குரல்

ஆகஸ்ட் 16-31

கல்வி, உழைப்பு, தன்னம்பிக்கையே உயர்வுக்கு வழிவகுக்கும். ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றக்கூடாது. நேர்மறையான அணுகுமுறையை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்.

பெண்கள் ஊக்கத்தைக் கைவிடக்கூடாது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சாதிக்க முடியும். சாதனைகளுக்குப் பணம் முக்கியமல்ல. கல்வியே முக்கியம்.

 

சாரதா நம்பி ஆரூரன், தகவல் ஆணையர், தமிழ்நாடு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் மக்களின் சேவகர்கள். நமது பணியைச் செய்வதற்காக நமது பிரதிநிதிகளாக அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளோம் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். தேர்தல்வரை நமது சேவகர்கள் என்று கூறிவந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நமது எஜமானர்கள் ஆகிவிட்டனரா என்ன?

பதவியில் இருக்கும் பிரதமரை அவர் பதவி இழந்த பின்னர்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் ஒரு பிரதமர் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அவர் ஊழல் செய்தால் அவரை அத்தனைக் காலமும் விசாரிக்க முடியாது. அதற்காக அவர் பதவி இழக்கும்வரை காத்திருக்க வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே, அண்மையில் ஓய்வு பெற்ற   கர்நாடக மாநில லோக் அயுக்தா நீதிபதி

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்தும் 77 சதவிகித மக்கள் ரூ. 20கூட செலவிட முடியாத நிலையிலும் 55 சதவிகித பெண்கள் கஷ்டநிலையிலும் 44 சதவிகித குழந்தைகள் ஆரோக்கியம் அற்றவர்களாகவும் 13 கோடி இளைஞர்கள் வேலையில்லாமலும் 45 சதவிகித மக்கள் கல்வியறிவு இல்லாமலும் உள்ளனர்.

பசி, கடன் தொல்லையால் 2.13 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மக்களை வாட்டி வதைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. கருப்புப் பணத்தால் போட்டிப் பொருளாதாரமே நடந்து வருகிறது. லட்சக்கணக்கான கோடி பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இந்தப் பணத்தை மீட்டால் இந்தியாவின் வறுமையை ஒழிக்கலாம்.

மாணிக் சர்கார், முதல் அமைச்சர், திரிபுரா

கேரளாவைப் பொறுத்தவரை, அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீதான அக்கறையும், பயமும் அதிகம். என்னவொரு தேவை, பிரச்சினை என்றாலும், அங்குள்ள எம்.பி.க்கள் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தில் இருக்கிற எம்.பி.க்கள் இதுவரையிலும் எந்தவொரு விஷயத்துக்காகவும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்பியதில்லை. மாறாக, ஏட்டிக்குப் போட்டியாகத்தான் பேசுகின்றனர். தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் இதுவே.

ராஜா சிறீதர், தலைவர், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *