திருமணம் தேவையில்லை
– சு. அறிவுக்கரசு
நல்ல கடவுள் மறுப்பாளரான கிரெக் எப்ஸ்டீன் கடவுளின்றியே நன்மை எனும் நூலில் கடவுளின் தோற்றம் பற்றி எழுதுகிறார். நீ கடவுளை நம்புகிறாயா? என்பது அர்த்தமற்ற கேள்வி என்கிறார். கடவுள் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய்? (WHAT DO YOU BELIEVE ABOUT GOD) என்றுதான் கேட்கவேண்டும் எனக் கூறுகிறார். ஏன் இந்தச் சிறிய வேறுபாடு கேள்வியில்? இந்த (அறிவு வளர்ச்சி)க் காலத்தில் கடவுள் என்ற சொல் எந்த அர்த்தத்தையும் தரலாம்; எனவே, அது இல்லை என்ற அர்த்தத்தையும் தரக்கூடும் என விளக்குகிறார்.
எது முதலில் வந்தது? கோழியா, முட்டையா? எது முதலில்? மதமா? நாத்திக மனித நேயமா? மதம்தான் முதலில் என்றால்… நாத்திகமும் மனித நேயமும் அதே காலகட்டத்தில் மறுப்பாக எழுந்த தத்துவங்கள்தான் என்கிறார். மறுக்க முடியுமா? இதற்கு ஆதாரமாக ரிக் வேதத்தைக் காட்டுகிறார். 3,500 ஆண்டுகளுக்குமுன் தொகுக்கப்பட்டது எனக் கூறப்படும் இந்நூலின் சில வரிகளை மேற்கோள் காட்டுகிறார். படைப்பு பற்றிய ரிக் வேத ஸ்லோகத்தைச் சுட்டுகிறார்.
யாருக்கு சரியாகத் தெரியும்?
யாரால் உறுதியாகக் கூறமுடியும்?
எப்போது இப்பிறப்பு நிகழ்ந்தது?
எப்போது இதன் படைப்பு நிகழ்ந்தது?
இந்த உலகம் படைக்கப்பட்டபின் கடவுளர்களின் பிறப்பு நடந்தது.
அப்படியெனில் இது எப்போது நடந்தது
என்று யார் அறிவார்?
எவருக்கும் இது தெரியாதே!
அவன் படைத்தானா?
படைக்கவில்லையா, என்பதும் தெரியாது சொர்க்கத்திலிருந்து குனிந்து பார்க்கும்
அவன் மட்டுமே அறிந்திருக்கலாம்! அவனுக்கே கூட, ஒருவேளை, இது தெரியாமல் இருக்கலாம்!
– இந்தச் சந்தேகம் அன்றைக்கே இருந்திருக்கிறதே!
இந்த அய்யத்தைக் கிளப்பியவர்கள் மானுடப் பற்றாளர்களாகிய லோகாயதர்கள், சார்வாகர்கள். ஒரே மாதிரியான கருத்தும் கொள்கையும் கொண்ட மனித நேயர்கள் இந்திய மண்ணில் 2,100 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள். மானுடப் பற்றாளர்கள் எனப் பெருமையுடன் பறை சாற்றுகிறார் இந்நூலில். இறப்புக்குப்பின் எந்த ஒரு வாழ்க்கையும் கிடையாது என அறுதியிட்டு அவர்கள் கூறினார்கள்.
மாதவ ஆசார்யா என்பவர் எழுதிய சர்வ தரிசன சம்கிதை எனும் நூலின் பாடல் ஒன்றினையும் எடுத்தாண்டிருக்கிறார்.
அடுத்த உலகத்திற்கு இறந்த உடல் செல்கிறதென்றால், ஏன் திரும்பவில்லை? இறந்தோரை இழந்து தவிக்கும் உறவினரைச் சாந்தப்படுத்திட
ஏன் அவர்கள் திரும்பி வரவில்லை? எல்லாம், தம் வயிற்றுப் பாட்டுக்காக
பார்ப்பனர் கட்டிவிட்ட கதையிது – செத்தவர்க்குச் செய்திடும் சடங்குகள்!
