“அப்பா, போகலாம்’’.
அப்பா அரசப்பனை 3அழைத்தாள் மாலதி. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வாங்க பள்ளிக்குச் செல்ல வேண்டும். புறப்படத் தயரானவுடன் தந்தையை அழைத்தாள்.
அரசப்பன் தனது இரு சக்கர வண்டியைக் கிளப்பத் தயரானார்.
“பன்னிரண்டு மணிக்குள் நுழைவுச் சீட்டு வாங்கிடணும்’’. வீட்டுக்குள்ளிலிருந்து மாலதியின் அம்மா கல்யாணியின் குரல் கேட்டது.
பன்னிரண்டு மணிக்குமேல் நல்லநேரம் இல்லையாம். அரசப்பன் சிரித்துக்கொண்டே மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
பாதி வழி சென்றவுடன் சாலையில் பெரும் கூட்டம் காணப்பட்டது. மேற்கொண்டு செல்வதற்கு வழியே இல்லை. பொதுமக்களும் மாணவர்களும் பெருமளவில் கூடியிருந்தனர். அரசப்பன் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு மகளுடன் அங்கே என்ன நடக்கிறது என பார்க்கச் சென்றார். எரிச்சலுடன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியைப் பார்த்தார்.
காவி உடையணிந்த ஒரு சாமியார் ஆடம்பரமான ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒரு பக்கம் தீ எரிந்து கொண்டிருந்தது. யாகம் வளர்க்கிறாராம். அவருக்கு முன் இருந்த மேசையில் நிறைய பேனாக்கள் காணப்பட்டன. மாணவர்களின் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொண்டு காசு கொடுத்து அவைகளை வாங்கினர்.
இதையெல்லாம் கண்ட அரசப்பன் அருகில் இருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்தார்.
“யார் அந்த சாமியார்? பேனா வியாபாரியா? ஏன் இவ்வளவு கூட்டம்?’’ பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டார்.
“என்னய்யா இப்படி கேட்டுட்டீங்க. அவர் பரீட்சைப் பிள்ளையாரோட அருள் பெற்றவர். அவர்கிட்டே விபூதி வாங்கி பூசிக்கிட்டு பேனாவும் வாங்கினா நிச்சயம் பரீட்சையில் பாஸ் பண்ணிடலாம். அதனாலதான் எல்லோரும் அவருகிட்டே பேனா வாங்குறாங்க’’ என்றார் அவர்.
கூட்டத்தை மீண்டும் நோட்டம் விட்டார் அரசப்பன். கூட்டம் குறைவதாகக் காணோம். மேலும் அதிகரிக்கவே செய்தது. ஒரு மாணவன் காசு கொடுத்து வாங்கி வந்த பேனாவை வாங்கிப் பார்த்தார்.
“தம்பி, இந்தப் பேனா எவ்வளவு விலை?’’ அந்த மாணவனிடம் கேட்டார்.
“இருபத்தைந்து ரூபாய்’’ மாணவனை முந்திக்கொண்டு அவன் தந்தை பதில் சொன்னார்.
“இருபத்தைந்தா? பத்து ரூபாய்கூட பொறாதே?’’ என்றார் அரசப்பன்.
“புரியாம பேசாதீங்க. ரூபா முக்கியமில்லை. இது பரீட்சை பிள்ளையாரோட அருள் பெற்ற பேனா. இந்தப் பேனாவால் கையெழுத்துப் போட்டு ஹால் டிக்கட் வாங்கினாலே பாஸ் பண்ணிடலாம். பரீட்சை எழுதினா நிறைய மார்க் வாங்கலாம்.
“அப்படின்னா படிக்காமலேயே பாஸ் பண்ணிடலாமா?’’
“இப்படி குதர்க்கமா பேசாதீங்க. பேனா சீக்ரமா ஆயிடும். பேசாம உங்க மகளுக்கும் பேனா வாங்கிக் குடுங்க’’.
