“இந்து மதம் என்னும் நரகத்தைவிட்டு நான் வெளியேறிவிட்டேன்’’
– அண்ணல் அம்பேத்கர்
மாற்றுக் கருத்து கொண்டிருப்போரைத் தன் வயப்படுத்த இந்து சாஸ்திரங்ககள் கூறும் வழிகள் சாம, பேத, தான, தண்ட என்பவை.
அனைவர்க்கும் தெரிந்தவையே! சாம என்றால் சமாதானமாகப் போய்விடல். பேத என்றால் எதிரிகளிடையே பிளவுகளை உண்டாக்கிப் பேதப்படுத்தி, ஒருவர்க்கொருவர் விரோதம் பாராட்டி அழிந்துபோகச் செய்தல். தான என்றால் எதிர்க் கருத்தாளர்களைப் பணம் கொடுத்து, விலைக்கு வாங்கி வீழ்த்திடுதல். தண்ட என்றால் இறுதியாக வன்முறையைக் கையாண்டு எதிர்க்கருத்தாளர்களை அழித்-தொழித்தல். தண்டம் என்றால் தடி!
சாஸ்திரம் கூறும் முறைகளுக்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவாரங்கள் கையாளும் முறைகள் மூன்றுதான்!
1. திரஸ்கரித்தல்,
2. புருஸ்கரித்தல்,
3. பரிஸ்கரித்தல் என்ற மூன்று முறைகள் மட்டுமே!
திரஸ்கரித்தல் என்றால் எதிரிகளை அலட்சியப்படுத்தி ஒதுக்குதல். புருஸ்கரித்தல் என்றால் எதிர்க் கருத்தாளர்க்குப் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குதல். பரிஸ்கரித்தல் என்றால் அவர்களது தத்துவங்களை ஏற்பதுபோல் நடித்து, திரிபுவாதம் செய்து செரித்துக் கொள்ளுதல்.
இந்த அணுகுமுறை மூலம் இவர்களால் கண்டுகொள்ளப்படாத பகத்சிங் எனும் நாத்திக விடுதலை வீரரை சர்தார் என்றும் ஷாஹித் என்றும் பேசியும் எழுதியும் செரிமானம் செய்ய முயன்றனர். தோற்றனர்.
காந்தியார் தேசப்பிதா அல்ல என்று பேசியவர்கள் காந்தியாரைக் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்து ரூபாய்த் தாளில் படம் போட்டு ஏமாற்றுகிற வேலையில் இறங்கிவிட்டனர். அவர்களின் உள்மன உந்துதலின்படி, வல்லபாய் பட்டேலைத் தூக்கிப் பிடிக்கின்றனர். உலகின் உயரமான உலோகக் சிலையைச் செய்கின்றனர்.
இந்தியாவில் உருவாக்குக என்று ஊருக்கு உபதேசித்து விட்டு, உலகச் சாதனை எனப்படும் பட்டேல் சிலையை சீன நாட்டில் செய்யச் சொல்லிப் பணம் கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய இரட்டை வேடம் பண்டு தொட்டுப் பார்ப்பனர் கையாள்வது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான்.
அம்மாதிரியே இவர்கள் தற்போது கையில் எடுத்து ஏமாற்ற முயல்வது பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை! அண்ணலின் 125ஆம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று விளம்பரப்படுத்தினார்கள். அவரது தத்துவங்களைத் திரிபுவாதம் செய்கிறார்கள். அவரை இந்துமதஸ்தர் என்றும் இந்துத்வர் என்றும் பொய்த் தோற்றம் புனைந்து காட்டுகின்றனர்! உண்மை என்ன?
“இந்து சமுதாயம் ஜாதி அடிப்படையில் அமைந்ததாகிவிட்டது. ஜாதி அமைப்பு சாஸ்திரங்களால் தெரிந்தே உருவாக்கப்பட்டுள்ளது என்ற வலுவான நம்பிக்கை வைதீக இந்துக்களிடையே நிலவுகிறது… சாஸ்திரங்களால் உருவானது ஒருபோதும் தவறாக இருக்க முடியாது என்னும் நம்பிக்கை உள்ளது.
இந்த நம்பிக்கைக்கு எதிராகத்தான் நான் இவ்வளவு தூரம் பேசி வந்திருக்கிறேன்’’ என்று டாக்டர் அம்பேத்கர் 9_5_1916இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தளித்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (அம்பேத்கர் தொகுப்பு நூல் வரிசை _ பாகம் 1 _ பக்கம் 24 _ இந்திய அரசு வெளியீடு) கவனிக்கவும் _ ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925இல் தான் உருவாக்கப்பட்டது. அதற்குச் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு டாக்டர் அம்பேத்கர் பேசியது இது. அவர் எப்படி இந்துத்துவ அம்பேத்கர்?
2017 ஏப்ரலில் நடந்த அன்னாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். பிரதமர் நரேந்திர தாமோதர் தாஸ்மோடி டாக்டர் அம்பேத்கரை நீலகண்ட சிவனோடு ஒப்பிட்டுப் பேசினார்.
“பால்கடலைக் கடைந்தபோது வந்த விஷத்தை உட்கொண்டு அடுத்தவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தவர் சிவபெருமான். அதைப்போல் தன் வாழ்நாளில் போராட்டங்கள் அவமானங்களைச் சந்தித்த போதும், அம்பேத்கரின் அரசியல் பயணத்திலும் அவர் இயற்றிய அரசியல் சட்டத்திலும் எந்த இடத்திலும் ஒரு சிறு கசப்புணர்வோ, பழிவாங்கும் எண்ணமோ இருந்ததில்லை’’ என்று பேசியிருக்கிறார்.
இது உண்மை! என்றாலும், சொன்னவர் அந்தரங்க சுத்தியோடு கூறினாரா? அம்பேத்கர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர், அவரைத் தெய்வமாக வழிபடுவது தவறு, அரசமைப்புச் சட்டமே அவர் எழுதியதல்ல, ஒரு ராவ் எழுதித்தந்ததை அம்பேத்கர் திருத்திப் படித்தார், என்று ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்த அருண்ஷோரி எனும் பஞ்சாப் பார்ப்பனர் எழுதினாரே!’’
அன்று அண்ணா ஆரிய மாயையில் எழுதியது போலத்தானே ஆரிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சும் இயங்கிக் காட்சி அளிக்கிறது?
1935ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாள் மராட்டிய மாநிலம் இயோலாவில் பேசும்போது “தான் இந்துவாகப் பிறந்த தாழ்த்தப்பட்டவன் எனும் பழிச் சொல்லோடிருப்பது எனக்கு ஏற்பட்ட கெட்ட வாய்ப்பு. அது என் தவறல்ல.
என்றாலும் விருப்பத்திற்கு உட்பட்டது’’ என்று பிரகடனப்படுத்தினார். 20 ஆண்டுகள் கழித்து 1956 அக்டோபர் 14இல் இந்து மதத்தை விட்டு வெளியேறி பவுத்தக் கொள்கைளை ஏற்று பவுத்தரானார். சொன்னபடியே செய்து காட்டினார்.
இந்துமதத்தை விட்டொழித்த நாக்பூரில்தான் இந்துமத வெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பிறந்தது. அதன் தலைமையிடமும் அங்கேதான். அங்கேதான் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படமும் ஆர்.எஸ்.எஸ்.
நிறுவனத் தலைவர் ஹெக்டேவரின் படமும் ஒருசேர வைக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் ஊர்வலமாக எடுத்துக் செல்லப்பட்டது, என்ன கொடுமை?
ஆர்.எஸ்.எஸ்.காரரான கிருஷ்ணகோபால் என்பவர் இருவர்க்கிடையே ஆழ்ந்த நட்பு உண்டு என்று புளுகினதையும் அதனைத் தாழ்த்தப்பட்ட அறிஞர்கள் கடுமையாகக் கண்டித்ததையும் அவுட்லுக் வார ஏடு 18.4.2016இல் வெளியிட்டுள்ளது. ஆதாரம் ஏதும் இல்லாமல் / தராமல் கிருஷ்ணகோபால் பேசியுள்ளது அம்பலப்பட்டது. இதுதான் அவர்களின் பாணி.
21.3.2016இல் பிரதமர் மோடி தன்னை அம்பேத்கர் பக்தன் என்று தெரிவித்துக் கொண்டார். அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவை புதுடில்லி விஞ்ஞான பவனில் நிகழ்த்தும்போது இப்படித் தம்மை வர்ணித்துக் கொண்டார்.
இதனை வியந்து பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம். எதையும் புத்திபூர்வமாக அணுகாமல் பக்திபூர்வமாக அணுகும் ஆர்.எஸ்.எஸ். மனோபாவம் இது. பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னதை நினைத்துக் கொள்ள வேண்டும்.
அம்பேத்கர் நினைவு மண்டபமும் லண்டனில் அவர் வசித்த வீட்டை வாங்கி நினைவுச் சின்னமாகப் போற்றுவது முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவுகள். வரைபடங்களைத் தயாரித்தும் கட்டடத்தை விலைபேசி (பத்திரம் எழுதிப் பதிவு செய்ய) முடித்ததும் காங்கிரஸ் தலைமையிலான அரசு. ஆனால், முடியும் தறுவாயில் மோடி இவற்றிற்குப் பாத்தியம் கொண்டாடுகிறார் என்பதை காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் பொறுப்பாளர் கே.ராஜூ தெரிவித்திருக்கிறார்.
முறையற்ற வழிகளில் அம்பேத்கருடன் சொந்தம் பாராட்டும் ஆர்.எஸ்.எஸ்.சின் போக்குக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
இந்து மதத்திலிருந்து தம்மைத் துண்டித்துக் கொண்டு பவுத்தம் தழுவிய மறுநாள் அம்பேத்கர் பேசிய சொற்கள் மக்கள் மனதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. “இந்து மதத்தில் பிறந்துவிட்ட நான் இந்துவாகச் சாகமாட்டேன்.
நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அளவுகடந்த மகிழ்ச்சியில் உள்ளேன். (இந்துமதம் எனும்) நரகத்தை விட்டு நான் வெளியேறி விட்டேன். (பவுத்தம் தழுவியதால்) நான் அப்படித்தான் உணர்கிறேன்’’ என்று பேசினார்.
இதனை அறியாதவர்களா ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள்? பிறகு ஏன் அவரை இந்து மதத்தோடு பிணைத்தே பேசுகிறார்கள்? அப்படிப் பேசுவதால் _ அவரோடு இணைந்து இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டால் _ அவர்களுக்கு ஆதாயம்! அதனால் நடிக்கிறார்கள்!
தாழ்த்தப்பட்டோரை ஏமாற்றுவதற்காக (தமிழ்நாட்டில்) சமபந்தி போஜனம் நடத்துவது போல, அவர்களும் “சமராஸ்தா போஜ்’’ நடத்துகிறார்கள். உயர்ஜாதிக்காரர் வீட்டில் கிச்சடி சாப்பிட அழைக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 16.2% இந்திய அரசின் மொத்த வருமானத்தில் அவர்களின் நலனுக்காகச் செலவு செய்யப்பட வேண்டியதும் 16.2% அளவுதானே! அதன்படி இவர்கள் ஒதுக்க வேண்டியது 82 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் 2016-17இல் ஒதுக்கிய தொகை 38,833 கோடி ரூபாய் மட்டுமே.
யாரை ஏமாற்றுகிறார்கள் அம்பேத்கர் விழா கொண்டாடி? கிலுகிலுப்பை காட்டுகிறார்கள், குழந்தைகளை ஏமாற்ற! பஸ்வான்கள், அத்வாலேக்கள், கிருஷ்ணசாமிகள் போன்ற பதவி ஆசைக்காரர்கள் ஏமாறலாம். பெரும்பான்மையோர் ரோஹித் வெமுலாக்கள், கன்னய்ய குமார்கள் என்பது மெய்! அது மெய்ப்பிக்கப்படும்!
(கேள்விகள் தொடரும்)
சு. அறிவுக்கரசு