வேறெங்கும் வாழ்வு கிடையாது இவ்வுலகில் வாழும் மாந்தரெல்லாம்
மகிழ்வுடன் வாழ்ந்திடவே
பற்றுவீர் சார்வாகத் தத்துவத்தை!
எனப் போகும் பாடல் அது! IT IS ONLY AS A MEANS OF LIVELIHOOD THAT BRAHMINS HAVE ESTABLISHED HERE ABUNDANT CEREMONIES FOR THE DEAD என அப்பட்டமாக எழுதி சார்வாகக் கொள்கையை சர்வதரிசன சம்கிதை கூறுவதை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
இந்தியாவில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சமண மதம் கூட பார்ப்பனச் சடங்குகளையும் மேலாதிக்க வல்லாண்மையையும் எதிர்த்து வந்ததுதானே! கடவுள்தான் உலகை உண்டாக்கியது என்றால் அதற்கு முன் அது எங்கே இருந்தது? அது அனைத்துக் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டது என்றால், இப்போது எங்கே இருக்கிறது? உலகைப் படைப்பதற்குத் தேவையான பொருள்களை அது எப்படிப் பெற்றது? எங்கிருந்து பெற்றது? என்ற கேள்விகளை சமண அறிஞர் குந்த குந்த கேட்டார் எனக் குறிப்பிடுகிறார். கீழை நாடுகளின் சிந்தனைகளில்தான் மானுடப்பற்றும், கடவுள் மறுப்பும் ஆதிகாலம் தொட்டே தொடங்கி நிலவி வந்தது என்பதை நிறுவுகிறார். நாம் பெருமை கொள்ள வேண்டிய சேதி!
ஜென் பவுத்தம் பற்றிப் படித்தவர் என்ற காரணத்தால் அவர் அதுபற்றி விளக்குகிறார். ஷான் (CHAN) என்று சீன மொழியில் அழைக்கப்படும் கட்டுப்பாடுகள் நிறைந்த வழிபாட்டு முறையே, ஜப்பானிய மொழியில் ஜென் (ZEN) எனப்படுகிறது. தியானம் என்ற பொருள்தரும் சமக்கிருதச் சொல் தியானா (DHYANA) என்பது சீனத்தில் ஷான் ஆனதாம். இந்த ஷான் முறையைக் கைக்கொள்ளும் சீன குருக்கள் ஒயின் பாட்டில், நீலப்படம் பார்க்க உதவும் டி.வி., வி.சி.ஆர். பெட்டிகளின் பக்கத்தில்தான் தைவானில் அமர்ந்து ஜெபம் செய்கிறார்களாம். இந்தக் கபடவேடதாரிகளை அடையாளம் கண்டதால்தான், இவர்கள் கம்யூனிஸ்ட் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, சியாங்கே ஷேக்கின் ஃபார்மோஸா தீவில் அடைக்கலம் புகுந்து தம் மத வணிகத்தைச் செய்து வருகிறார்கள் போலும்!
உலகின் மதங்கள் எல்லாமே ஒன்றை மட்டுமே வலியுறுத்துவதாக அவர் எழுதுகிறார்.
உனக்குத் தீங்கு நேரும் வகையிலான காரியத்தை, நீ, பிறருக்குச் செய்யாமல் இருப்பதே உன் கடமை. (மகாபாரதம் 5:1517) இதே கருத்தையே பவுத்தம் கூறுவதாக (உதன _ வர்கம் 5,18) எழுதுகிறார். பிறர் உனக்குச் செய்வதால் உனக்குத் தீங்கு நேரிடுமானால், அதே காரியத்தை நீ பிறருக்குச் செய்யாமலிருப்பதுதான் சட்டம் என்று மாத்யூ எழுதிய பைபிள் (7, 12) கூறுவதாக எழுதுகிறார்.
வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கை ஒன்றே! அதுதான் கருணையுடன் அன்பு செலுத்துதல். பிறர் உனக்கு எதைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறாயோ, அதைப் பிறருக்கு நீ செய்யாதே என்று கன்பியூஷியஸ் மதம் (15, 23) கூறுவதாக எழுதுகிறார்.
தனக்கு விருப்பமானதைப் பிறருக்கும் செய்து வாழ்வதே (இறை) நம்பிக்கையாளர் என்பதற்கான அடையாளம் என்று இசுலாத் கூறுவதாக எழுதுகிறார்.
எதை நீ விரும்பவில்லையோ, அதை அடுத்தவருக்கு நீ செய்யாதே என்று யூதமதம் (டால்முட், ஷபாத் 31டி) கூறுவதாக எழுதுகிறார்.
உன் பக்கத்து வீட்டாருக்கு ஏற்படும் ஆதாயம் உன்னுடையது என்றும் அவருக்கு ஏற்படும் இழப்பும் உனக்கு ஏற்பட்டதாகும் என்றும் கருது என்று டாவோயிச மதம் கூறுகிறதாம்.
நேர்மையான வாழ்க்கை முறை என்பது எதுவென்றால், எவரையும் துன்புறுத்தாமல் இருப்பதுதான் என்கிறதாம் சமணம்.
எனவே, மனித நேய இயக்கம் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஒழுக்கநெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது என்கிறார். யூத மதத்தில் ஹலாச்சா (HALACHA) என்றும் கத்தோலிக்கக் கிறித்துவத்தில் கானன் சட்டம் (CANON LAW) என்றும் 10 கட்டளைகள் என்றும், இசுலாத்தில் ஷரியா என்றும் பவுத்தத்தில் கூறப்படும் எட்டுப் பாதைகள் (EIGHT FOLD PATH) போன்ற எல்லாமே, தற்காலத்திற்கு அவ்வளவாகப் பொருந்தி வராதவை. காலத்திற்கேற்ப மாறுதலுடன் ஒழுக்கநெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கம்பளியையும் பஞ்சையும் கலக்கக்கூடாது. இறைச்சியையும் பாலையும் கலக்கக் கூடாது. ஆணும் பெண்ணும் கலந்திருக்கக் கூடாது என வேலை செய்யும் இடங்கள், வழிபாட்டிடங்கள், திருமணங்கள் போன்றவற்றில் பேதம் காண்பது என்பவையெல்லாம் தற்காலத்திற்கு ஒத்து வராதவை என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.
குழந்தை பிறந்தால், அதன் பெயர்சூட்டு விழா மேலை நாடுகளில் மதச் சடங்காக நடக்கும். அதுபோலவே திருமணங்கள், சாவுச் சடங்குகள் போன்றவையும் மதக் கருத்துகளின் அடிப்படையில் நடத்தப்பெறும். கடவுள், மதநீக்கம் செய்து மாந்தநேயக் கொள்கைப்படி வாழ்பவர்கள் எப்படி மதம் சம்பந்தமில்லாமல் இவற்றைச் செய்து கொள்வது என்பதுபற்றியும் விளக்குகிறார்.
குழந்தைக்குப் பெயர் வைப்பதுபற்றிக் கூறும்போது, மனைவி, கணவன் ஆகிய இருவரின் குடும்பம், கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பெயர் வைக்கலாம். ஞானத்தந்தை, ஞானத்தாய் என்று குடும்பப் பெரியவர்களைக் குறிப்பிட்டுக் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்வர். அதற்கு மாற்றாக அவர்களை GOD PARENTS என்பதற்குப் பதில் GUIDE PARENTS (வழிகாட்டும் பெற்றோர்) என்றழைக்கலாம் என்று கூறுகிறார்.
திருமணம் பற்றிக் கூறும்போது, ஏன் அதைச் செய்துகொள்ள வேண்டும்? அது தேவையே இல்லை என்கிறார். திருமணம் கிரிமினல் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதைக் கருத்தில் கொள்ளலாம். 34 வயதான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். பெண் வீட்டிலிருந்து மணமகளைப் பல மணமகன்கள் விலைக்கு வாங்கியும், சிலர் நல்ல வாழ்வு வாழ்ந்திட தெய்வ கடாட்சம் கேளிச்சடங்குகள் செய்தும் திருமணங்கள் நடக்கின்றன.
