சமுதாயத்தில் நம் மக்கள் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஆக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அதே நிலையில் இழி ஜாதி மக்களாகவே இருந்து வருகிறோம். இழி ஜாதி மக்கள் என்று இருப்பதால்தான் நம் மக்களே தொழிலாளர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும், உடல் உழைப்புக் கொண்டு உழைத்தும் போதிய வருவாய் இன்றி அரை வயிற்றுக் கஞ்சிக்கு மட்டும் போதிய வருமானம் கொண்டவர்களாகவும் வாழுகிறோம்.
ஒரு சிலர் உயர்ந்த ஜாதி என்ற காரணத்தால், ஒருவித உடல் உழைப்பும் இன்றிச் சுகமான வாழ்க்கை கொண்டு வாழ்கிறார்கள்.
இன்றைக்கு அரசாங்கம் முதற்கண் பார்ப்பனர்களிடமும், வடவர்களிடமும் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பார்ப்பனர்கள் இயற்றி வைத்த சாஸ்திர புராணத்தில் மட்டுமன்றி இன்றைக்குள்ள ஜனநாயக ஆட்சி என்று கூறப்படும் பார்ப்பனர்களும், வடவர்களும் ஆளுகின்றன ஆட்சியின் சட்டத்தில் கூட நாம் சூத்திரர்கள் என்றுதான் எழுதப்பட்டு இருக்கிறது. பார்ப்பனருக்கு ஒரு நீதியும் சூத்திரர்களுக்கு ஒரு நீதியுமாக வழங்கப்படுகிறது.
ஒரு நாட்டின் நலனுக்கும், நாட்டு மக்கள் பிழைக்கவும், சுகமாக வாழவும் தொழிலாளர் மக்கள் தேவை. இவ்வூர் சுத்தமாக இருக்க கக்கூஸ் எடுக்கும் தொழிலாளியும், குப்பை கூட்டும் தொழிலாளியும் தேவை. வீடு கட்டிக் கொடுக்க கொல்லத்துக்காரன் தேவை. துணிகளைச் சுத்தம் செய்ய வண்ணான் தேவை. விவசாயி இல்லையேல் உணவு கிடைக்காது. நாவிதன் இல்லையேல், நாகரிகத்துக்குத் தகுந்தபடி தலை அலங்காரமோ, முக அலங்காரமோ செய்து கொள்ள முடியாது.
அப்படி ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதத்தில் நன்மை கிடைக்கிறது. யாராவது ஒரு தொழிலாளி இல்லாவிடினும் அந்தத் தொழில் தடைப்பட்டுவிடும். ஆனால், பார்ப்பான் இல்லையேல் எந்த வேலை நின்று போய்விடும்? பார்ப்பானால் என்ன வேலை நடைபெறுகிறது?
ஆனால், இப்படி ஒருவித வேலையும் இன்றி இருப்பவன் மேல் ஜாதிக்காரன் என்றும், நாட்டின் நலனுக்கென்று பாடுபடுகிறவன் கீழ் ஜாதி, தாழ்ந்த ஜாதி, இழி ஜாதி என்றும் ஆக்கப்பட்டிருக்கிறான். இவ்விதக் கொடுமை எந்த நாட்டிலும் இல்லை. இந் நாட்டில்தான் அப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்கின்றன.
மதம், சாஸ்திரம், புராணம் இவையெல்லாம் என்றைக்கு ஒழிகிறதோ அன்றுதான் நம் மக்களுக்குள்ள சூத்திரப் பட்டம் போகும். எந்தக் கடவுள்கள் பேரால் ஜாதி உண்டாக்கப்பட்டனவோ அந்தக் கடவுள்கள் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும். எவை எவை ஜாதியை நிலைநாட்டுகின்றனவோ அவை ஒழிந்தால் அன்றி ஜாதியும், மதமும் அழியப் போவதில்லை. இப்படிப்பட்ட அடிப்படைகளை அழித்தால்தான் நம்மிழிவு நீங்கி வாழ முடியும்.
ஆனால், இன்றைக்கு என்னைப் போன்று இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கியவர்கள் ஒருவர் கூடக் காண முடியாது. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன என்றாலும், அவை அத்தனையும் பார்ப்பனத் தெருக்களில் பொறுக்கும் எண்ணத்துடன்தான் இருக்கின்றன. எத்தனையோ தேசபக்தர்கள், தியாகிகள், அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஜாதியைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ கவலை கொள்பவர்கள் இல்லை. அவரவர்களுக்கு ஏதாவது தன்னைப் பொறுத்த மட்டில் சுகம் கிடைத்தால் போதும் என்று பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
இப்போதுதான் இதுபோன்று இருக்கிறார்கள் என்றால், முற் காலத்தில் கூட யாரும் தோன்றவில்லை. எத்தனையோ சித்தர்கள், யோகிகள், மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், வெங்காயங்கள் எல்லாம் தோன்றி இருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் ஜாதியைப் பற்றிய கொடுமையை உணர்ந்து கண்டிக்கவே இல்லை.
