இந்தியாவின் முக்கிய நகரங்களைத் தாக்கும்விதத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 24 ஏவுகணைகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் நீதித்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரயில்களில் பயணம் செய்வோர் தொலைத்த பொருள்களை, மறந்துவிட்டுச் சென்ற பொருள்களை மீட்பதற்கு www.sr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று about as என்பதைச் சொடுக்கி security என்ற இணைப்பிற்குள் சென்று chennai division என்ற பகுதியில் பார்த்தால் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களும் வங்கிகளாக மாற்றப்படுவதற்கான அனுமதி அளிக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் கேட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதியாக இருந்த பி.வி.நாயக் ஓய்வு பெற்றதையடுத்து, 23ஆவது தலைமைத் தளபதியாக நோர்மன் அனில் குமார் பிரவுன் (என்.ஏ.கே.பிரவுன்) பொறுப்பேற்றுள்ளார்.
தண்ணீரில் நடக்கவும், ஓடவும், மூழ்கி எழுந்துவரும் ரோபோவை சீனாவின் ஷிஜியாங் பல்கலைக்கழக கெமிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் குயின்மின்பான் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். சுரங்க ஊழலில் லோக் அயுக்தாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இதில் சம்பந்தப்பட்ட எடியூரப்பா உள்பட அனைவர் மீதும் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கருநாடக ஆளுநர் பரத்வாஜ் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு அதிநவீன எஃப்.16 ரக விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
அரசின் அனைத்துத் துறை விண்ணப்பங்களையும் ஆகஸ்ட் 15 முதல் அஞ்சல் நிலையங்களில் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை முடிவு செய்யும் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கான தலைவரை 2 வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
லிபியாவில் நேட்டோ படை நடத்திய விமானத் தாக்குதலில் அதிபர் கடாபியின் மகன் கமிஸ் கடாபி (28) உள்பட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபிய அரசு தரப்பில் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து கப்பற்படையின் எச்.எம்.எல். போர்ட்லேண்ட் என்ற போர்க்கப்பலின் கமாண்டராக சாரா வெஸ்ட் (39) எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கான்வரால் நகரிலுள்ள விமானப் படைத்தளத்திலிருந்து ஜுனோ விண்கலம் அட்லாஸ்-5 ராக்கெட்டின் மூலம் வியாழன் கிரகத்திற்குச் சென்றுள்ளது.