திருமணம் என்பது – ஆணும் பெண்ணுமான இருவர், நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்திருக்கிறோம் என்பதைப் பலருக்கும் பொதுவில் தெரிவிப்பதற்கான ஏற்பாடுதான். எனவே, இது தொடர்பான ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிக்கொண்டபின், கூட்டத்தினரைப் பார்த்து, இவர்கள் இருவரும் இன்பமாகவும் இடையூறு இல்லாமலும் இணைந்து வாழ்வதற்கு எல்லா வகையான ஊக்கமும் அளித்து திருமணப் பிணைப்பை உறுதியுடன் நீடிக்கச் செய்வீர்களா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். அவர்களின் சம்மதக் குரல் எழும்பியதும் திருமணம் முடிந்ததாக அறிவித்து விடலாம் என்கிறார்.
இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் நான் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் என ஆறுதல் கூறுவதும், இறந்த பிறகு அவர் சொர்க்கம் சென்று விட்டார் என்று கூறுவதும் வழக்கமாகிவிட்டது.
சாவதற்குப் பலரும் பயப்படுகிறார்கள். சாகும் நேரத்தில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுவிக்க, கடவுளோ வேறெதுவுமோ கிட்டே வருவது கிடையாது. யார் வந்தாலும் துன்பங்களை நிரந்தரமாகத் தீர்த்திடவும் முடியாது. ஆனால், நம்மால் மதிக்கப்படும், நேசிக்கப்படும் ஒருவரது இறப்பு நிகழ்ந்து விட்டால் நாம் போய் அவர்கள் குடும்பத்தினரிடம் நான் வருந்துகிறேன், என் இரக்கங்கள், என் ஆறுதல்கள் என்கிற மாதிரியான வார்த்தைகளைக் கூறாமல், உங்கள் துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன். (I TAKE PART IN YOUR GRIEF) எனக் கூறலாம் என்கிறார். இரங்கல் தெரிவிக்கக் கூடியிருப்போரிடையே, ஒருவரோ, சிலரோ இறந்தவர் பற்றிய செய்திகளைக் கூறிப் பேசலாம். கடைசியாக, இந்த இறுதிக் கூட்டத்தில் அவரின் பூத உடலை கவுரவத்துடனும் மரியாதையுடனும் அன்புடனும் பாசத்துடனும் மதித்து, அவருடைய நினைவுகளையும் ஆற்றல்களையும் நம் நினைவில் தேக்கி அவரது உடலைப் புதைத்து/எரித்து இயற்கைச் சுழற்சிக்கு அளிக்கிறோம். மண்ணிலிருந்து மண்ணுக்கே! புழுதியிலிருந்து புழுதிக்கே! சாம்பலிலிருந்து சாம்பலுக்கே! எனப் பேசி சடங்கை நிறைவு செய்யலாம் என்கிறார்.
தம்மைப் பற்றிக் கூறும்போது, தமக்கு கடவுள், கடவுளச்சி அல்லது அமானுஷ்ய ஆற்றல் கொண்ட ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது என்கிறார்.
ஒரே உலகம்தான் உள்ளது, அதுதான் நாம் வாழும் உலகம், இறப்புக்கு முன்னதாக நாம் வாழும் உலகம், இறப்பிற்குப் பின் எந்த வாழ்வும், உலகமும் கிடையாது என உறுதியாகச் சொல்கிறேன் என்கிறார். ஒரே வாழ்வுதான் – கருப்பையிலிருந்து கற்குழிவரை உள்ள வாழ்வுதான் (FROM WOMB TO TOMB) நான் கடவுளுக்கு எதிர்ப்பல்ல, நான் நாத்திகன் மட்டுமல்ல நான் மானுடப் பற்றாளன் என்கிறார். கடவுள் என்கிற கருத்தியல் இல்லாமலே நன்றாக இருப்பதும் நன்றாக வாழ்வதுமே என வரையறை செய்கிறார்.