புத்தரும் வள்ளுவரும் தோன்றினார்கள் என்றால், அவர்களின் கொள்கைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டும், அழிக்கப் பட்டும் போய்விட்டன. வள்ளுவர் என்பவரும் புத்தர் என்பவரும் நம் நாட்டில் இருந்ததாகவே தெரியாதபடி அழித்துவிட்டனர். இப்படி அவர்களைத் தவிர வேறு யாரும் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்கே புராணங்களை ஏற்படுத்தினர்.
மதத்துக்கும் ஜாதிக்கும் புறம்பாக நடந்தால் கடவுள் அவதாரம் எடுத்துக் கொன்று விடுவார் என்ற பயம் காட்டுவதற்குக் கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கட்டுக் கதைகள் எழுதினார்கள்.
இராமாயணமும் அப்படித்தான். இராமாயணத்தில் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்த புத்தபிட்சுக்களைக் கண்டிக்க வேண்டும், துரத்த வேண்டும், அழிக்க வேண்டும் என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. எனவே, இராமாயணம் புத்தரின் காலத்துக்குப் பிறகு எழுதப்பட்ட கதை என்பதுடன், இனி புத்தரைப் போன்று வேறு யாரும் பேசக்கூடாது என்பதற்காகவே இராமாயணம் எழுதப்பட்டது என்றும் கூறலாம். இப்படி ஓரிருவர் தோன்றி பார்ப்பனப் புரட்டுகளை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டனர்.
இன்னமும் முற்காலத்தில் மூவேந்தர்கள் என்பவர்களும் மற்றும் பல பிரக்கியாதி பெற்ற வீரர்களும், சூரர்களும் அயல் நாடுகளில் சென்று கூட வெற்றி கொண்ட தமிழ் மன்னர்களும், இமயம் கண்ட வீரஅரசர்களும் இருந்ததாகச் சரித்திரத்தின் மூலம் காணுகிறோமே அப்படிப்பட்ட அரசர்களின் புத்தியும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது.
இன்றைக்குள்ள கோயில்களும், மடாலயங்களும் அந்த மூடர்கள் கட்டியவைதான். அவர்களும் பார்ப்பனர்கள் வலையில் சிக்கி இருக்கிறார்கள். எப்படிப்பட்ட வீரனாகவோ, சூரனாகவோ இருந்திருந்தாலும் அப்படிப்பட்ட மன்னாதி மன்னர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் மாய்கையில் எப்படியோ சிக்கிச் சீரழிந்து விட்டார்கள்; அந்த மன்னர்கள் காலத்தில் பொருளை வாரி இறைத்து கோவில்களைக் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பொருளைச் செலவிட்டு கோவில்களைக் கட்டி அதன் மூலம் பார்ப்பனர்கள் வாழும் வகையைத்தான் அமைத்து விட்டுப் போயினர். இதைப் போன்றே எல்லோரும் பார்ப்பனர்களின் புரட்டை அறிந்து கொள்ளாததும் அன்றி பார்ப்பனர்களுக்குச் சாதகமாகவே எதையும் செய்திருக்கின்றனர்.
இது மட்டுமல்ல – இன்றைக்குள்ள படித்தவர்களும், பட்டம் பெற்றவர்களும் கூட அப்படித்தான் இருக்கின்றனர். முற்காலம்தான் பகுத்தறிவற்ற காட்டுமிராண்டிக் காலம் என்றால், இன்றைக்கு ஆராய்ச்சியும் விஞ்ஞானமும் கண்ட இப்படிப்பட்ட காலத்தில் கூட அறிவிழந்திருத்தல் மிகவும் பரிதாபப்படத்தக்கதாகும். அதுவும் சயின்ஸ் படித்த மேனாட்டுப் படிப்புப் படித்தவன் எல்லாம் கூட நம் நாட்டுக் கடவுள்களையும், புராணங்களையும் நம்புகிறேன் என்றால் மிகவும் வெட்கக்கேடானதாகும்.
23.1.1956 இல் புதுக்கோட்டை – அரிமளம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
(`விடுதலை, 5.2.1956).