அரசப்பனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இது என்ன பரீட்சைப் பிள்ளையார்? பிஞ்சு உள்ளங்களில் நஞ்சேற்றுவதா? இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டாமா?
“அப்பா, நாமும் பேனா வாங்கலாம்னு யோசிக்கிறீங்களா?’’
பலவாறு யோசித்துக் கொண்டிருந்த தந்தையிடம் மாலதி கேட்டாள்.
“அம்மா, இதையெல்லாம் நீ நம்புகிறாயா?உன் மீது உனக்கு நம்பிக்கையில்லையா?’’
“அதில்லையப்பா! எல்லாரும் வாங்கும்போது நாமும் வாங்கலாம்’னு யோசனை வந்துட்டுதோ என கேட்டேன்’’.
“இல்லை, இல்லை. நிச்சயமா இல்லை’’.
“சரிப்பா. இப்பவே மணி பன்னிரெண்டு ஆயிடுச்சு. அம்மா ஏதாவது சொல்லுவாங்களே’’.
“சரி வா. கூட்டத்தை எப்படியாவது விலக்கிட்டு போயிடலாம்’’.
தந்தையும் மகளும் ஒருவாறு கூட்டத்திலிருந்து விடுபட்டு பள்ளிக்கு வந்து நுழைவுச் சீட்டை வாங்கினர்.
“அப்பா, அம்மா சொன்ன நேரத்திற்கு நாம் நுழைவுச் சீட்டு வாங்கல. அம்மா திட்டுமே’’ என்றாள் மாலதி.
“நீயாக எதுவும் சொல்லாதே. அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியாதா? சொல்வதோடு சரி. மீண்டும் கேட்கத் தோணாது’’
***
தேர்வு நாள் வந்தது. மாலதி தேர்வுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவளது பள்ளித் தோழிகள் பேசினர். ஒரு தோழி நீண்ட நேரம் பேசினாள்.
“மாலதி, நீ சாமியார் கிட்ட பேனா வாங்கினியா? அதால எழுதினா நிச்சயம் பாஸ் ஆயிடுவோமாம். எங்கப்பா எனக்கு மூணு பேனா வாங்கிக் கொடுத்தார். நான் அதை வைச்சுத்தான் தேர்வெழுதப் போறேன். இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா? பேனா வாங்கியதிலிருந்து நான் படிக்கவே இல்லை. பரீட்சைப் பிள்ளையார் என்னை பாஸ் போட்டிடுவார்.’
இப்படிப் பல தொலைபேசி அழைப்புகள். எல்லா தோழிகளுமே சாமியார் விற்ற பேனாக்களைப் பற்றியே பேசினார்கள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கல்யாணி மாலதியிடம் தொலைபேசி அழைப்புகள் பற்றிக் கேட்டார்.
“காலையிலிருந்து யாரடி பேசறது? என்ன பேசறாங்க?’’
“அம்மா, போற வழியில ஒரு சாமியார் பேனா விற்கிறார். அது பரீட்சை பிள்ளையாரோட ஆசி பெற்ற பேனாவாம். என் தோழிகள் எல்லாம் வாங்கி இருக்காங்க. அதை வைச்சிகிட்டுத்தான் தேர்வெழுதப் போறாங்களாம்’’
“அப்படியா! இதை முன்னாடியே சொல்லியிருந்தா என்ன?’’ நான்கூட பேப்பர்ல பார்த்தேன். போற வழியில நீயும் அந்த பேனாவை வாங்கிட்டுப் போ. அதனாலதான் நீ பரீட்சை எழுதணும். தெரிஞ்சுதா?’’ என்ற கல்யாணி அதோடு விடவில்லை. பேனா வாங்க பணமும் கொடுத்தாள்.
மாலதி கிளம்பினாள். அரசப்பன் தன் மகளை அழைத்துக்கொண்டு தேர்வெழுதும் பள்ளியை நோக்கி விரைந்தார்.
“அம்மா என்னம்மா சொன்னாங்க’’ போகும் வழியில் அரசப்பன் கேட்டார்.
“சாமியார்கிட்ட பேனா வாங்கிட்டு போகணுமாம்.’’
“நீ என்னம்மா செய்யப் போறே?’’
“அப்பா, என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க வாங்கிக் கொடுத்த பேனாவே எனக்குப் போதும். அந்தச் சாமியார் இருக்கிற வழியில்கூட நாம் போகவேண்டாம். வேற வழியாப் போங்கப்பா.’’
மகளின் பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் அரசப்பன். அவள் சொன்னபடியே சுற்று வழியாக இருந்தாலும் மாற்று வழியில் சென்று தேர்வு மையத்தை அடைந்தார்.
***
தேர்வு முடிவுகள் வெளியாயின. தோழிகள் மாலதியை தொலைபேசியில் அழைத்தனர். பலர் நேரிலும் வந்தனர். காரணம் மாலதி நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள்.
அவளது தோழிகளுக்கு அரசப்பனும் கல்யாணியும் இனிப்புகளை வழங்கினர். தோழிகள் உற்சாகமாகப் பேசினர்.
“மாலதி, நீ நிறைய மார்க் எடுத்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.’’
“நாங்க அந்தப் பரீட்சைப் பிள்ளையார் சாமியார்கிட்ட பேனா வாங்கிட்டுத்தான் தேர்வு எழுதினோம். ஆனா சரியாக எழுதல. மார்க்கும் ரொம்ப குறைவுதான். சிலபேர் பேனாவை நம்பி சரியாக படிக்காததால தோல்வியும் அடைஞ்சுட்டாங்க.’’
“ஏண்டீ மாலதி, நீயும் அந்த சாமியார்கிட்ட பேனா வாங்கித்தானே தேர்வு எழுதினே?’’
இப்படிக் கேட்ட ஒரு தோழிக்கு மாலதியை முந்திக் கொண்டு கல்யாணி பதில் சொன்னாள்.
“ஆமாம், ஆமாம். நான்தான் பரீட்சை எழுத போகும்போதே சாமியார்கிட்ட பேனா வாங்கி போகச் சொன்னேன். அதனாலதான் பாஸ் பணிணியிருக்கா. நிறைய மார்க்கும் வாங்கியிருக்கா.
நுழைவுச் சீட்டுகூட நல்ல நேரத்தில்தான் வாங்கினா.’’
மாலதி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். உண்மையை சொல்லிவிடலாம் என யோசித்த அவள் தனது தந்தையை நோக்கினாள். அரசப்பனும் சொல்லிவிடு என்பதைப் போல் தலையசைத்தார்.
“அம்மா, நான் நுழைவுச் சீட்டையும் நல்ல நேரத்தில் வாங்கலே. சாமியார்கிட்ட பேனாவும் வாங்கலே.’’
“என்னடி சொல்ற?’’ அம்மா அலறினார்.
“ஆமாம்மா. நாள்தோறும் செய்தித்தாள்களில் சாமியார்கள் செய்யும் அக்கிரமங்களை நானும் படிச்சிட்டுத்தான் வர்றேன். தன்னம்பிக்கை இல்லாதவங்கதான் இதுபோன்ற சாமியார்கிட்ட போய்ப் பேனா கொடு, பென்சில் கொடுன்னு கேட்பாங்க. நான் உழைத்துப் படித்தேன். நிறைய மார்க் வாங்கினேன். எனது வெற்றிக்கு நீயும், அப்பாவும், எனது ஆசிரியர்களும் தானம்மா காரணம். அந்தப் பேனா வியாபாரி போன்ற சாமியார்களை புறக்கணித்து விரட்டினால்தான் நாடு உருப்படும். நாமும் உருப்படுவோம்.’’ என்று சொல்லி முடித்தாள் மாலதி.
கல்யாணியும், மாலதியின் தோழிகளும் உண்மையை உணர்ந்து அவள் கூறியதை ஆமோதித்தனர்.
– ஆறு. கலைச்செல்வன்