சென்னை கிறித்தவக் கல்லூரியின் சமூக சேவைப் பிரிவைச் சேர்ந்த மாணவர் கே.சதீஷ் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். இவருடைய வயதோ வெறும் 22தான். புறக் கவர்ச்சிகளிலும், பாலினக் குறும்புகளிலும் ஈடுபட்டு விளையாட்டாகப் பொழுதைக் கழிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இடையே இவர் ஒரு அற்புதம் மட்டுமல்ல! ஆக்கப்பூர்வ செயல்திறனுடைய ஒரு சமூக விஞ்ஞானி நான் என்பதை மிக அடக்கமாகக் காட்டியுள்ளார். கண்ணகி நகர் என்றாலே துப்புரவாளர்கள் நிறைந்த இடம் என்பதுதான் அனைவருக்கும் நினைவிலாடும். ஆம். அந்த நகரத்தில் அம்மக்களுக்கு தன்மான உணர்வுப் பாடமெடுத்து (Manual Scavenging) மலக்குழிகளுள்ளும், சாக்கடைகளிலும் நேரடியாக இறங்கி துப்புரவு செய்யும் பணியின்று விடுபட வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறி, அவர்களை சமூகத்தில் நல்நிலையில் வாழத் தயார்படுத்துவதற்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, 20 நபர்களைத் தயார்படுத்தியதில் தற்போது 5 நபர்கள் முன்வந்து, நாங்கள் இந்த வேலையைச் செய்வதில்லையென தன்முனைப்பு முடிவினை பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முறையாக எழுத்துமூலம் அறிவித்து விட்டனர். அதனால் மாநகராட்சி விதிகளின் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகையாக ரூ.40,000மும் மாதாமாதம் ரூ.7,000 ஓய்வூதியமாகவும் கிடைக்கும். இதன்மூலம் தொழில்சார் கேடுகளாக அவர்கள் சந்தித்து வந்த சமூகப் புறக்கணிபினின்றும், நலக் கேடுகளிலிருந்தும் விடுபடுவர்.
பல தலைவர்கள்(Manual Scavenging) மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை மாற்றப்பட வேண்டும் என்று அரசியல் ஆதாயத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்து வரும் நிலையில் 22 வயது மாணவரின் செயலூக்கமும், செயல்திறனும் பாராட்டி, ஊக்குவிக்கப்பட வேண்டியதோடு பின்பற்றப்பட வேண்டியது-மாகும்!
தகவல்: டெகான் கிரானிகல், 25-04-2017