கலைஞரை ஆதரிப்பது தமிழர் கடமை!

ஜூன் 01-15

30, 40 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் தலைமை ஏற்று நடத்தியவர்களுக்கும் இன்று தலைமை ஏற்று உள்ள கலைஞர் அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. கலைஞர் அவர்களின் ஆட்சியைப் போல எந்த அமைச்சரும் ஆட்சி செய்யவில்லை. மற்ற முதல்வர்கள் செய்த காரியங்களையும் கலைஞர் அவர்கள் செய்து இருக்கும் காரியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் இருக்கும்.

1937, 1938இல் நடைபெற்ற மந்திரி சபையின் செயல்கள், காரியங்கள் இன்றைய இளைஞர்-களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. வயது ஆனவர்களுக்குச் சிலருக்காவது தெரியும்.

1938இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆச்சாரியார் நமது மக்களுடைய எண்ணத்துக்கு மாறாக அந்நிய மொழியான இந்தியை நம் மக்களிடையே கட்டாயமாகப் புகுத்தினார். எதிர்த்தவர்கள் 2500, 3000 பேர்களைச் சிறையில் போட்டார். நமது மக்கள் கல்வி அறிவு பெறக்-கூடாது என்ற உள் எண்ணம் காரணமாகக் கல்விக்குப் பணம் இல்லை என்று கூறி 2500 பள்ளிகளை மூடினார்.

அடுத்து 1952இல் ஜனநாயகத்தின் பேரால் பதவிக்கு வந்த ஆச்சாரியார் 6000 பள்ளிகளை மூடிப்போட்டு அரைநேரம்தான் படிப்பு _ மறுநேரம் சாதித் தொழில் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

ஆனால், நமது கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள் ஆகியவர்களை மனதில் கொண்டு அனேக நன்மைகளைச் செய்து வருகின்றார். குடி இருக்க மனை, வீடு முதலியனவும் ஏற்பாடு செய்து வருகின்றார்.

இந்தியாவிலேயே எந்த மாநில அரசாங்கமோ மத்திய ஆட்சியோ செய்ய முன்வராத காரியமான தொழிலாளர்களைத் தொழில்கள் லாபத்தில் பங்கும், நிர்வாகத்தில் பங்கும், அளித்து அவர்களை மேன்மையுறச் செய்ய முற்பட்டு உள்ளார். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முதலில் இதைச் செய்து உள்ளார். பிறகு மற்ற துறைகளுக்கும் செய்ய இருக்கின்றார்.

மற்றைய ஆட்சி எல்லாம் தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடு இருக்கவே காரியம் ஆற்றுகின்றன. ஆனால் கலைஞர் அவர்கள்தான் இந்தப் பேதத்தை மாற்றக் காரியம் ஆற்றுகின்றார்.

எதிரிகள் பொறாமை உணர்ச்சியினால் இதனைப் பாராட்டாததோடு தூற்றியும் திரிகின்றார்கள். உண்மையிலேயே சாதி ஒழிந்த சமுதாயமாக நாடு ஆகவேண்டும் என்ற கருத்தில்தான் கலைஞர் எல்லா மக்களும் கோயிலுக்குள் போகலாம், பூசை பண்ணலாம் என்ற உத்தரவு போட்டார்.

ஒரு நாளும் இப்படிப்பட்ட திறமையான ஆட்சி, வலிமையான ஆட்சி அதுவும் தமிழனே தமிழர் நலங்கருதி ஆளக்கூடிய ஆட்சி நடந்ததே இல்லை.

இன்றைய நிலையில் கலைஞர் அவர்களே ஆட்சிப் பொறுப்பில் இல்லாது வேறு யார் இருந்தாலும்கூட இவ்வளவு திறமையாக எதிரிகளைச் சமாளித்துக் கொண்டு காரியம் ஆற்றிவர முடியாது.

இப்படிபபட்ட முதல்வரை நாம் பெற்று இருப்பது ஒரு நல்ல வாய்ப்பு என்று மக்கள் உணர வேண்டும். இவ்வளவு அரிய பெரிய காரியங்களை எல்லாம் நமது நலன் கருதிச் செய்கின்ற ஆட்சியினை ஆதரிக்க வேண்டும்.

தந்தை பெரியாரவர்கள் 6.4.1969 அன்று உள்ளிக்கோட்டையில் குறிப்பிட்டதாவது:-_

“ஒரு படத்தைத் திறந்து வைப்பது என்பது யாருடைய படத்தைத் திறந்து வைக்கின்றோமோ அவரது பெருமையை மட்டும் எடுத்துச் சொல்வதற்காக மட்டுமல்ல; அவருடைய தொண்டு கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும், மக்கள் அவர் தொண்டினைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென் பதற்காவுமேயாகும். மேலும் அவரது கொள்கையைப் பரப்ப வேண்டும்; அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

திரு.கருணாநிதி அவர்கள் பாராட்டுதலுக் குரியவர். அவரது தொண்டை, கொள்கையைப் பின்பற்றி மற்றவர்களும் நடக்க வேண்டும். இதற்குமுன் நமது நாட்டில் பலர் முதலமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள் என்றாலும் நமக்குச் சம்பந்தப்பட்ட முதலமைச்சர் என்று யாரும் இல்லை. நமக்காக என்று ஒரு ஸ்தாபனமும் இல்லை. இதுவரை இருந்த ஸ்தாபனங்கள் அத்தனையும் பழமை _ மதம் _ சாதி _ சாஸ்திரம் _ அடிப்படை தர்மங்கள் இவைகளைக் காப்பாற்றும் ஸ்தாபனங்-களாகவே இருந்தன. இந்த ஸ்தாபனம் வருகிறவரை இருந்த ஸ்தாபனங்கள் யாவும் இந்து மதத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனங்-களேயாகும்.

இப்போது இருக்கிற இந்த ஸ்தாபனத்திற்கு முன் இருந்த காங்கிரஸ் ஸ்தாபனமாகவே இருந்தது என்பதோடு, அதன் கொள்கை மதம் _ சாதி _ சாஸ்திரம் _ அடிப்படை தர்மம் ஆகியவைகளைக் காப்பாற்றுவதே யாகும். அதனால்தான் திராவிடர் கழகமானது காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டுமென்று பாடுபட்டு வந்தது. காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருக்-கின்ற யார் வாயிலும் சாதி ஒழிய வேண்டுமென்று ஒரு வார்த்தை வராது. சாதி ஒழிய வேண்டும்.

சாதி இல்லை என்கின்ற கருத்துடைய எனது மதிப்பிற்குரிய காமராசர் அவர்களே சாதி ஒழிய வேண்டுமென்று வாயால் சொல்ல முடியாதே, சொன்னால் காங்கிரசிலிருக்க முடியாது.

திராவிடர் கழகத்திலிருந்து அதைவிடத் தீவிரமாகத் தொண்டாற்ற வேண்டுமென்கின்ற கருத்தில் அண்ணா, கலைஞர், நாவலர் முதலியவர்கள் பிரிந்து சென்று தி.மு.கழகத்தினை ஏற்படுத்தினார்கள். கலைஞர் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் தொண்டராக இருந்து தனது தொண்டினால் தலைவரானவர் என்பதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவிற்கு அடுத்தபடியாக இருந்தவர் கலைஞராவார். மற்ற பேர் யார் உரிமை கொண்டாடினாலும் அறிவோடு சிந்தித்தால் அவர்தான் அண்ணாவுக்கு அடுத்தவராக இருந்தார்.

அண்ணா தலைவராக இருந்தாரே தவிர காரியம் செய்யும் காரியஸ்தராக, செயல்காரராக இருந்தவர் கலைஞரவர்களே ஆவார்கள்.

கலைஞரவர்கள் ஆட்சியில் தமிழர்களுக்குத்-தான் முதலிடமளிக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட உத்யோகங்கள் யாவும் தமிழர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழர் உணர்ச்சியோடு நடந்து கொள்கிற ஆட்சியாக இருக்கிறது. இதனால், பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென்று கருதுகின்றனர்.

கலைஞர் ஆட்சியை ஆதரிப்பது தமிழர் கடமை

கலைஞர் அறிவாற்றல் உள்ளவர். எப்படிப்-பட்ட காரியத்தையும் சமாளிக்கக் கூடியவர். நிர்வாகத் திறமை மிக்கவர். அண்ணா அவர்களைவிட காரியங்களைத் திறமையாகச் செய்யக்கூடியவர். கலைஞரவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டுமென்பதில் பலவற்றை விட்டுக் கொடுத்திருக்கின்றார். அவரது ஆட்சியினைக் காப்பாற்ற வேண்டியது ஆதரவு கொடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை என்று கருதி இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மனிதப் பண்புக்கு வழிகாட்டக் கூடிய ஆட்சி

இன்றைய ஆட்சி மனிதப் பண்புக்கு வழிகாட்டக் கூடியதாக அமைந்திருக்கின்றது. இன்றைய வளர்ச்சிக்கேற்ற வாய்ப்புள்ள இந்த ஆட்சியை ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும். இதை நான் கட்சிக்காகச் சொல்லவில்லை.

மனித சமுதாயத்திற்காகத்தான் சொல்கிறேன். இவர்களை ஆதரிப்பதால் நான் ஒன்றும் பலன் பெறவோ எனது கட்சிக்குப் பலன் ஏற்படுமென்றோ சொல்லவில்லை. இவர்களால் நம் இழிவு ஓரளவாவது நீக்கப்படும் என்கின்ற நம்பிக்கையிலேயே சொல்கின்றேன்.

சொந்த அண்ணன், தம்பி _ கணவன் மனைவிக்குள்ளேயே கருத்து வேற்றுமை இருப்பது இயற்கை என்றிருக்கும்போது கட்சிக்குள் கருத்து வேற்றுமை இருப்பது ஒன்றும் பிரமாதமானதல்ல. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதற்குள் கருத்து வேற்றுமை இருக்கவே செய்யும்.

பதவி, பெருமை என்று வரும்போது கருத்து வேறுபாடு ஏற்படுவது இயற்கையேயாகும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நம் கடமை இந்த ஆட்சியை ஆதரிப்பது என்பதாகக் கொண்டு நம் மக்கள் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

– தந்தை பெரியார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *