சிலருக்கு சொல்புத்தி இருக்காது, சிலருக்கு சுயபுத்தி இருக்காது. சிலருக்கு இரண்டுமே இருக்காது. இரண்டுமே இல்லாத ஒருவர் கோயில் கோயிலாக சென்றும் தன்னுடைய வயிற்றுவலி குணமடையாமல் மருத்துவர் மூலம் குணமடைகிறார். அப்படி குணமடைந்ததற்குக் காரணம் மருத்துவர் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் கடவுளின் கருணைதான் காரணம் என்று எண்ணி, வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் விபத்தில் சிக்குகிறார். மீண்டும் மருத்துவமனை _ மருத்துவம் _ குணமடைகிறார். இரண்டாம் முறையும் மருத்துவரைப் போற்றாமல் கடவுளைப் போற்றுகிறார். அவர் எப்படித் திருந்தினார் என்பதுதான் இந்தக் குறும்படத்தின் கதை. இதன் தலைப்பு ‘யாமிருக்க பயமேன்?-’ _ எழுதி இயக்கியவர் ஓய்வுபெற்ற நீதிபதி பொ.நடராசன். மதுரை பெரியார் கலைக்குழு தயாரிப்பில் வெளியிடப்பட்டட இக்குறும்படம் 14:11 நிமிடம் ஓடுகிறது. எடுத்துக்கொண்ட கருத்துக்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.
– உடுமலை
Face App
நமது ஒளிப்படங்களை பலவிதங்களில் வடிவமைத்துப் பார்த்து ரசிக்க இச்செயலி பயன்படுகிறது.
இதில் நமது ஒளிப்படத்தை பதிவேற்றம் செய்து, நமக்குப் பிடித்த வகையில் மாற்றம் செய்து பார்க்கலாம்.
ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றி ரசிக்கலாம். நம்முடைய முகத்தையே சிறு வயது தோற்றம், நடுத்தர வயது மற்றும், முதிர்வயது தோற்றம் என்று விதவிதமாக வடிவமைத்துக் காட்டுகிறது.
சிரிக்காத முகத்தையும் சிரிக்க வைத்துப் பார்க்கும் இந்தச் செயலியின் உதவியுடன், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் படத்தை சிரிக்க வைத்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இது எவ்வளவு ரசிக்கப்படுகிறது என்பது புரியும்.
இந்தச் செயலி தற்போது பரபரப்புடன் பரவி வருகிறது. இதனை நீங்களும் பயன்படுத்தி மகிழுங்கள்.
– டார்வின் தமிழ்