று வாய்ப்பூட்டை இங்கிலாந்து அரசு போட்டது. திருமதி அன்னிபெசன்ட், திலகர், அவரது கூட்டமே இதற்கு மூலகாரணம். பிறகு இங்கு பணியாற்றிச் சென்று நாடாளுமன்றத்தில் இருந்த லார்ட் சைடன்ஹாம், லார்ட் கார்மைக்கேல் போன்றவர்கள் வாதாடி, நாயருக்குப் போடப்பட்ட வாய்ப்பூட்டை உடைத்தனர்.

பிறகு நாயர் தெளிவாக வாதிட்டார் _ பிரிட்டிஷ் அரசியல்வாதிகளிடையே இரு அவைகளைச் சேர்ந்து கொண்ட கூட்டத்தில் பேசினார். (2.8.1918)

உடல் நிலை மிகவும் கெட்டு, லண்டனில் தமது 51ஆம் வயதில்,  1919 ஜூலை 17-இல் அங்கேயே டாக்டர் நாயர் மறைந்து, அடக்கம் செய்யப்பட்டார்! அவரை திராவிட லெனின் என்று வர்ணித்தார் தந்தை பெரியார் அவர்கள்!

டாக்டர் சர் ஏ.இராமசாமி முதலியார்

(மறைவு: 17.07.1976)

ராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

1918இல் ராமசாமி முதலியார் அவர்கள், டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோருடன் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளைப் பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார்.

நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் செய்தித்தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார். இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித்தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.
ராமசாமி முதலியாருக்கு ஷாகு மகராஜுடனும் மகாராட்டிரப் பார்ப்பனரல்லாதார் அமைப்புத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பார்ப்பனரல்லாதார் அமைப்புத் தலைவர்களோடும் நட்பு முறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பார்ப்பனரல்லாதார் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.

டிசம்பர் 18, 1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.

டிசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் கலந்துகொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பிப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனரல்லாதார்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

ஜனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *