மென்பானம் என்பது எது?
மென்பானம் (Soft drinks) என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்’ எனும் சர்க்கரையும் கார்பன்_டை_ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை. இதைக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை. இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை.
மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள்; இனிப்பை நிலைப்படுத்துவதற்காக, சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்; கேராமல் மற்றும் பீட்டா கரோட்டீனை வண்ணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர இன்னும் பல செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தப் பயன்படும் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருகிறது.
இளைஞர்களுக்கும் சர்க்கரை நோய்
மென்பானங்களில் உள்ள ‘ஃபிரக்டோஸ் கார்ன் சிரப்’ எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. அப்போது ரத்தச் சர்க்கரை அதிகரிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளை பாதிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கணையத்திலிருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது. மென்பானங்களை அளவில்லாமல் அடிக்கடி குடிப்போருக்கு இவ்வாறு இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது. இதன் விளைவால், இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. நம் நாட்டில் ‘டைப்_2’ சர்க்கரை நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்கு மென்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு.
குழந்தைகளுக்கு உடற்பருமன்
தினமும் மென்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல்பருமனால் பாதிக்கப்படுகின்றனர். மென்பானம் குடிக்கும் போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது அல்லவா? இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாக சேமிக்கப்படும் கொழுப்பு உடற் பருமனை உண்டாக்குகிறது. இந்த உடற்பருமன் இளம் பருவத்திலேயே இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்தியாவில் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும், குண்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கும் மென் பானங்களே முக்கியக் காரணம் என்பதை மத்திய சுகாதாரத்துறையே ஒப்புக் கொண்டுள்ளது.
பற்களின் ஆயுள் குறையும்
மென்பானத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கின்ற எனாமலை மிக விரைவாக அரித்து விடுவதால், பற்சிதைவு உண்டாகிறது. பல்லின் ஆயுள் குறைகிறது. சீக்கிரமே பற்கள் விழுந்துவிடுகின்றன. பாஸ்பாரிக் அமிலத்தால் மற்றொரு கெடுதலும் உண்டு. இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எலும்பில் உள்ள கால்சியத்தைச் சிதைத்துவிடுகிறது. இதனால் கால்சியம் உடலில் குறைந்துவிடுகிறது. எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிக அவசியம். பாஸ்பாரிக் அமிலம் கால்சியத்தைக் குறைத்துவிடுவதால், எலும்பின் அடர்த்தி குறைகிறது. எலும்புச்சிதைவு நோய் வருகிறது. வயதானவர்கள் லேசாக தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடுவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். மேலும், மென்பானங்கள் மூட்டுவலிப் பிரச்சினையை மிகச் சிறிய வயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன.
சிறுநீரகக் கற்கள் உருவாகும்
அடிக்கடி மென்பானம் அருந்துவது சிறுநீரகப் பிரச்சினையை இரு மடங்கு அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் சிறுநீரகம் செயலிழக்கவும் மென்பானம் ஒரு காரணமாகிறது. கோலா பானங்களுக்கு கறுப்பு வண்ணம் தருகின்ற ‘கோராமல்’ எனும் வேதிப்பொருள் புற்று நோயை உண்டாக்குகிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப் பட்டுள்ளது. மென்பானத்தில் உள்ள காஃபீன் ரத்த அழுத்தத்தை அதிகரித்து நரம்புத் தளர்ச்சிக்கும் இதயநோய்க்கும் வழிவகுக்கிறது.
அணிவகுக்கும் ஆபத்துகள்
மென்பானங்கள் நீண்டகாலம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பொட்டாசியம் பென்சோவேட், சோடியம் சைக்ளோமேட் போன்றவற்றையும், திண்மையூட்டுவதற்காக பெக்டின், அல்ஜினேட், கராஜென், ஃபிரக்டோஒலிகோ சாக்கரைடு, இனுலின் போன்ற பல வேதிப்பொருள்களையும் சேர்க்கிறார்கள். இவை அனைத்துமே நம் உடல் நலனைக் கெடுக்கக்கூடியவை என்று தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
மென்பானங்களைத் தொடர்ந்து அருந்தும் போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து, இரைப்பைப் புண், குடற்புண் ஏற்படும். பசியின்மை, புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்றுவலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவிடும்.
வெப்பத்தை அதிகப்படுத்தும்
மென்பானங்கள் உடலைக் குளிர்ச்சிடையச் செய்யும் என்று நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறு. அதிகக் குளிர்ச்சியானது ரத்த நாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கி விடுகின்றது. இதன் விளைவால் தாகம் அதிகரிக்கிறது. தாகம் தணியாது!
செயற்கைப் பழச்சாறுகள்
பழத்தை அப்படியே நேரடியாகச் சாப்பிடும்போது, பழத்தின் சத்துக்களோடு, அதன் தோலில் உள்ள நார்ச்சத்தும் கிடைக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுப்பதோடு, சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது. பழச்சாறுகளைத் தயாரிக்கும்போது தோலை நீக்கிவிடுவதால் அவற்றில் நார்ச்சத்து இல்லாமல் போகிறது செயற்கைப் பழச் சாறுகளில். பழத்தின் சத்துகள் எதுவும் இருப்பதில்லை. பழத்தின் நிறம், மணம், சுவை மட்டுமே இருக்கும். கார்போஹைட்ரேட் மிகுந்த சர்க்கரையினாலும் சில வேதிப் பொருள் களினாலும் இது தயாரிக்கப்படுகிறது. இது பொதுவான உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்ப தோடல்லாமல், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகவே ஆகாது.
போலிகள், கவனம்
கோடைக்காலத்தில் விற்கப்படும் பல மென்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் போலி நிறுவனங்களின் தயாரிப்புகளாகத்தான் இருக்கின்றன. இவற்றைக் குடிக்கும்போது, செரிமானக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் தொல்லை கொடுக்கும்.
தாகம் தணிக்க என்ன செய்வது?
இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, கோடைக்காலத்தில் தினமும் மூன்றிலிருந்து அய்ந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பாட்டில் தண்ணீரைவிட கொதிக்கக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீர்தான் சுகாதாரமானது. இதைக் குளிரக்குளிர குடிக்க விரும்புவர்கள் ஃபிரிட்ஜில் வைத்துக் குடிப்பதைவிட மண்பானையில் ஊற்றி வைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியம். தண்ணீருக்கு அடுத்து தாகம் தணிக்க உதவுவது இளநீர், நீர்மோர், சர்பத், பானகம் மற்றும் பதநீர், இயற்கைப் பழங்கள் மற்றும் பழச்சாறுகளும் இதற்கு உதவும். தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடலாம். எலுமிச்சைப் பழச்சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
இளநீர் நல்லது
கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த பானம்; சத்தான பானம்; சுத்தமான பானம். இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும். மாறாக, இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில மணிநேரங்கள் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவகுணங்கள் மாறிவிடும். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீர் இழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.